ஷேக் சின்ன காசிம், ஷேக் சின்ன பாபு சகோதரர்கள்
திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை, காருகுறிச்சி அருணாச்சலம், திருவீழிமிழலை சகோதரர்கள் வரிசையில் ஆந்திர மாநிலத்தில் இருந்து வந்து தமிழ் நாட்டைத் தன் நாதஸ்வர இசையால் மயக்கியவர் பத்மஸ்ரீ டாக்டர் ஷேக் சின்ன மவுலானா சாகிப். அவரது வழித்தோன்றல்களும் சீடர்களும் ஆகிய காசிம், பாபு சகோதரர்கள் சான்ஃபிரான்ஸிஸ்கோ வளைகுடாப் பகுதிக்கு வந்திருந்தனர். தவில் வித்வான்கள் வெளியம்பாக்கம் பழனிவேல், உடுமலைப்பேட்டை மணிகண்டன் ஆகியோரின் பக்க வாத்தியத்துடன் ஃப்ரீமாண்ட் இந்துக் கோவில், லிவர்மோர் சிவன் விஷ்ணு கோவில் மற்றும் வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் சார்பாக சான் ரமோன் விண்மியர் பள்ளி அரங்கத்திலும் வாசித்துத் தேனினும் இனிய குழல் இசையினால் உருக வைத்தனர்.

தென்றல் பத்திரிகைக்காக இருவரின் சார்பில் மூத்த சகோதரர் காசிம் அளித்த பேட்டி:

கே: உங்கள் குடும்பத்தின் இசைப் பின்னணி குறித்து?

காசிம்: எங்கள் குடும்பம் நாதஸ்வர இசைக்கே தன்னை முன்னூறு வருடங்களுக்கும் அர்ப்பணித்துக் கொண்ட குடும்பம். ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தின் கரவாடி கிராமத்தில் உள்ள சிவன், பெருமாள் கோவில்களில் வாசித்து வந்த குடும்பம். கோவிலுக்கு வாசிக்க எங்கள் குடும்பத்துக்கு மானியமாகக் கொடுக்கப்பட்ட விவசாய நிலத்தை நாங்கள் இன்றும் பராமரித்து வருகிறோம். நிஜாம் மன்னர்கள் காலத்தில், நிலத்தையும், இசையையும், இசைப் பாரம்பரியத்தையும் பாதுகாக்கும் பொருட்டு எங்கள் முன்னோர்கள் மதம் மாறும் சூழல் ஏற்பட்டது. ஆனால் இன்றுவரை நாங்கள் ஆண்டவனை மதமாச்சரியம் இன்றி நாத பிரமமமாக வழிபட்டு வருகிறோம். எங்கள் முப்பாட்டனார் ஷேக் காசிம் சாகிப் அவர்களிடம் சிலகலூரிப்பேட்டா ஷேக் ஆதம் சாகிப் குருகுலவாசத்தில் கற்றுப் பின்னாளில் பெரும்புகழ் அடைந்தார். நாங்கள் பாட்டனாரிடம் குருகுல முறையில் இசை பயின்றோம். இப்படி இசைப் பாரம்பரியம் எங்கள் குடும்பத்தில் தொடர்கிறது.

கே: உங்கள் தாத்தா ஷேக் சின்ன மவுலானா சாகிப் அவர்களைக் குறித்து?

