கணிதப் புதிர்கள்
1. 2, 16, 216, 4096, ...... அடுத்து வரிசையில் வர வேண்டிய எண் எது, ஏன்?

2. அது ஓர் ஆறு இலக்க எண். முதல் இரண்டு எண்களைக் கூட்டினால் ஐந்தாம் இலக்கம் வரும். இரண்டாம், மூன்றாம் இலக்க எண்களை ஒன்றோடு ஒன்று பெருக்கினால் நான்காம் இலக்க எண் வரும். மூன்றாம் இலக்க எண்ணையும், ஐந்தாம் இலக்க எண்ணையும் கூட்டினால் ஆறாம் இலக்க எண் வரும். மூன்றாலும் ஒன்பதாலும் மீதியின்றி வகுபடும் அந்த எண்ணின் முதல் இலக்கம் 1; இறுதி இலக்கம் 7; என்றால் அந்த எண் எது?

3. ராமுவிடம் சில பழங்களும் சில பைகளும் இருந்தன. ஒவ்வொரு பையிலும் நான்கு நான்கு பழங்களை வைத்தால் ஒரு பை மீதம் இருக்கிறது. ஒவ்வொரு பையிலும் மூன்று மூன்று பழங்களை வைத்தால் ஒரு பழம் மீதம் இருக்கிறது. அப்படியென்றால் ராமுவிடம் இருந்த பழங்கள் எத்தனை, பைகள் எத்தனை?

4. காட்டுக்குச் சென்ற ராமு வீடு திரும்பும் வழியை மறந்து விட்டான். அந்தக் காட்டிற்கு இருபுறமும் இரண்டு கிராமங்கள் இருந்தன. முத்து நகர் என்ற கிராமத்தில் இருப்பவர்கள் எப்போதும் உண்மையே பேசக் கூடியவர்கள். பவழ நகர் என்ற கிராமத்தில் இருப்பவர்கள் எப்போதும் பொய்யே பேசக் கூடியவர்கள். ராமு முத்துநகருக்குச் சென்றால் அவன் சொந்த ஊருக்குச் சென்று விட முடியும். முத்துநகருக்கு எப்படிச் செல்வது என்று வழி தெரியாமல் ராமு யோசித்துக் கொண்டிருந்த போது ஒரு மனிதன் எதிரே வந்தான். அவன் எந்த ஊரிலிருந்து வருகிறான் என்பதோ, அவன் பேசுவது உண்மையா, பொய்யா என்பதோ ராமுவுக்குத் தெரியாது. ஆனாலும் ஒரே ஒரு கேள்வியை மட்டும் கேட்டு முத்துநகருக்குச் செல்லும் வழியை ராமு கண்டுபிடித்து விட்டான். அவன் கேட்ட கேள்வி என்னவாக இருக்கும்?

5. மோகன் $100 எடுத்துக் கொண்டு கடைக்குச் சென்றான். கடையில் ஒரு புத்தகத்தின் விலை $15; ஒரு பேனாவின் விலை $1; ஒரு பென்சிலின் விலை $.25 என்று இருந்தது. மோகன் எல்லாப் பொருட்களையும் வாங்கினான். வீட்டிற்கு வந்து பார்த்தபோது அவற்றின் மொத்த எண்ணிக்கை நூறாக இருந்தது. அவன் எந்தெந்தப் பொருட்களை எந்தெந்த எண்ணிக்கையில் வாங்கியிருப்பான்?

அரவிந்த்

விடைகள்

© TamilOnline.com