குழந்தைகளே! தீபாவளி பட்சணமெல்லாம் ஜீரணமாயிடுச்சா? கதை கேக்கத் தயாரா?
ஒரு வயல்வெளியில் பாம்பு ஒன்று வாழ்ந்து வந்தது. அந்த வழியாகப் போவோர் வருவோரை எல்லாம் அது கொத்தியது. அதனால் அந்த வழியாகச் செல்வதற்கே மக்கள் அஞ்சினர். ஒருநாள் துறவி ஒருவர் அந்த வழியில் சென்றார். அந்தப் பாம்பு அவரையும் கொத்துவதற்குச் சீறிக்கொண்டு வந்தது. அதைக் கண்டு வருந்திய துறவி, இறைவனின் பெருமையை அதற்கு விளக்கி, "எந்த உயிருக்கும் தீங்கு செய்யக் கூடாது" என்ற அஹிம்சைத் தத்துவத்தைக் கூறி, அதை நல்வழிப்படுத்தினார். பின் தன் வழியே சென்று விட்டார்.
சில வருடங்கள் சென்றன. துறவி மீண்டும் அந்த வழியாக வந்தார். தான் உபதேசித்த அந்தப் பாம்பு எப்படி இருக்கிறது என்பதைக் காண விரும்பினார். தன் புற்றின் அருகே அந்தப் பாம்பு குற்றுயிரும் குலையுயிருமாகக் கிடந்தது. அதைப் பார்த்த துறவி மிகவும் வருந்தினார். "அடடா! ஏன் இப்படி ஆகிவிட்டாய்?" என்று அன்போடு அதனிடம் கேட்டார். அதற்கு அந்தப் பாம்பு, "நீங்கள் கூறியதையே நான் பின்பற்றினேன். யாருக்கும் துன்பம் தராமல் அமைதியாக வாழ்ந்தேன். அதனால் சிறுவர்கள் என்னைக் கல்லால் அடித்தனர். வாலைப் பிடித்துச் சுற்றித் தரையில் வீசினர். கம்பால் அடித்தனர்" என்று சொல்லி வருத்தப்பட்டது.
பாம்பு சொன்னதைக் கேட்டதும் துறவி, "முட்டாள் பாம்பே, உன்னைக் கடிக்க வேண்டாம், யாருக்கும் துன்பம் தர வேண்டாம் என்றுதான் கூறினேனே ஒழிய, யாரிடமும் சீறக்கூடாது என்று கூறவில்லையே! நீ சீறியிருந்தால் அவர்கள் உன்னருகில் வந்திருப்பார்களா? யாரையும் கொல்லக்கூடாது, ஆனால் தற்காப்புக்காக அச்சுறுத்தலாம்" என்று கூறினார்.
பாம்பும் தன் தவறை உணர்ந்து கொண்டது.
குழந்தைகளே, வீரத்துறவி சுவாமி விவேகானந்தரின் குருவாக விளங்கிய மகான், ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்ன கதை இது. அவர் இப்படி வாழ்க்கைக்குத் தேவையான தத்துவங்கள் கொண்ட பல சுவையான கதைகளைக் கூறியுள்ளார். சரி, அடுத்த மாதம் சந்திப்போமா?
சுப்புத்தாத்தா |