அம்மா, அப்பா வராங்க!
டி.வி. சீரியலில் மூழ்கி இருந்தாள் சுமதி. காரை பார்க் செய்து விட்டு உள்ளே வந்தான் வாசு. எழுந்திருக்க மனமின்றி முனகிக் கொண்டே எழுந்து கிச்சன் பக்கம் சென்று காபி கலந்து, தேன்குழலும் சேர்த்து தட்டை எடுத்துக் கொண்டு வந்தவளிடம் "சுமதி அம்மா, அப்பா வராங்களாம்' என்று சொன்னவாறு காபியையும் தேன்குழலையும் வாங்கிக் கொண்டான்.

"என்னது அப்பா, அம்மாவா எப்போவாம்?" கேட்கும் போதே துக்கம் தொண்டையை அடைத்தது சுமதிக்கு.

"வர சனிக்கிழமை. வந்தா எப்படியும் ஒரு மாசம் இரண்டு மாசமாவது இருப்பாங்க போல..."

"பின்னே என்ன நமக்கு மண்டையிடிதான்" சூள் கொட்டினாள் சுமதி.

"வந்தா எதுக்கும் நல்லதா பெட் வாங்கிடணும். போன தடவையே ரொம்பக் கஷ்டப்பட்டாங்க" என்றான் வாசு.

"ஆமாம். நீங்க ஒரு லிஸ்ட் போட்டுடுங்க. ரொம்ப அவசியம்."

"அவங்க ரூமுக்கு ஒரு சின்ன டி.வி. வாங்கிட்டா தேவலை. பசங்களோட போராடி சேனல் மாத்தறதுக்குக் கஷ்டமில்லாம..."

"என்ன அரேஞ்ச்மெண்டெல்லாம் பலமாயிருக்கே.." முகத்தை நொடித்தாள்.

"என்ன பேசறே நீ. வயசானவங்களுக்கு சௌகரியம் செய்து தர வேண்டாமா?"

"உக்கும் காசு என்ன கொல்லையிலயா காய்க்கறது..." - சுமதி.

##Caption## "அப்பாவுக்கு ஒரு கம்ப்யூட்டர் வாங்கித் தரலாம்னு இருக்கேன். தனியா ஈமெயில் பார்க்க, நியூஸ் படிக்கன்னு..." வாசு முடிப்பதற்குள், " இதோ பாருங்க. எனக்கும் ஆபிஸ்ல வொர்க் கழுத்தைப் பிடிக்கிறது. லீவெல்லாம் போட முடியாது. அவங்களை வேளாவேளைக்கு கவனிக்கணும். அநேகமா ஆபீஸ்ல வொர்க் விஷயமா இரண்டு வாரம் நியூயார்க் அனுப்புவாங்க போல இருக்கு. அம்மா வந்தா சமைச்சு வீட்டு வேலை செஞ்சேன், முதுகு வலி, கால் வலி வந்திடுச்சின்னு சொல்லி எனக்குக் கெட்ட பேர்தான் வரப்போறது. இப்ப எதுக்கு அவங்க வரணும்னுதான் எனக்குப் புரியலை..."

"சீ... என்ன மனுஷி நீ. உன்னோட அப்பா, அம்மாவுக்கு உன்னைப் பார்க்க ஆசை இருக்காதா? என்ன பொண்ணு நீ?"

"என்ன என்ன... என்னோட அப்பா அம்மாவா? முதல்லயே நீங்க சொல்லக் கூடாதா?"

"ஐயோ சுமதி... உன்னோட அப்பா அம்மாவை நான் அப்பா, அம்மான்னு தான் கூப்பிடணும்னு கொஞ்சமாவா நீ சண்டை போட்டிருக்கே. ஆர்டர் இல்ல போட்டிருக்கே..."

"அடப்பாவமே... உங்க அப்பா அம்மா இல்ல வராங்கன்னு நினைச்சேன்" முகத்தில் அசடு வழிய விழித்தாள் சுமதி.

கேலியாகச் சிரித்தான் வாசு.

தங்கம் ராமசாமி,
நியூஜெர்ஸி

© TamilOnline.com