சிகாகோவில் தீபாவளி விழா
நவம்பர் 7, 2009 அன்று தமிழ் அன்பர்கள் லேக் கௌண்டி இந்துக் கோவிலில் தீபாவளிப் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடினர். தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா துவங்கியது. டாக்டர் மாதங்கி சேகரன் வரவேற்புரை வழங்கினார். இயல், இசை, நாடகம் என்ற மூன்று துறைகளிலும் சிறார்கள் பல்வேறு நிகழ்ச்சிகளை கண்ணுக்கு விருந்தாக்கினார்கள். அமெரிக்காவாழ் தமிழ்க் குழந்தைகளின் தமிழார்வமும், தமிழ்க் கலாசாரத்தை வெளிப்படுத்த அவர்கள் எடுத்துக் கொண்ட முயற்சிகளும் பல்வேறு நிகழ்ச்சிகளின் மூலம் வெளிப்படுத்தப்பட்டன. இரண்டு வயது முதல் 12 வயதுவரை உள்ள சிறுவர், சிறுமியர் இவற்றை வழங்கினர். 'பாட்டுக்குப் பாட்டு' நிகழ்ச்சி பெற்றோர்களையும் பங்குபெறச் செய்தது ரசிகத் தக்கதாக அமைந்திருந்தது.

விழாக் குழுவினரான டாக்டர் மாதங்கி சேகரன், சின்னசாமி ஆறுமுகம், ஜோதி அருண், அருணா சங்கர், மதுகுமார் ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்து நடத்தினர். இந்நிகழ்ச்சியின் மூலம் திரட்டப்பட்ட நிதி கோயிலின் வளர்ச்சிக்கு அளிக்கப்பட்டது பாராட்டுக்குரியது. சின்னசாமி ஆறுமுகம் நன்றி கூற விழா முடிவடைந்தது.

கமலா ராதாகிருஷ்ணன்,
சிகாகோ, இல்லினாய்ஸ்

© TamilOnline.com