செப்டம்பர் 10ந் தேதி 2006, ஞாயிற்றுக் கிழமை மாலை 4 மணியளவில் சான்ஹோசே CET மையத்தில் திரு. ஆனந்த் வெங்கட கிருஷ்ணனின் கர்நாடக இசை அரங்கேற்றம் நடைபெற்றது.
நிகழ்ச்சி ஆரம்பமாக வஸந்தா ராக வர்ணம் சுருதி சுத்தமாக இரண்டு காலத்திலும் நிதானமாக பாடியது, பின் அடானா ராகத்தை சுருக்கமாக பாடி, மைசூர் ஜெயசாமராஜ உடையார் பாடலை பாடிய விதம் கேட்க நன்றாக இருந்தது.
அடுத்து 'பரியா ஜகமா' என வனஸ்பதி ராக பாடலில் ஸ்வரங்கள் துளியும் பேதலிக்காமல் அழகாக பிடித்து பாடியவிதம் மனநிறைவு. ஹம்சத்வனி ராக சிவஸ்லோகம் உச்சரிப்பு சுத்தம், உருக்கம். கரகரப்ரியா ராக ஆலாபனை சுருக்கமாக ஸ்வர ப்ரஸ்தாரங் களில் ஒவ்வொன்றாக நின்று ஆலாபனை செய்து பாடியவிதம் 'ஸ்ரீ ஜானகி பதே' எனும் இடத்தில் செய்த நிரவல், தாள பிரமானங் களுக்குள் பின்னிய ஸ்வர கோர்வையாவும் கேட்க காதிற்கு ஓர் சுகம்.
ஒரு மணி நேரத்திற்கு பின் குரல் சூடு பிடித்தபின் பாடிய பாடல்கள் யாவும் கேட்க மிகவும் நன்றாக இருந்தது. தமிழில் முருகன் மேல் ராகமாலிகை, மிக்க இனிமை, நயம், உருக்கம், பாவம் ஆகியவை சிறந்த முறையில் இருந்தது.
கல்யாணி ராக நவாவர்ண பாடல் தீட்சிதர் கிருதி, இருகளை சவுக்க தாளத்தில் நல்ல கற்பனை வளத்துடன் நறுக்கு தெறித்தாற் போல் ஆலாபனை, நிரவல், சுரம் யாவும் பாடியது, ஆலாபனையில் மேல் ஸ்தாயியை தொட்டு தழுவி கீழே இறங்கிய போது சிறிது சிரமப்பட்டாலும் கல்யாணி ராகத்தை கனகச்சிதமாக கையாண்ட விதம் ஓர் தனி சுகம். நல்ல பாடாந்தரம், சுருதியுடன் இழைந்த மெல்லிய குரல், பாடல்களில் உச்சரிப்பு, அர்த்தம், பாவம் ஆகியவைகளை புரிந்து உரைத்து பாடிய விதம், மேடையில் பாடும் போது ஜாஸ்தி தலை ஆட்டம், உடல் குலுக்கல் இன்றி அமைதியாக உட்கார்ந்து அனுபவித்து பாடிய விதத்தில் குருவின் கற்பிக்கும் திறமை, மாணவனின் இசை ஆர்வம், உழைப்பு, பக்தி யாவும் நன்கு பளிச்சிட்டு இரண்டரை மணி கச்சேரி அலுக்காமல் ரசிக்கம்படி மிக்க நன்றாக அமைந்தது. புரந்தரதாசர் பாடல், ஐயப்பன் பஜன், தில்லானா யாவும் திருப்திகரம். இளம் பாடகருக்கேற்ற முறையில் மிக்க அனுசரணையாக மிருதங்க வித்வான், வயலின் வித்வான் இருவரும் நன்கு வாசித்து நிகழ்ச்சிக்கு மேலும் மெருகூட்டினர். பாராட்டுக்கள்.
சீதா துரைராஜ் |