##Caption##காசிம்: எங்கள் தாய் வழிப் பாட்டனார் பத்மஸ்ரீ டாக்டர் ஷேக் சின்ன மவுலானா சாகிப் அவர்கள். மாபெரும் நாதஸ்வர மேதை. பிரகாசம் மாவட்டத்தில் பிரபலமான மேதையான சாத்தலூர் ஷேக் நபி சாகிப் அவர்களின் பாரம்பரியத்தில் வந்தவர். தன் தந்தை காசிம் சாகிப்பிடமும், வித்வான் ஆதம் சாகிபிடமும் நாதஸ்வரம் கற்றுக்கொண்ட சின்ன மவுலானா பின்னர் தஞ்சாவூர் பாணி நாதஸ்வரத்தையும் கற்றுக் கொண்டார். 1960ம் ஆண்டு முதல் தமிழ் நாட்டில் வாசிக்க ஆரம்பித்த அவர், ஸ்ரீரங்கம் ரங்கநாதப் பெருமாளிடம் கொண்ட அளவற்ற பக்தியின் காரணமாகக் கோவில் அருகிலேயே தன் இல்லத்தை அமைத்துக்கொண்டு வாழ்நாள் முழுவதும் ஸ்ரீரங்கநாதருக்கே நாதஸ்வர இசையைச் சமர்ப்பித்தார். அடுத்த தலைமுறைக்கு இந்த இசையை எடுத்துச் செல்லும் பொருட்டு சாரதா நாதஸ்வர சங்கீத ஆஸ்ரமம் என்ற பள்ளியை ஸ்ரீரங்கத்தில் தொடங்கி நடத்தினார். அவரது பேரன்களாகிய எனக்கும் சகோதரர் பாபுவுக்கும் அவரே இசை பயிற்றினார். அவருடன் சேர்ந்து 15 வருட காலம் உலகம் முழுவதும் சென்று நாதஸ்வரக் கச்சேரிகள் நடத்தும் பாக்கியத்தையும் நாங்கள் பெற்றோம்.

கே: உங்களது நாதஸ்வரப் பயிற்சி குறித்து?

காசிம்: 12 வருடங்களாக நாங்கள் இருவரும் இணைந்தே கச்சேரிகள் நடத்தி உலகமெங்கும் உள்ள நாதஸ்வர ரசிகர்களுக்கு இசை விருந்து படைத்து வருகிறோம். நாங்கள் அகில இந்திய வானொலி மற்றும் தூர்தர்ஷன் நிலையங்களின் ‘ஏ' தரக் கலைஞர்கள். அகில இந்திய வானொலியில் பல்வேறு இசை நிகழ்ச்சிகளை அளித்து வருகிறோம்.இந்தியாவிலும் பிற உலக நாடுகளிலும் இசை நிகழ்ச்சிகளுடன் நாதஸ்வரம் தொடர்பான விரிவுரைகளையும் அளித்து வருகிறோம். எங்கள் பாட்டனாருடன் இணைந்தும், இருவர் மட்டுமேயும் ஏராளமான இசைத் தொகுப்புகளை வெளியிட்டு இருக்கிறோம்.

நாங்கள் திருமலை திருப்பதி வெங்கடேஸ்வரர் ஆலயத்தின் சிறப்பு வித்வான்களாக நியமிக்கப்பட்டு., பிரம்மோத்சவம் உட்பட கோவிலின் விசேஷங்களுக்கு சிறப்பு நாதஸ்வரம் வாசிக்கும் பெரும் பாக்யம் பெற்றுள்ளோம். காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகளால் கௌரவிக்கப் பட்டிருக்கிறோம். சிருங்கேரி சாரதா மடத்தின் ஆஸ்தான வித்வான்களாக நியமிக்கப்பட்டுள்ளோம். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத் திருவிழாக்களில் வாசிக்கும் திருப்பணியிலும் ஈடுபட்டு வருகிறோம். திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் படித்து BSc பட்டம் பெற்றுள்ளோம். இந்திய அரசின் பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கிறோம். கலா சரஸ்வதி, கலைமாமணி, பொங்கு தமிழ் அமைப்பின் விருது போன்ற எண்ணற்ற விருதுகளைப் பெற்றிருககிறோம். தமிழக முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களால் தமிழக அரசின் கலாசாரத் துறையின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுப் பணிபுரிந்துள்ளோம்.

கே: நாதஸ்வரம் என்னும் இசைக் கருவியைப் பற்றிச் சொல்லுங்கள்....

