நவம்பர் 1, 2009 அன்று, டெலவர் பெருநிலத் தமிழ்ச் சங்கத்தின் (TAGDV) 'திருவிழா தினக் கொண்டாட்டம்' பென்சில்வேனியா மாநிலத்தின் நாரிஸ்டௌன் நகரத்திலுள்ள ஐசனோவர் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது. டெலவர் தமிழ்ப் பள்ளி மாணவி கார்த்தி ஜெயக்குமாரும், மாணவர் விவேக் கிருஷ்ணனும் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினர். மாணவ மாணவியரின் தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா ஆரம்பித்தது. செயலாளர் துரைக்கண்ணன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
ஐந்து வயது கண்மணி அன்பு துரைக்கண்ணன், ஈழத் தமிழர் விடுதலைக்காக உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தனின் "பாண்டிய மன்னவன்" பாடலை உணர்ச்சிகரமாகப் பாடினார். அமெரிக்க மருத்துவர் எலின் ஷேண்டர் (Ellyn Shander) அவர்கள் 'The Tamil Crisis: Tragedy, Determination and Hope' என்ற தலைப்பில் இலங்கைத் தமிழர்களின் நிலை குறித்துப் பேசினார். நாசிகளின் யூத இனப் படுகொலையில் தனது குடும்பத்தில் சிலரை இழந்து, அதன் சொல்லொனாத் துயரத்தை அனுபவித்த காரணத்தினால், இனப் படுகொலை எத்தகையது என்று அறிந்த அவர், இலங்கை நிலைமையை அத்துடன் ஒப்பிட்டுப் பேசி, இலங்கையின் திறந்தவெளி முகாம்களில் தமிழர்கள் படும் அல்லல்களைப் புகைப்படங்களுடன் விளக்கிப் பேசினார். இதற்காக வெள்ளைமாளிகையின் முன் 6 மாதங்களுக்கும் மேலாக நடைபெறும் தொடர் போராட்டம் உள்பட, பல்வேறு போராட்டங்களையும் விளக்கினார். இலங்கையில் தயாரித்த பொருட்களைப் புறக்கணிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். அவர் பேசி முடித்ததும், மொத்த அரங்கமும் எழுந்து நின்று கைதட்டிப் பாராட்டியது.
அவர்களுக்குத் தமிழ்ச் சங்கம் சார்பாகப் பாராட்டுப் பட்டயம் ஒன்றை ஹாரிஸ்பர்க் தமிழ்ச் சங்க முன்னாள் செயலாளர் பன்னீர்ச்செல்வம் வழங்கினார். FeTNA தலைவர் முனைவர். முத்துவேல் செல்லையா, துணைத் தலைவர் முனைவர். பிரபாகரன், WTO-வின் தலைவர் நாஞ்சில் ஒய். பீற்றர், வாஷிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்க இயக்குனர் முனைவர். சொர்ணம் சங்கரபாண்டியன், பன்னீர்ச்செல்வம் மற்றும் US-TPAC-க்கைச் சேர்ந்த புஷ்பராணி ஆகியோரும் விழாவில் உரையாற்றினர்.
துரைக்கண்ணன், நாரிஸ்டௌன், பென்சில்வேனியா. |