மிச்சிகன் பராசக்தி ஆலயத்தில் சூரசம்ஹாரம்
அக்டோபர் 23, 2009 அன்று பாண்டியாக், மிச்சிகனில் உள்ள பராசக்தி ஆலயத்தில் கந்த சஷ்டியை ஒட்டி சூரசம்ஹார வைபவம் நடந்தேறியது. ஆலய நிறுவனரும் நிர்வாக அதிகாரிகளில் ஒருவருமான டாக்டர் குமார் ஆலயத்தில் நவம்பர் மாதம் நடக்க இருக்கும் திருஷ்டி பீட ஸ்தாபனத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி முதலில் பேசினார். பிறகு சுப்ரமணிய சுவாமியின் உற்சவ மூர்த்தியைச் சுமந்து கோவிலில் வலம் வந்து அமர்த்தி, சூரசம்ஹார வைபவம் தொடங்கியது.

சிவாசாரியார் சித்தநாத குருக்கள் சுருக்கமாக முருகன் திருஅவதாரத்தை விளக்கிய பிறகு வேதங்களிலும் கந்த புராணத்திலிருந்தும் பல மேற்கோள்களை எடுத்துக் கூறி வர்ணனை செய்தார். மற்றொரு குருக்களான வெங்கடேஷ் அவர்கள் முறையே பல வேடங்கள் தரித்து அத்ற்கேற்ற ஆரவாரங்கள் செய்து, உற்சவத்தில் தத்ரூபத்தை நுழைத்தார். 'உற்சாகமாக ஒரு வைபவத்தைக் கொண்டாடுவது' என்பதே உற்சவத்தின் பொருள் என விளக்கிய சித்தநாத குருக்கள், முதலில் கஜமுகாசுரனின் வரவை அறிமுகம் செய்ய அதே வேடத்தில் வெங்கடேஷ் நுழைந்தார்.

பிறகு சுப்பிரமணியருடன் வதம் செய்து, தோற்றுவிட்டது போல் கீழே விழுந்து மீண்டும் அடுத்த காட்சிக்குத் தயாரானார். இவ்வாறே சிம்மமுகாசுரன், தாரகாசுரன் மற்றும் சூரபத்மன் ஆகியோரும் தோன்றினர். கச்சியப்ப சிவாசாரியார், அருணகிரிநாதர், சமஸ்கிருத ஸ்லோகங்கள் என தேவசேனாபதியின் பெருமை தொடர்ந்து வர்ணிக்கப்பட்டது. வைபவம், சூரபத்மனை மரமும் சேவலுமாக மாற்றியதில் முடிந்தது. பிறகு சுப்பிரமணியருடன் தேவசேனை மற்றும் வள்ளி மணக்கோலம் காண, தீபாராதனை நடந்தேறியது.

காந்தி சுந்தர்,
மிச்சிகன்

© TamilOnline.com