என் இல்லத்தில் எனது தாயாரின் அருமையான உருவப்படம் ஒன்று இருக்கிறது. நான் சிறுவயதில் என் தாயை இழந்து விட்டதால் அவர்களை நான் உயிரோடு பார்க்கும் வாய்ப்பை இழந்து விட்டேன். அந்தப் படத்திலிருந்து என் தாய் வெளியே வந்து, என் கரங்களைப் பிடித்துக் கொண்டு "பயப்படாதே, இங்கு நான் உன்னுடன் இருக்கிறேன்" என்று சொன்னால் அது ஆச்சரியமாக இருக்குமென நான் அடிக்கடி நினைப்பதுண்டு. எத்தனையோ தடவை என் தாயை மறுபடியும் உயிருடன் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டதும் உண்டு.
இடி, மின்னல் நிறைந்த இரவில் மிகவும் பயந்து நடுங்கின ஒரு சிறுமியைப் பற்றிய ஒரு கதை உண்டு. அவள் சத்தமிட்டு அழுது "அப்பா, என்னைக் காப்பாற்றுங்கள்" என்று சொன்னபோது, அவளுடைய தகப்பனார் அவளைப் பார்த்து, "அன்பு மகளே! கடவுள் உன்னை நேசிக்கிறார். அவர் உன்னைப் பார்த்துக் கொள்வார்" என்றார். மீண்டும் அந்தச் சிறுமி இடிச் சத்தத்தைக் கேட்டபோது, தன் தந்தையை உதவிக்கு அழைத்தாள். மறுபடியும் அவளுக்கு அதே பதில் கிடைத்தது. மிகவும் சோர்ந்துபோன சிறுமி தன் அப்பாவைப் பார்த்து, "கடவுள் என்னை நேசிக்கிறார் என்று எனக்குத் தெரியும். ஆனால் இப்போது எனக்கு ரத்தமும் சதையுமாக இருக்குமொருவர் தேவை" என்றாள்.
இவ்விதமாக பயந்து நடுங்குகிறவர்களுக்கு உதவிட இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர் மனிதவுடலெடுத்து வந்தார். பெத்லஹேம் என்ற சிறிய ஊரில் இயேசுவின் எளிமையான பிறப்பில் இது ஆரம்பமாயிற்று. படைத்தவர், படைக்கப்பட்டவர்களால் காணவும், கேட்கவும், தொடவும் கூடியவராக வந்தார். இது விந்தையானாலும் உண்மையே! அவர் குழந்தையாகப் பிறந்தார். அவர்கள் மத்தியில் வாழ்ந்தார். அவர்களுக்காகவே மரித்தார். அவர் உலகில் வந்தபோது அன்பைப் பிரசங்கித்தது மட்டுமல்லாமல், மக்களை நேசித்தார். மன்னிப்பை போதித்ததுமல்லாமல் மன்னித்தார். நீதி, நேர்மையின் தேவையை அறிவித்ததோடு, மக்கள் தேவநீதியைப் பெற்றுக் கொள்ளவும், சந்திக்கவும், அவர்களுக்காக வாழ்ந்து மரித்தார். அவர் மாம்சத்தில் தேவனுடைய அன்பாகவே திகழ்ந்தார். தேவனுடைய மறு அவதாரம் மனித சிந்தனைக்கு அப்பாற்பட்டது. தேவன் ஏன் இதைச் செய்தார்?
##Caption##ஆதி பெற்றோர் ஏதென் தோட்டத்தில் கீழ்ப்படியாமையில் மூழ்கியபோது, தீமை உலகில் நுழைந்தது. மனிதரைப் பாவத்தில் மூழ்கடித்தது. நமது பாவங்கள் இன்னும் அதிகத் தீமையாக மாறின. ஆனால் தேவநீதி பாவத்திற்கான பரிகாரத்தை எதிர்பார்த்தது. தேவன் தம் குமாரனை இந்தப் பரிகாரத்தைச் செய்திட உலகிற்கு அனுப்பினார். இதுவே கிறிஸ்துமஸ்.
இன்று நாம் உலகின் ஒளியாக வந்த இயேசுவைப் புறக்கணித்து, வெறும். ஒளி விளக்குகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம். மரத்தில் மரித்த இரட்சகரை ஆராதிக்காமல், கிருஸ்துமஸ் மரத்தை ஆராதிக்கிறோம். ஜீவன் அளிப்பவரைத் தவறவிட்டுப் பரிசு கொடுப்பதையும் பெறுவதையும் கிருஸ்துமஸின் மையமாக்கி விட்டோம். நமக்கெனப் பிறந்த பாலனின் உண்மையை மறந்து சமுதாயக் கூடுகை, கேளிக்கைகளுக்கு முதலிடம் கொடுத்து விட்டோம்.
"கிறிஸ்துமஸ் என்பது வாழ்வு இப்படியும் இருக்கலாம் என்கிற உண்மையற்ற நிலையல்ல; வாழ்வு என்பது என்ன என்பதை நமக்குக் காட்டுவதற்கு வெளிப்பட்ட கிறிஸ்துவின் உண்மைத் தன்மையாகும்"
இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!
பாஸ்டர் ரஞ்சன் சாமுவேல் |