பாரதி தமிழ் சங்கத்தின் தீபாவளி விழா
அக்டோபர் 18, 2009 அன்று சான்ஃபிரான்ஸிஸ்கோ விரிகுடாப் பகுதியில் அமைந்துள்ள சன்னிவேல் இந்துக் கோவில் அரங்கில், பாரதி தமிழ்ச் சங்கம் தீபாவளித் திருநாள் விழா கொண்டாடியது. சங்கத் தலைவர் கோவிந்தராஜன் வரவேற்புரை வழங்கினார்.

கௌரி சேஷாத்ரி பாடிய கடவுள் வாழ்த்துடன் நிகழ்ச்சி துவங்கியது. நிகழ்ச்சியை திருமுடி ஒருங்கிணைத்து நடத்தினார். ஏராளமான சிறுவர் சிறுமியரும், விரிகுடாப் பகுதி இசைக் கலைஞர்களும் நிகழ்ச்சியில் பங்கு பெற்றனர். கர்நாடக இசைக் கலைஞர் டாக்டர் கல்பகம் கௌஷிக் அவர்கள், டி.கே. பட்டமாள், எம்.எல். வசந்தகுமாரி, எம்.எஸ். சுப்புலஷ்மி ஆகியோர் பாடிப் பிரபலமான பாரதி பாடல்களை அருமையாகப் பாடினார். கல்பகம் அவர்களது மாணவரான பர்ட்டன் வின் என்னும் அமெரிக்கர் அருமையாக மூன்று கர்நாடக இசைப் பாடல்களைப் பாடி அவையோரின் ஏகோபித்த கரகோஷத்தைப் பெற்றார். 'வாழும் கலை' அமைப்பின் சார்பில் சுதர்ஷன க்ரியா குறித்த ஓர் அறிமுகத்தை அளித்தார்கள். ஆந்திர, கர்நாடக மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சேவா பாரதி செய்து வரும் நிவாரணப் பணியை ஒரு குறும்படம் மூலம் விளக்கியதோடு, நிதியுதவி கோரினார்கள் சேவா பாரதி அமைப்பினர்.

பின்னர், தீபாவளி விழாவின் சிறப்பு அம்சமாகச் சங்கமம் குழுவினர் அளித்த வாரணம் என்ற பல்சுவை நிகழ்ச்சி நடைபெற்றது. விரிகுடாப் பகுதியில் வசிக்கும் கார்னீகி மெலன் பல்கலையின் முன்னாள் மாணவர்கள் பலரும் இணைந்து சங்கமம் என்றொரு கலை அமைப்பினைத் துவக்கி, மெல்லிசைப் பாடல்கள், நகைச்சுவை நாடகங்கள், பல்சுவை நிகழ்ச்சிகள் ஆகியவற்றை வழங்கி வருகிறார்கள். ஒரு நகைச்சுவை நாடகத்தின் ஊடாக பிரபலமான தமிழ் திரையிசைப் பாடல்களை இசைத்து அதற்கு அருமையாக நடனமும் ஆடினார்கள். நாடகம் பார்வையாளர்களை வயிறு வலிக்கச் சிரிக்க வைத்தது.

பாரதி தமிழ்ச் சங்கம் செப்டம்பர் 5, 2008 அன்று ஃப்ரீமாண்ட் நகர மைய நூலகத்தில் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களை கௌரவித்தது. அவரை ச. திருமலைராஜன் அறிமுகப்படுத்தினார். பாலாஜி ஸ்ரீநிவாசன், சுந்தரேஷ் இருவரும் ஜெயமோகனது விஷ்ணுபுரம் மற்றும் பின்தொடரும் நிழலின் குரல் ஆகிய இரு நாவல்களைப் பற்றிய மதிப்புரை வழங்கினார்கள். சிறப்பு விருந்தினரான ஜெயமோகன் கருத்தாழமிக்க சொற்பொழிவு ஒன்றை நிகழ்த்தினார். உரையைத் தொடர்ந்து கலந்துகொண்டோரின் கேள்விகளுக்குப் பதில் வழங்கினார்.

2010 ஜனவரி மாதம் பாரதி தமிழ்ச் சங்கம் பொங்கல் விழாவைக் கொண்டாடவுள்ளது. சிறுவர்களுக்கான போட்டிகள் அதில் இடம்பெறும். மேலதிகத் தகவல்களுக்கு சங்கத் தலைவர் கோவிந்தராஜனை 408 394 4279 என்ற தொடர்புகொள்ளவும்.

ச.திருமலைராஜன்

© TamilOnline.com