சரண்யா சம்பத் பரதநாட்டிய அரங்கேற்றம்
செப்டம்பர் 5, 2009 அன்று சான் டியேகோ நகரத்தின் யூத சமுதாய அரங்கத்தில் நிருத்யாலயா டான்ஸ் அகாடமி மாணவி சரண்யா சம்பத்தின் பரத நாட்டிய அரங்கேற்றம் நடைபெற்றது. குரு சுபாஷினி வெங்கடேஷ் அவர்களின் மாணவி இவர்.

சுபாஷினி வெங்கடேஷ் (நட்டுவாங்கம்), சுனந்தா சந்திரமௌலி (பாட்டு), சுபா சந்திரமௌலி (மிருதங்கம்), கிருஷ்ணன்குட்டி (வயலின்) ஆகியோர் சிறப்பாகப் பின்னணி வழங்கப் புஷ்பாஞ்சலி கம்பீரநாட்டையில் துவங்கியது. அடுத்து வந்த ஹம்சத்வனி காளி கவுத்துவத்தில் தொள்ளை அலங்காடு காளியின்
ரௌத்திரத்தையும் பக்தர்களிடம் அவள் காட்டும் சாந்த ஸ்வரூபத்தையும் மாறிமாறிச் சரண்யா காட்டிய விதம் அருமை.

அடுத்து வந்த 'சகியே நீ சொல்லடி' என்ற கல்யாணி வர்ணத்துக்கு, தோழியைத் தூது அனுப்பி, கண்ணனின் குறும்புகளையும் பெருமைகளையும் தத்ரூபமாய் படம் பிடித்தார்.

மோகன ராகத்தில் 'மயில் வாகனா' பாட்டில் முருகனாக, பின் மயிலாக மாறி ஆடியது கொள்ளை அழகு.

ராகமாலிகையில் தசாவதாரக் காட்சிகளை எளிதாய்ப் புரியும் வண்ணம் அபிநயித்து கரகோஷத்தைப் பெற்றார். தேஷ் ராகத் தில்லானாவுக்கு ராமனின் பட்டாபிஷேகக் காட்சிகளை அபிநயம், ஜதி கொண்டு கண்முன் நிறுத்தியது நெகிழ்ச்சி தந்தது. எல்லாப் பாடல்களுமே தமிழில் அமைந்திருந்தது விழாவிற்குச் சிறப்பான அம்சம்.

சு.வெ.,
சான் டியேகோ

© TamilOnline.com