காசிம்: நாதஸ்வரம் என்னும் குழலிசைக் கருவி ஆண்டவனால் அளிக்கப்பட்டதாக ஐதீகம். தொன்மைக் காலம் முதலே ஆண்டவன் சன்னிதியில் வாசிக்கப்பட்டு வருகிறது. முதலில் திருவாரூர் தியாகேசன் அளித்த தந்தத்தினாலான நாதஸ்வரமும், பின்னால் கல்லால் ஆன நாதஸ்வரமும் பயன்படுத்தப் பட்டு வந்துள்ளது. பின்னர் மரத்தில் செய்யப்பட்ட கருவிகள் புழக்கத்துக்கு வந்தன. இப்பொழுது இரண்டு விதமான கருவிகள் உள்ளன. ஆச்சா மரம் என்னும் உறுதியான மரத்தினால் இந்தக்கருவி செய்யப்படுகிறது. கும்பகோணம் அருகே உள்ள நரசிங்கம்பேட்டையில் செய்கிறார்கள். திமிரி வகை குழல் உச்ச ஸ்தாயியில் வாசிக்க ஏற்றது. காதுக்கு இனிமையாகவும், மென்மையாகவும் சற்று கீழ் ஸ்தாயியிலும் வாசிக்க ஏற்றது பாரி வகைக் கருவியாகும். பாரி நாயனத்தில் டி, டி ஷார்ப் என இரண்டு வகை உள்ளன. டி வகை நாதஸ்வரம் 2 கட்டை சுருதி அளவிற்கும், டி ஷார்ப் வகை நாதஸ்வரம் 2.5 கட்டை அளவுக்குமாகப் பயன்படுத்தப் படுகிறது. டி வகை நாதஸ்வரம் சற்று நீளமானதாக இருக்கும். சிறு வயதில் நாதஸ்வரம் கற்றுக் கொள்ள ஆரம்பிக்கும் பொழுது அவர்களது விரல்கள் சிறியனவாக இருக்கும். அதற்கு ஏற்றாற் போல ஆரம்பப் பயிற்சிக்கு திமிரி வகை நாதஸ்வரம் பயன்படுத்தப் படுகிறது. அவர்கள் விரல் வளர்ச்சி அடைந்த பின்னால் பாரி வகை நாதஸ்வரங்களைப் பயன்படுத்த ஆரம்பிப்பார்கள்.

கே: நாதஸ்வர வாசிப்பின் பல்வேறு பாணிகள் யாவை? நீங்கள் எந்தப் பாணியைப் பின்பற்றுகிறீர்கள்?

காசிம்: நாதஸ்வர இசையில் செம்பனார்கோவில் பாணி, திருவீழிமிழலை பாணி, திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை பாணி என்று பல பாணிகள் உள்ளன. இதில் செம்பனார் கோவில் பாணி தாளத்திற்கு முக்கியத்துவம் அளிப்பது. திருவீழிமிழலை கீர்த்தனைகளுக்கும், வாய்ப்பாட்டுக்கும் முக்கியத்துவம் அளிப்பது. எங்கள் தாத்தா பின்பற்றியது ‘நாதஸ்வர சக்ரவர்த்தி' திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை அவர்களது பாணியாகும். தாத்தாவின் மானசீக குரு பிள்ளை அவர்கள். சங்கீத கலாநிதி பட்டத்தை சங்கீத வித்வத்சபையில் பெற்றபொழுது அதை ராஜரத்தினம் பிள்ளையவர்களுக்கே அர்ப்பணிப்பதாக மேடையில் கூறினார். இந்தப் பாணியில் ராக ஆலாபனைகக்கு முக்கியத்துவம் அளிக்கப் படுகிறது.

கே: நாதஸ்வர பாணி வாய்ப்பாட்டு என்பது என்ன? அவை எங்கு இணைகின்றன?

