டௌன்செண்ட் உரை: 'தமிழின் மீது வேதம் சாராச் சமயங்களின் தாக்கம்'
நவம்பர் 5, 2009 அன்று பெர்க்லி பல்கலைக்கழகத்தில் முனைவர் ர. விஜயலட்சுமி அவர்கள் டவுன்செண்ட் திறனாய்வுச் சொற்பொழிவை நிகழ்த்தினார்.பௌத்தம், சமணம், ஆசீவகம் எனும் முப்பெருஞ்சமயக் கோட்பாடுகளால் தமிழகத்தில் விளைந்த மாற்றங்களை விளக்கினார் முனைவர் விஜயலட்சுமி. அவரது உரையின் சாரம் இது: காலத்தால் முற்பட்ட சங்கப் பாடல்கள் விவரிக்கும் சமூகப் பின்னணியில் இம்மூன்று சமயத்தினரும் வருகை தந்தனர். பௌத்தர்களும் சமணர்களும் வினைக்கொள்கையை வலியுறுத்தி அறநெறி, புலனடக்கம், தவம், வீடுபேறு போன்ற கொள்கைகளை முன்னிறுத்தினர். ஆசீவகர்கள் ஊழ் அல்லது விதிக்கொள்கையை நம்பினர். இவர்கள் வருகையால் தமிழர் வாழ்விலும் பண்பாடு, இலக்கியம் ஆகியவற்றிலும் பெருமளவு மாற்றங்கள் உண்டாயின.

சங்கமருவிய காலத்தில் எழுந்த மணிமேகலை பௌத்த சமயக் கருத்துக்களை உள்ளடக்கி எழுதப்பட்டது. மணிமேகலை துறவினைச் சாத்தனார் பௌத்த சமய நூல்கள், ஜாதகக்கதைகள், தேரிகாதா எனும் புத்த பிக்குணிகளின் பாடல்களின் தொகுப்பு ஆகியவற்றை மனத்திற் கொண்டு புனைந்திருக்கிறார்.

நாயன்மார், ஆழ்வார்களின் பக்தி இயக்கத்தினால் நலிவுற்ற சமணசமயத்தினர் தமிழ் மக்களைத் தம்பால் ஈர்க்கும் நோக்குடன் சீவகசிந்தாமணி, பெருங்கதை, சூளாமணி ஆகிய காப்பியங்களை இயற்றினர். வடமொழி மகாகாவிய மரபும் தமிழிலக்கிய மரபும் ஒருங்கமைந்த புதியதோர் காப்பிய வடிவை இதன்மூலம் அவர்கள் தமிழுக்கு அளித்தனர். சிந்தாமணியின் இலக்கியச் சிறப்பால் கவரப்பட்ட குலோத்துங்க சோழனைச் சைவநெறியில் திருப்பும் நோக்கத்துடன் இயற்றப்பட்டது சேக்கிழாரின் 'பெரியபுராணம்'. சைவ, வைணவ சமயங்களின் தாக்கத்தினால் பௌத்த, ஆசீவக சமயங்கள் தமிழ்நாட்டிலிருந்து மறைந்துவிட்ட போதும், பௌத்த, சமண சமயத்தினர் தமிழ் நாட்டில் செல்வாக்குடன் விளங்கியதற்கு அகழ்வாராய்ச்சி மற்றும் கல்வெட்டுச் சான்றுகள் தமிழகம் எங்கும் காணக் கிடைக்கின்றன என்று உரையாளர் குறிப்பிட்டார். விஜயலட்சுமி அவர்களின் உரை ஏறக்குறைய நாற்பது ஆண்டு ஆய்வு முயற்சிகளின் வெளிப்பாடு ஆகும்.

© TamilOnline.com