"நாடகக் கலை மீது கொண்ட அளவில்லா ஆர்வம், சென்னையில் வசித்தபொழுது மேடை மற்றும் டி.வி. சீரியல்களில் நடித்த அனுபவம் இவையெல்லாம் இருந்தால் எப்படிச் சும்மா இருக்க முடியும்?" என்று கேட்கிறார்கள் கலைச் சகோதரர்கள் பார்த்தா சங்கராவும் (மிசிசங்கா, கனடா), கிருஷ்ணா சங்கரும் (ஆஸ்டின், டெக்ஸாஸ்). தந்தை சங்கு அந்த நாட்களில் பிரபல நாடகக் கலைஞர். பள்ளிப்பருவத்தில் தந்தை மற்றும் பிற நடிகர்களின் நாடகங்களைப் பார்த்து வளர்ந்த காரணத்தால் நடிப்பில் இவர்களுக்கு அபரிதமான ஈர்ப்பு ஏற்பட்டது.
மூத்த சகோதரர் பார்த்தா, கனடாவில் மிசிசங்கா கிரியேஷன் (Mississanga Creations) என்ற பெயரில் ஒரு குழுவும், இளையவர் கிருஷ்ணா ஆஸ்டினில் 'கலாலயா' என்ற பெயரில் ஒரு குழுவும் ஏற்படுத்தி நாடகங்களை மேடையேற்றி வருகின்றனர். இருவருமே, பிரபல சின்னத்திரை நடிகர் டெல்லி குமாரிடம் பயிற்சி பெற்று, அவருடன் மேடையில் சேர்ந்து நடித்துள்ளனர். "வட அமெரிக்காவின் துரிதகதி வாழ்க்கையில், நாடகம் போடுவது என்பது எங்களைப் பொருத்தவரையில் ஒரு சிறந்த ரிலாக்சேஷன்" என்கிறார் பார்த்தா சங்கரா.
நகைச்சுவையோ, சீரியஸ் நாடகமோ எதுவானாலும் நல்ல கதையுள்ள நாடகங்களை ரசிகர்கள் வரவேற்கிறார்கள் என்று இருவரும் சொல்கிறார்கள். தமது நாடகங்களுக்குக் கதை, வசனம், இயக்கம் தாமே பெரும்பாலும் செய்கிறார்கள். வட அமெரிக்காவில் வாழும் தமிழர்களின் ரசனை மற்றும் எதிர்பார்ப்பு சற்றே வித்தியாசமாக இருப்பதால் அதற்கு ஏற்றவாறு கதை மற்றும் காட்சியமைப்புச் செய்ய வேண்டிய தேவை உள்ளது; பெரியவர் முதல் சிறியவர்வரை எல்லோரும் குடும்பத்துடன் சேந்து ரசிக்கும் நாடகங்களைச் செய்வதே எங்கள் குறிக்கோள் என்றும் சொல்கிறார்கள்.
குறும்படங்கள் எடுப்பதிலும் கிருஷ்ணாவுக்கு ஆர்வம் உண்டு. சமீபத்தில் அவர் எடுத்த 'You Can' என்ற குறும்படம் NewYear Independent Film Festival-ல் திரையிடத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மயிலாப்பூரோ இல்லை மிசிசங்காவோ, அடையாறோ இல்லை ஆஸ்டினோ எங்கிருந்தாலும் எங்கள் கலைப்பயணம் தொடரும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள் இந்தக் கலைச் சகோதரர்கள்.
தொடர்புகொள்ள: Partha: msps007@hotmail.com Krishna: Directionfx@gmail.com
லதா சந்திரமௌலி |