காசிம்: கர்நாடாக இசைப் பிதாமகர்கள் நாதஸ்வர இசையை உன்னிப்பாக கவனித்து அந்தப் பாணியிலேயே ராக ஆலாபனைகளை அமைத்தனர். வாய்ப்பாட்டும், நாதஸ்வரமும் இணைந்து செல்பவை. ஒன்றுக்கு ஒன்று உறுதுணையாக உள்ளவை, இரண்டு கலைஞர்களுமே ராக ஆலாபனைக்கு இரண்டு இசையையுமே பயன்படுத்திக் கொள்கிறார்கள். நாதஸ்வரம் நீண்ட கார்வையை அளிக்க வல்லது. அதைப் பின்பற்றிய பாட்டு அதே போன்ற விளைவை அளிக்கும். மஹாராஜபுரம் விஸ்வநாத ஐயர், ஜி.என்.பி., செம்மங்குடி போன்றவர்கள் நாதஸ்வர இசையில் தங்கள் கற்பனை வளத்தைச் சேர்த்துப் பாட்டில் பல்வேறு இயல்பான மாறுதல்களைக் கொணர்ந்தவர்கள். ராக ஆலாபனையில் தங்கள் கலைத்திறனின் உச்சத்தைக் காண்பிக்க உதவியது நாதஸ்வர இசையே. டி.என். சேஷகோபாலன், சஞ்சய் சுப்ரமணியம், டி.எம். கிருஷ்ணா போன்றவர்களும் இவ்வாறே ஆலாபனையைக் கட்டமைக்கிறார்கள். நாங்கள் இருவரும் தினமும் வாய்ப்பாட்டுப் பயிற்சியும் செய்கிறோம். குரலிசையும் நாதஸ்வரமும் உருவாகிய காலம் முதலே இவை இரண்டும் ஒன்றுடன் ஒன்று இணைந்து, ஒன்றை ஒன்று மேம்படுத்தி வளர்ந்து வருகின்றன. வேறெந்த இசைக் கருவியையும் விட நாதஸ்வரம் வாய்ப்பாட்டுக்கு் வெகு அருகில் வரக்கூடியது.

கே: நாதஸ்வர இசையின் கால வளர்ச்சி குறித்து? தமிழிசை என்பது எதைக் குறிக்கிறது பண்ணையா, சொல்லையா ?

##Caption## காசிம்: தொல்லிசை இலக்கணம் உருவான பொழுது 12 பண்கள் இருந்தன. தேவார இசை, இந்த 12 பண்களின் அடிப்படையிலேயே இசைக்கப்படுகிறது. அதன் பிறகு புரந்தரதாசர், தமிழ் மூவர், சங்கீத மும்மூர்த்திகள், அன்னமாசாரியார் போன்றோர் கர்நாடக இசையின் இலக்கணத்தை மேலும் முறைமைப் படுத்தினர். பல்வேறு ராகங்களுக்குக்கு இடையேயான பல்வேறு இணைப்பு ஆராய்ச்சிகள் மூலமாக ராகங்கள் வளர்ந்தன. வெங்கடமயி காலத்தில் இசை இலக்கணம் முதிர்ச்சி அடைந்தது. மேலும் முகலாய சாம்ராஜ்யம் ஹிந்துஸ்தானத்திற்குள் வந்ததால் பல்வேறு புதிய ராகங்கள் கர்நாடக இசைக்குக் கொடையாகக் கிட்டின. இப்படியாகக் கால வளர்ச்சியில் தொடர்ந்து செய்யப்பட்ட ஆராய்ச்சிகளின் விளைவாகவும், பிற இசை மரபுகளிடம் இருந்து பெற்றுக்கொண்டும் இப்பொழுது இருக்கும் கர்நாடக இசை இலக்கணம் வளர்ச்சி அடைந்தே வந்துள்ளது. ஹிந்துஸ்தானியில் இருந்து முக்கியமாக தர்பாரி கானடா, யமுன் கல்யாணி, பாகேஸ்வரி போன்ற ராகங்கள் தென்னிந்திய இசை மரபில் பலத்த தாகக்த்தை ஏற்படுத்தின. ஒரு ராகத்தில் எந்த மொழியில் இயற்றப்பட்ட பாடலையும் இட்டுப் பாடலாம். சங்கராபரணத்தில் வாசிக்கும் பொழுது தமிழில் இயற்றப்பட்ட பாடலையும் வாசிக்கலாம், தெலுங்குப் பாடலையும் இசைக்கலாம். ஆகவே தமிழில் இயற்றப்பட்ட பாடல்களையே தமிழிசை என்று அழைக்கிறார்கள் என்று நினைக்கிறேன். இசை என்பது மொழிகள் தாண்டிய ஒரு தெய்வீக உணர்வு, பரம்பொருளுடன் மானுடர்களை இணைக்கும் இணைப்புச் சக்தி. தெரிந்த மொழியில் ஒரு பாடல் இசைக்கப்படும் பொழுது நம் ரசனை இன்னும் சற்று கூடுகிறது. அனுபவம் மேம்படுகிறது.

