தென்றல் பேசுகிறது...
மெல்ல மெல்ல ஊர்ந்து, தவழ்ந்து, நகர்ந்து கொண்டிருந்த 'தென்றல்' குழந்தை, ஓட்டம் பிடிக்கும் பத்துவயதுப் பாலகனாகி விட்டது. பார்த்துக் கொண்டே இருப்பவர்களுக்கு வளர்ச்சி புரிபடாது என்பார்கள். ஆனால், தென்றல் வாசகர்களும் சரி, விளம்பரதாரர்களும் சரி அதன் வளர்ச்சியை, செயல்பாட்டை, சரியான திக்கை நோக்கி நகர்வதை, கூர்ந்து கவனிப்பதோடு எங்களுக்குச் சொல்லியும் வருகிறார்கள்.

எத்தனை சுவையான பத்து ஆண்டுகள்! சிறிய அளவில், ஏதோ கலிஃபோர்னியாப் பத்திரிகையோ என்று சந்தேகிக்கும்படித் தொடங்கிய தென்றல், இன்று அமெரிக்காவின் 30 மாநிலங்களிலும் ஒரு நகரையாவது சென்றடைகிறது. எங்கெல்லாம் தமிழ்ச் சமுதாயம் உள்ளதோ, அங்கெல்லாம் தென்றல் சென்று தொடும் என்று சொல்லுமளவுக்கு வளர்ந்துவிட்டது. இந்த வளர்ச்சி எண்ணிக்கை, வீச்சு குறித்தது மட்டுமல்ல.

சிலரே, சில விஷயங்களை மட்டுமே திருப்பித் திருப்பி எழுதியதில்தான் தொடங்கியது. அப்போது தொடங்குவது முக்கியமாக இருந்தது. காலூன்றுவது முக்கியமாக இருந்தது. ஆனாலும் அமெரிக்கத் தமிழர்களுக்கு ஒரு பாலமாக அமைவோம் என்பதில் சந்தேகம் இருக்கவில்லை. வெவ்வேறிடத்தில் பூத்துக் குலுங்கும் தமிழ்ப் பூங்காக்களின் மகரந்தத்தைச் சுமந்து சென்று பிறவிடத்துப் பூங்காக்களைச் சூலுறச் செய்வோம் என்ற இலக்கில் சந்தேகம் இருக்கவில்லை. இணைப்போமே அன்றிப் பிரிக்க மாட்டோம் என்பதில் உறுதியாக இருந்தோம். தமிழ் மண்ணில் பெயரும் புகழும் பெற்றோர் குறித்த தகவல்களைச் சுமப்போம்; ஆனால் இங்கேயும் அவர்க்கிணையான ஆற்றலும் உரமும் பெற்றோர் உள்ளனர், அவர்களை வெளிச்சம் போட்டுக் காட்டுவோம் என்பதில் உறுதியாக இருந்தோம். இருக்கிறோம்.

டாக்டர் சித்ரா வைத்தீஸ்வரன், எல்லே சுவாமிநாதன், அம்புஜவல்லி தேசிகாச்சாரி, டாக்டர் வரலட்சுமி நிரஞ்சன், கதிரவன் எழில்மன்னன், தங்கம் ராமசாமி என்று நீளும் பட்டியலில் எத்தனை எழுத்தாளர்கள் எத்தனை துறைகளில் வாசகர்களைச் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்திருக்கிறார்கள்! 'எழுத்தாளர்' பகுதியில் தமிழகத்தின் முன்னணி எழுத்தாளர்களை மட்டுமல்லாமல் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை போன்ற நாடுகளில் தமிழுக்கு வளமூட்டுவோர் பற்றிய வரலாற்றுக் குறிப்புகளையும் ஆவணப்படுத்தியுள்ள ஒரே இதழ் தென்றல்தான். ஒரு சோறு பதமாக அவர்களது ஒரு கதையையும் உடன் வெளியிட்டு வருவதும் தென்றல்தான்.

