பட்டா மணியப் பண்டிதர்
அவர் ஒரு ஆங்கிலேய அதிகாரி. புதிதாகப் பொறுப்பேற்றுக் கொண்டு சென்னைக்கு வந்திருந்தார். அவருக்கு இசையார்வம் உண்டு என்றாலும் கர்நாடக சங்கீத நிகழ்ச்சிகளை அதிகம் கேட்டதில்லை. அதனால் அவருக்கேற்றவாறு ஒரு சங்கீதக் கச்சேரியை ஏற்பாடு செய்யவேண்டும் என நகரத்துப் பிரமுகர்கள் விரும்பினர். வயலின் அயல் தேச வாத்தியம் என்பதாலும், அதில் வாசிக்கக் கேட்டால் அந்த அதிகாரி மனம் மகிழ்வார் என்றும் முடிவு செய்த அவர்கள், அக்காலத்தில் பிரபலமாக இருந்த வயலின் வித்வான் ஒருவரை சென்னைக்கு வரவழைத்தனர்.

வித்வானும் சென்னைக்கு வந்தார். கச்சேரியும் ஆரம்பமானது. வித்வானின் எளிய தோற்றத்தையும், அவர் வாத்தியத்தையும் கண்ட அதிகாரிக்கு நகைப்பு ஏற்பட்டது. இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அமர்ந்திருந்தார். கச்சேரி ஆரம்பித்துச் சிறிது நேரம்தான் ஆகியிருக்கும். அந்த அதிகாரியின் கை தானாகத் தாளம் போட ஆரம்பித்து விட்டது. கால்களும் தன்னையுமறியாமல் அசையத் தொடங்கின. அவ்வப்போது கண்களில் நீர்.

கச்சேரி நிறைவடைந்தது. உடனே எழுந்து நின்று கைதட்டி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய அந்த அதிகாரி, "இது எங்கள் நாட்டு வாத்தியம். எங்கள் நாட்டினரே அதிகநேரம் இதை வாசிக்க மாட்டார்கள். அப்படி வாசித்தாலும் நீண்ட நேரம் பொறுமையாக இருந்து எங்களால் இதைக் கேட்க முடியாது. அப்படி இருக்க, அயல் நாட்டு வாத்தியமான இதைத் தமிழராகிய நீங்கள் இவ்வளவு நேரம் மிக அற்புதமாக வாசித்தது பெரிய விஷயம். அதைவிடப் பெரிது என்னை கொஞ்சம்கூட அலுக்காமல் கேட்டுக் கொண்டிருக்கும்படிச் செய்தது. நீங்கள் உண்மையிலேயே மிகப்பெரிய வித்வான் தான்" என்று சொல்லிப் பாராட்டினார். பின் பல பரிசுகளைத் தந்து அவரை கௌரவப்படுத்தியதுடன், வித்வான் வாழ்ந்த கிராமத்தின் பட்டா மணியக்காரராகவும் அவரையே நியமித்தார்.

வயலின் இசை முன்னோடியாகவும், பல இசை ஜாம்பவான்களை உருவாக்கிய பெருமையுடையவருமான அந்த இசை மாமேதை யார் தெரியுமா?

விடை

© TamilOnline.com