ஆரம்பத்தில் கோவில்களில் மட்டுமே நாதஸ்வரம் இசைக்கப்பட்டது. வர்ணம், தேவாரம், கீர்த்தனைகள், திருப்புகழ் இசைக்கவும் பண்டிதர்கள் புரிந்து கொள்ளவும் மட்டுமே என்று இருந்தது. காலப் போக்கில் பல புதிய முயற்சிகள் புகுத்தப்பட்டு இன்று பாமர ரசிகர்களையும் ஈர்க்கக் கூடியதாக வளர்ந்து நிற்கிறது.

இசை என்பது ஒரு மொழி, ஒரு பாணியுடன் மட்டுமே என்றும் தேங்கி நின்று விடுவதில்லை. கபீர்தாஸ் பஜன்கள், அபங்க், அஷ்டபதி ஸ்தோத்ரம் என்று இன்று மொழி, வட்டாரம் தாண்டி அனைத்துப் பாணி இசைகளும் நாதஸ்வர வாசிப்பில் இடம் பெறுகின்றன.

கே: கச்சேரிகளில் தமிழிசைப் பாடப் படுவதில்லை என்னும் குற்றச்சாட்டு குறித்து?

காசிம்: அதில் உண்மையில்லை. இன்று எல்லா இசைக் கலைஞர்களும் தமிழ்ப் பாடல்களை இசைத்தே வருகிறார்கள். உண்மையை உணராமல், புரியாமல் சாட்டப்படும் குற்றச்சாட்டு இது. இசை எந்த உருவில் இருந்தாலும் அது ரசிக்கப்பட வேண்டியது, அனுபவிக்கப்பட வேண்டியது. அதனால்தான் பாரதியார் சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து என்று பாடினார். தியாகையரும், ஷியாமா சாஸ்திரிகளும் அனைத்துத் தரப்பினரும் ரசிக்கக் கூடிய வகையில் கீர்த்தனைகளை இயற்றியுள்ளார்கள். அவற்றின் எளிமை, அர்ப்பணிப்பு, தெய்வீகம் காரணமாக அவர்களது கீர்த்தனைகள் காலத்தைக் கடந்து என்றும் அழியாமல் நிலைத்து நிற்கின்றன. ‘அங்காரகம் ஆஸ்ரயாம்யஹம்' என்று தொடங்கும் செவ்வாய் கிரகத்தைப் போற்றும் முத்துச்சாமி தீட்சதரின் கிருதியைக் கேட்க்கும் பொழுது அதில் வரும் "மங்கலவாரம் பூமிகுமாரம்" போன்ற வரிகளில் உள்ள தீர்க்கதரிசனம் ந்ம்மை வியக்க வைக்கிறது.

கே: நாதஸ்வர இசையில் எத்தனை பேர் இடம்பெறுவது உசிதம்?

காசிம்: ஒருவர் நாதஸ்வரம் வாசிப்பதும் ஒருவர் தவில் வாசிப்பதுமே முறையாக இருந்தது. ஆனால் தற்பொழுது இரண்டு நாதஸ்வ்ர கலைஞர்களும், இரண்டு தவில் கலைஞர்களும் வாசிப்பது மட்டுமே வழக்கமாகி விட்டது. இதில் சில வசதிகள் உள்ளன. இரண்டு பேர் வாசிக்கும்பொழுது ஒருவருக்கு ஒருவர் மாற்றி மாற்றிச் சற்று ஓய்வு கொடுக்கலாம். இரண்டு நாதஸ்வரங்கள் இசைக்கையில் கம்பீரம் கூடி ஒருவித ஸ்டீரியோஃபோனிக் விளைவு கிட்டுகிறது.

கே: நாதஸ்வர இசையின் வளர்ச்சிக்காக நீங்கள் ஆற்றும் பங்கு என்ன?

