இந்தியாவை ஆண்ட முகலாய மன்னர்களுள் அக்பரும் ஒருவர். அவருடைய அந்தரங்க ஆலோசகராக விளங்கியவர் பீர்பல். பீர்பல் மிகுந்த புத்திசாலி. சிரிக்கச் சிரிக்கப் பேசுகிறவரும் கூட.
ஒருமுறை அக்பருக்கு ஒரு சந்தேகம் தோன்றியது. ஒரு மனிதனால் நடுங்கும் குளிரில், கழுத்தளவு நீரில் தன்னந்தனியாக இரவு முழுவதும் நிற்க முடியுமா என்று. அவ்வாறு நிற்பவர்களுக்கு நூறு பொன் பரிசளிப்பதாக நாடு முழுவதும் அறிவிக்கச் சொன்னார். அதற்கு யாரும் முன்வரவில்லை. ஒரு தைரியமான ஆண்மகன் கூடத் தன் நாட்டில் இல்லையா என்று அக்பர் யோசித்துக் கொண்டிருக்கும் போது, அங்கே ஒரு குடியானவன் வந்தான். தன்னால் அவ்வாறு இரவு முழுவதும் தண்ணீரில் நிற்க முடியும் என்றும், மன்னர் அதனைக் கண்காணித்துக் கொள்ளலாம் என்றும் அவன் சொன்னான்.
மன்னரும் சம்மதித்தார். குடியானவனும் இரவு நேரத்தில் அரண்மனைக் குளத்திற்குள் இறங்கி, நடுங்கும் குளிரில், கழுத்தளவு நீரில் நிற்க ஆரம்பித்தான். அவனைக் கண்காணிக்க இரண்டு காவலாளிகளை நியமித்துவிட்டு மன்னர் உறங்கச் சென்று விட்டார். மறுநாள் காலை அக்பர் வந்து பார்த்தபோது குடியானவன் தண்ணீருக்குள் வெடவெடவென்று நடுங்கிக் கொண்டிருந்தான். காவலாளிகளும் அவன் இரவு முழுவதும் அங்கே நின்று கொண்டிருந்ததாகச் சாட்சியம் கூறினர். எப்படி அவனால் அந்தக் கடும் குளிரைத் தாங்கிக் கொள்ள முடிந்தது என்று மன்னர் கேட்டார்.
அதற்குக் குடியானவன், தான் குளிரில் நடுங்கிக்கொண்டே நின்று கொண்டிருந்ததாகவும், தூரத்தில் அரண்மனை மாடத்தில் எரியும் விளக்கைப் பார்த்துக் கொண்டே இருந்ததால் விடியும்வரை நேரம் போனதே தெரியவில்லை என்றும் கூறினான்.
உடனே அக்பர், "ஓ! அப்படியா? அரண்மனை மாடவிளக்கின் ஒளி உன்மீது பட்டு, அதன் வெப்பத்தால்தான் உனக்குக் குளிர் தெரியவில்லை. நீ விதிப்படி நடக்கவில்லை. அதனால் உனக்குப் பரிசு கிடையாது. ஓடிப் போ" என்று கூறித் துரத்திவிட்டார். குடியானவனும் ஏமாற்றத்துடன் சென்றான்.
நடந்த விஷயம் காவலாளிகள் மூலமாக பீர்பலுக்குத் தெரிய வந்தது.
ஒருநாள் அக்பர் அரண்மனைத் தோட்டத்தில் உலாவிக் கொண்டிருந்தார். தூரத்தில் பீர்பல் பானைகளை வைத்து ஏதோ செய்து கொண்டிருப்பதைப் பார்த்தார். அது என்னவென்று பார்ப்பதற்காக அருகில் சென்றார்.
அங்கே, பீர்பல் ஒரு பானையில் அரிசியைப் போட்டுத், தண்ணீர் ஊற்றி அதனை மரத்தில் மிக உயரத்தில் தொங்க விட்டிருந்தார். கீழே அடுப்பு எரிந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்த அக்பர், "பீர்பல், நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்?" என்று கேட்டார்.
"மன்னா, நான் சமைத்துக் கொண்டிருக்கிறேன்" என்றார் பீர்பல்.
"சரிதான். நீ என்ன முட்டாளா? அடுப்பு எங்கோ இருக்கிறது. நெருப்பு எங்கோ இருக்கிறது. எப்படி உன்னால் சமைக்க முடியும்?. உன் முட்டாள்தனத்துக்கு அளவே இல்லாமல் போய் விட்டது" என்றார் அக்பர் கோபத்துடன்.
"மன்னா, எங்கோ தூரத்தில் அரண்மனையில் எரியும் விளக்கு, கழுத்தளவு நீரில் குளிரில் நடுங்கிக் கொண்டிருப்பவனுக்கு வெப்பத்தைத் தந்து காப்பாற்றும் என்றால், பக்கத்தில் எரியும் இந்த நெருப்பு அரிசியை ஏன் சமைக்காது?" என்று எதிர்க்கேள்வி எழுப்பினார் பீர்பல்.
மன்னருக்குத் தான் செய்த தவறு புரிந்தது. குடியானவனை அழைத்து அறிவித்திருந்தபடி நூறு பொற்காசுகளோடு மேலும் பல பரிசுகளையும் வழங்கினார்.
சரி, குழந்தைகளே அடுத்த மாதம் வேறொரு கதையுடன் உங்களைச் சந்திக்கிறேன்.
சுப்புத்தாத்தா |