இதற்கிணையாக வேறொன்று இல்லை என்று கூறுமளவுக்கு மாதந்தோறும் குறுக்கெழுத்துப் போட்டியை வடிவமைத்துத் தருகிறார் டாக்டர் வாஞ்சிநாதன். நமது எழுத்தாளர்களான டாக்டர் அலர்மேலு ரிஷி, ஹரி கிருஷ்ணன் போன்றோரின் நூல்களைத் தமிழகத்தின் வெவ்வேறு பதிப்பகங்கள் கேட்டு வாங்கி வெளியிடுகின்றன. அமெரிக்காவின் தொலைதூர மூலைகளிலிருந்து வாசகர் கடிதங்கள், நிகழ்வுகளின் அறிக்கைகள், புகைப்படங்கள், துணுக்குகள், நேர்காணல்கள் ஆகியவற்றை அனுப்பியும், தத்தமது பகுதியில் தென்றலை வழங்குவதற்கு மேலதிக உழைப்பு நல்கியும் உதவும் எண்ணற்ற நண்பர்களை எங்கே பட்டியலிடுவது? அவர்களுக்கு எப்படி நன்றி கூறுவது?

இத்தனை செறிவான உள்ளடக்கம் கொண்டதொரு மாத இதழைக் கொண்டு வருவதைச் சாத்தியப்படுத்துவது விளம்பரதாரர்கள்தாம். நம்பிக்கையோடும் நட்புணர்வோடும் தொடக்கத்திலிருந்தே தென்றலில் விடாப்பிடியாக விளம்பரம் செய்பவர்கள் உள்ளனர். புதிதாக வந்தவர்களும் தென்றலின் பெருமையை அறிந்தே செய்கிறார்கள் என்பது அவர்களிடம் பேசும்போது தெரிய வருகிறது. தென்றல் விளம்பரதாரர்களுக்கு வணிக நோக்கம் உண்டு, ஆனால் அவர்களும் தென்றலைப் போலவே, ஒரு சமுதாயக் கடமையையும் செய்கிறார்கள். தென்றல் வாசகர்கள் அதை உணர்ந்து அவர்களைத் தேடிச் சென்று ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

*****


பத்தாம் ஆண்டில் மகிழ்ச்சியோடு காலடி வைக்கும் இதே சமயத்தில் இணைய இதழையும் (www.tamilonline.com) புதிய பொலிவோடும், இணையத்துக்கே உரிய புதிய அம்சங்களோடும் தரத் தொடங்கிவிட்டோம். சுமார் 56 நாடுகளிலிருக்கும் தமிழர்கள் இதனைப் பார்த்துப் பயனடைகிறார்கள் என்பது எங்களுக்கு நிறைவையும் அதிகப் பொறுப்புணர்ச்சியையும் தருகிறது.

*****


அமெரிக்காவுக்கு 60களிலேயே வந்து இந்திய சமுதாயத்துக்குப் பலவகைச் சேவைகள் செய்த சாம் கண்ணப்பன், ஷேக் சின்ன மௌலானாவின் வழித்தோன்றல்களான காசிம்-பாபு சகோதரர்கள் ஆகியோரின் பேட்டி இந்த இதழைச் சிறப்புறச் செய்கின்றன. டிசம்பர் சீஸனுக்கேற்ப 'முன்னோடி' பகுதியில் செம்மங்குடி இடம்பெறுவதோடு, பல சுவையான இசைக்கலைஞர்களைக் குறித்த துணுக்குகளையும் வாசித்து மகிழலாம். தமிழகம் மேடையேற்ற முடியாத பொன்னியின் செல்வனை அமெரிக்கா மேடையேற்றியதைப் பற்றிய விரிவான குறிப்பை வியக்க வைக்கும் படங்களோடு கண்டு களிக்கலாம். தென்றலுக்கே உரித்தான நல்ல சிறுகதைகள் இந்தச் சிறப்பிதழையும் சிறக்கச் செய்கின்றன.

வாசகர்களுக்கு கிறிஸ்துமஸ், திருக்கார்த்திகை வாழ்த்துகள்!


டிசம்பர் 2009

© TamilOnline.com