காசிம்: எங்கள் தாத்தா ஆரம்பித்து வைத்த நாதஸ்வரப் பள்ளியான சாரதா சங்கீத நாதஸ்வர ஆசிரமம் என்ற பள்ளியை, பாரம்பரியம், மங்கல மேன்மை, தொன்மை கொண்ட இந்த இசையினை அழியாமல் காக்கவும் அடுத்த தலைமுறை இளைஞர்களிடம் எடுத்துச் செல்லும் உன்னத நோக்கத்துடனும் நடத்தி வருகிறோம். டாக்டர் சின்ன மவுலானா மெமோரியல் டிரஸ்ட் என்ற அமைப்பையும் நடத்தி வருகிறோம். இந்த அமைப்பின் மூலம் நாதஸ்வர இசையை உலகெங்கும் பரப்பி வருகிறோம். இந்த அமைப்பின் மூலம் இளம் இசைக்கலைஞர்களுக்கு உதவி செய்து ஊக்குவித்து வருகிறோம். சற்று ஏழைமை நிலையில் உள்ள வளரும் கலைஞர்களுக்கு நாதஸ்வரம் வாங்கிக் கொடுக்கிறோம், நலிந்த இசைக் கலைஞர்களுக்குப் பொருளுதவி செய்கிறோம். அனைத்து நாதஸ்வர மேதைகளின் வாசிப்புக்களைச் சேகரித்து இசை நூலகம் ஒன்றை ஏற்படுத்தி வருகிறோம். அந்த நூலகத்தை உலகமெல்லாம் இருக்கும் நாதஸ்வர ரசிகர்களின் வசதிக்காக ஒரு ஆன்லைன் இணையதள நூலகமாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம். இதுவரை எங்கள் தாத்தாவின் 200 மணி நேரத்துக்கு மேலான கச்சேரிகளைத் தொகுத்து ஆல்பங்களாகச் சேமித்து வைத்துள்ளோம். அந்த ஆன்லைன் நூலகத்தின் முகவரியைத் தென்றல் வாசகர்களுக்கு விரைவில் அறியத் தருகிறோம். நாதஸ்வர இசையைக் கற்றுக்கொள்ளும் கலைஞர்களின் சந்தேகங்களைப் போக்கவும் பல்வேறு உதவிகளை அளிக்கும் தளமாகவும் அந்த இணைய நூலகம் அமையும். பிற மாநிலங்களிலுள்ள அரசு அமைப்புக்கள் மற்றும் தனியார் சங்கங்களுடன் தொடர்பு கொண்டு வளரும் கலைஞர்களுக்கு இசை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து தருகிறோம்.

கே: வளரும் இசைக் கலைஞர்களுக்கு உங்கள் அறிவுரை?

காசிம்: நிறைய அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பு முதலில் அவசியம். நவீன தொழில்நுட்பங்களைப் பயிற்சிக்குப் பயன்படுத்திக் கொள்ளுதல் வேண்டும். உதாரணமாக இப்பொழுது எம்பி3 ப்ளேயர், ஐ பாட், யு ட்யூப், இணையம் போன்ற எத்தனையோ நவீன வசதிகள் வந்துள்ளன. அந்தக் காலத்தில் குருகுலக் கல்வியில் குருவிடம் மிகுந்த தயக்கத்திற்கு பின்னரே சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவு பெற முடியும். ஒரு முறைக்கு மேலே கேட்க பயமாக இருக்கும். ஆனால் இந்தக் காலத்தில் நாம் வீடியோக்களில் எத்தனை முறை வேண்டுமானாலும் திருப்பித் திருப்பிப் போட்டுப் பார்த்து எதையும் ஐயம் திரிபறக் கற்றுக் கொள்ளலாம். ஆடியோவைக் கேட்டுக் கேட்டு இசையின் நுட்பங்களை கிரகித்துக் கொண்டு நம் திறனை வளர்த்துக் கொள்ளலாம். நிறைய கேட்க வேண்டும். உன்னிப்பாக கவனிக்க வேண்டும். முழுமையான குறையற்ற இசைக்கு முயன்று கொண்டே இருத்தல் வேண்டும். நிறையப் பயிற்சி செய்ய வேண்டும். நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் கேட்டலோ வாசித்தலோ செய்து கொண்டேயிருத்தல் வேண்டும்.

சந்திப்பு: ச.திருமலைராஜன்

பெட்டிச் செய்தி:

இசை மதத்துக்கு எதிரானதா?

