அக்டோபர் 10, 2009 அன்று அட்லாண்டாவில் தமிழ் அமைப்பான 'ஒண்டர் டைம்ஸ்' பெர்க்குமார் உயர்நிலைப் பள்ளியில் தீபாவளியை முன்னிட்டு ஒரு சிறப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து வழங்கினர். இளஞ்சிறுவர்கள் வேட்டி சட்டையுடன் தோன்றி தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடினர். சுமார் 22 நிகழ்ச்சிகள் இடம் பெற்றாலும் நேரம் போனதே தெரியவில்லை. எல்லாமே சிறுவர்களைக் கொண்ட நிகழ்ச்சிகளாக இருந்ததே அதற்குக் காரணம். வரவேற்புரை இனிய தமிழில் அமைந்திருந்தது. புறநானூற்றுப் பாடலை அடியொற்றிய 'புலவர் பெருமை' என்னும் நாடகத்தைச் சிறுவர்கள் மிகச் சிறப்பாக அரங்கேற்றினர்.
திரைப்படப் பாடல்கள், ஆழ்வார்கள் அறிமுகம், முருகன் திருமணம் ஆகிய நிகழ்ச்சிகள் சிறப்பாக இருந்தன. 'ஒண்டர் டைம்ஸ்' அமைப்பின் தமிழ்ச் சிறுவர்களும் பெரியோர்களும் பாராட்டுக்கு உரியவர்கள்.
முனைவர்.கு.கோவிந்தசாமி, அட்லாண்டா |