சின்னக் குயில்
அந்தச் சிறுமி மிக அழகாகப் பாடுவாள். அவள் பாடப் பாடக் கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல அத்தனை பாவத்துடனும் ஸ்ருதி சுத்தத்துடனும் அர்ப்பணிப்பு உணர்வுடனும் பாடுவாள். ஆனாலும் குடும்ப சம்பிரதாயம் கருதி அவளை மேற்கொண்டு கச்சேரிகளுக்கு அனுப்ப அவள் தந்தை விரும்பவில்லை. குடும்ப நண்பர்கள் பலர் எடுத்துக் கூறியும் கூட சம்பிரதாயத்தில் ஊறிய அவர் ஒப்பவில்லை.

அப்போது சென்னை இசைக் கல்லூரியில் இசைக்கான சிறப்புத் தேர்வு ஒன்று நடைபெற்றது. குடும்ப நண்பர்களின் வற்புறுத்தலுக்கிணங்கி பெரியவர் அந்தச் சிறுமியையும் உடன் அழைத்துக் கொண்டு போனார். பத்து வயதுகூட நிரம்பாத சிறுமி தேர்வுக்கு வந்திருப்பது குறித்துப் பேராசிரியர் சாம்பமூர்த்தி, முத்துசாமி தீட்சிதரின் பரம்பரையைச் சேர்ந்த அம்பி தீட்சிதர், டைகர் வரதாச்சாரியார் போன்ற ஜாம்பவான்கள் வியப்புற்றனர். சிறுமியும் பாடத் தொடங்கினாள். பாடலைக் கேட்ட அம்பி தீட்சிதர், "முத்துசாமி தீட்சிதரின் கீர்த்தனை ஏதாவது தெரியுமா?" என்று கேட்டார். "ஓ. ஸ்ரீ சுப்ரமண்யாய நமஸ்தே தெரியுமே!" என்று சொன்ன சிறுமி மிக அழகாக அதனைப் பாட ஆரம்பித்தாள். சிறுமியின் குரலிலிருந்து வெளிப்பட்ட இசையில் சொக்கிப்போன அம்பி தீட்சிதர், இந்தச் சிறுமிக்குள் இத்தனை ஆற்றலா என வியந்தார். கண் கலங்கினார். எப்படியாவது இவளை முன்னுக்குக் கொண்டு வந்து விட வேண்டும் என்று உறுதி பூண்டார். "நீ என்ன செய்வியோ தெரியாது. நாளை முதல் தினமும் இவளை என் வீட்டுக்கு அழைத்துக் கொண்டு வந்துவிட வேண்டும். நான் இவளுக்கு நிறைய சொல்லித் தர வேண்டும்." என்று கட்டளையிட்டார் அந்தச் சிறுமியின் தந்தையிடம். அவரும் அதற்கு ஒப்புக் கொண்டு சென்னையில் சில நாட்கள் தங்கி அம்பி தீட்சிதரிடம் இசை கற்க ஏற்பாடு செய்தார்.

இப்படிச் சிறு வயதிலேயே ஜாம்பவான்கள் பலரையும் ஈர்க்கும் அளவிற்கு இசைஞானம் பெற்றிருந்த அந்தச் சிறுமி, பிற்காலத்தில் இன்னிசை மகாராணியாகப் போற்றப்பட்டார். அவர் யார் தெரியுமா?

விடை

© TamilOnline.com