நவம்பர் 14, 2009 அன்று அபிநயா டான்ஸ் கம்பெனி 'நிருத்ய சங்கதி' என்ற தனது நாட்யாஞ்சலி நிகழ்ச்சியை மெக்ஸிகன் ஹெரிடேஜ் அரங்கில் மேடையேற்றியது. இந்த வருடாந்திர நிகழ்ச்சி பெண்கள் முன்னேற்றம், மறுமலர்ச்சி ஆகியவற்றுக்குத் தூண்டுகோலாக அமையும் நாட்டிய நாடகங்களை வழங்கும் விதமாக அமைவதாகும். அபிநயாவின் நிறுவனர், கலை நிறுவனர் மைதிலி குமார் மற்றும் அவரது மகள் ரசிகா குமார் இவர்களோடு குழுமத்தின் மாணவ மாணவியர் திறம்பட இதனை மிக விறுவிறுப்புடன் நடத்தினர்.
விடுதலைப் போராட்ட வீராங்கனையான ராணி லக்ஷ்மிபாய், புலியை முறத்தால் விரட்டிய கிராமப் பெண்மணி ஜல்காரிபாய் ஆகியோரை வெகு அழகாகச் சக்தியின் அம்சங்களாகச் சித்திரித்தனர் ரசிகா குமார் மற்றும் அஞ்சனா பாசு. புதிய தேசங்களில் புலம் பெயர்ந்த மக்கள் பெறும் அனுபவங்களை நவரசங்களாகப் படம் பிடித்துக் காட்டினர் மைதிலி குமாரும் ரசிகாவும். மாணவ மாணவியர் வழங்கிய எல்லா நிகழ்ச்சிகளும் அவர்களது உழைப்புக்கும் திறனுக்கும் சான்று கூறின.
ஆஷா ரமேஷ் (குரலிசை), மாளவிகா குமார் (நட்டுவாங்கம்) மற்றும் பிற பக்க வாத்தியக் குழுவினர் மிகத் திறமையாக நிகழ்ச்சிக்குப் பங்களித்தனர்.
உஷா பத்மனாபன், சான் ஹோசே, கலி. |