டெட்ராயிட் பராசக்தி ஆலய நவராத்திரி விழா
2009 செப்டம்பர் 19 முதல் 28வரை டெட்ராயிட் நகர் பராசக்தி ஆலயத்தில் நவராத்திரி விழா நாள்தோறும் சண்டி ஹோமம், நவகேசரி ஹோமம், சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள், இசை நிகழ்ச்சிகள், சொற்பொழிவுகள் என்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. ஆலயம் அமைத்துப் பத்து ஆண்டுகள் நிறைவானதை ஒட்டியும் விழா எடுக்கப்பட்டது. அவ்விழாவில் ஆலயத்திற்கு அள்ளி வழங்கும் வள்ளலும், ஸ்தாபகரும், தலைவருமான டாக்டர் ஜி. கிருஷ்ணகுமார் அவர்கள் 'மிகச் சோதனை மிக்க இந்நாட்களில் அன்னையின் அருளையும் பாதுகாப்பையும் பெறுவது எப்படி?' என்பது குறித்து கருத்துச் செறிவுள்ள சொற்பொழிவு ஒன்றை நிகழ்த்தினார். செப்டம்பர் 27, 28ம் தேதிகளில் அம்பிகையின் ரத ஊர்வலம் நடைபெற்றது. செப்டம்பர் 25ம் தேதி டாக்டர் கிருஷ்ணகுமார், உபதலைவர் பேராசிரியர் வெங்கட் ஹரி இருவரும் சனிப்பெயர்ச்சியின் விளைவுகள் குறித்து உரையாற்றினார்கள். சனி பகவானுக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது.

கடந்த பத்தாண்டுகளுக்குள் அன்னை பராசக்தியுடன், அய்யப்பன், நவக்கிரகங்கள், தாயாருடன் பெருமாள், நரசிம்மர், குபேர லிங்கம், முருகன், குருவாயூரப்பன், கொடுங்களூர் காளி, சோட்டாணிக்கரை அம்மன் என்று பல்வேறு தெய்வங்களுக்கும் தனிச் சன்னதிகள் அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

உமையாள் முத்து,
டெட்ராயிட்

© TamilOnline.com