இசையை மதத்துக்கு எதிரானதாகக் கருதுவது மிகவும் தவறான செயல். நுண்கலைகளை எதிர்ப்பவர்கள் தாம் என்ன செய்கிறோம் என்று புரியாமல் செய்கிறார்கள். இசையில்லாமல் இந்த உலகு இல்லை. இறைவன் என்பவன் இந்தப் பிரபஞ்சம் முழுவதும் நிறைந்துள்ளான். நடராஜனின் சிவதாண்டவம் பிரபஞ்சத்தின் காஸ்மிக் இயற்பியலையே குறிப்பால் உணர்த்துகிறது. ஒவ்வோர் அணுவுக்குள்ளும் ஆண்டவன் பரிபூரணமாக நிறைந்துள்ளான். இறைவனை ஓங்கார ரூபனாக வழிபடுவதே இசை. குயிலின் ஓசையும், காற்றின் நாதமும், அருவியின் தாளமும் இந்த உலகமும் முழுவதும் நீக்கமற நிறைந்திருக்கும் இயற்கை என்னும் இசை வடிவங்களே. இசை எதிரானது என்றால் இறைவனே எதிரானவன் என்றல்லவா அர்த்தம் ஆகிறது? இந்தியாவின் இசைக் கலைஞர்கள் அனைவருமே மதமாச்சரியம் இன்றி எங்கும் நிறைந்திருக்கும் ஈசனுக்கு தங்கள் இசையை அர்ப்பணித்தவர்களே.

*****


பிஸ்மில்லா கானின் இரண்டு நிபந்தனைகள்

ஷெஹனாய் மேதை பிஸ்மில்லா கானைச் சந்திக்க அவரது அமெரிக்க ரசிகர்கள் வந்திருந்தார்கள். காசியில் நிலவும் சுத்தமற்ற சூழ்நிலையைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் "இந்த இடத்திலா நாங்கள் பெரிதும் மதிக்கும் எங்கள் மாயிஸ்டரோ வசிப்பது? உடனே எங்களுடன் கிளம்பி வாருங்கள், அமெரிக்காவில் உங்களுக்குக் குடியுரிமை, வசதியான வீடு, அமைதியான வாசிப்புச் சூழல்" அமைத்துத் தருகிறோம் என்றார்கள். பிஸ்மில்லா கான் அவர்களோ "உங்கள் அன்பு என்னை உருக்கி விட்டது. உங்கள் அன்பிற்கு நான் கட்டுப்படுகிறேன். ஆனால் நான் அமெரிக்கா வந்து தங்குவதற்கு இரண்டு உதவிகள் செய்ய வேண்டும்: இங்கிருக்கும் புனித கங்கையை அங்கு இடமாற்றம் செய்ய வேண்டும்; அதைவிட முக்கியம் நான் அன்றாடம் அதிகாலை என் இசையால் வணங்கும் என் அப்பன் காசி விஸ்வநாதனையும், காசி விஸ்வநாதர் கோவிலையும் அங்கு இடம்பெயர்க்க வேண்டும், அப்படி முடிந்தால் நான் வருகிறேன்" என்றார். அப்படி ஒவ்வோர் இசைக்கலைஞரும் இசைப்பணியை இறைப்பணியாக அர்ப்பணித்துச் செய்து வருகிறோம். கேரளத்தில் உள்ள செங்கணாச்சேரி தர்காவில் ஒவ்வொரு வருடமும் நாங்கள் வாசித்து வருகிறோம், தர்காவில் துவங்கும் வீதியுலா நேராக அம்மன் கோவிலுக்குச் செல்லும்.அங்கு வாசித்துவிட்டு சர்ச்சில் வாசிப்போம்.பின்னர் தர்காவுக்குச் சென்று வாசிப்போம். இசை என்பது மதம், மொழி, இனம், ஜாதி, தேசம் அனைத்தையும் கடந்தது. ஆண்டவனுடன் இரண்டறக் கலந்தது. ஸ்ரீரங்கநாதருக்கு எங்கள் தாத்தா ஒரு தாசர். தன் இறுதி மூச்சையே ஸ்ரீரங்கநாதர் காலடியில் ஸ்ரீரங்கத்தில்தான் விட்டார். திருப்பதியிலும், ஸ்ரீரங்கத்திலும் நாங்கள் ஆஸ்தான கோவில் வித்வான்களாக நியமிக்கப்பட்டிருப்பது எங்கள் புண்ணியம்.

*****

© TamilOnline.com