சிகாகோவில் ஸ்ரீ மஹாருத்ரம்
2009 அக்டோபர் 2, 3, 4 தேதிகளில் சிகாகோ நகரில் காஞ்சி காமகோடி சேவை நிறுவனத்தின் மத்திய அமெரிக்கக் கிளை ஸ்ரீ மஹாருத்ர யக்ஞத்தை உலக நன்மை கருதியும் காஞ்சிப் பெரியவரின் ஜெயந்தியையும் முன்னிட்டு மிக பிரம்மாண்டமான முறையில் வில்லோப்ரூக்கில் உள்ள சின்மயா மிஷன் வளாகத்தில் நடத்தியது. ஒரே நாளில் 130க்கும் அதிகமான வேத மாணவர்களைக் கொண்டு ஸ்ரீ மஹாருத்ர யக்ஞ்ம் நடத்துவது அமெரிக்காவில் இதுவே முதல்முறை. இந்த விழாவில் கலந்து கொள்ள அமெரிக்காவின் பல மாகாணங்களிலிருந்தும், கனடாவிலிருந்தும் பக்தர்கள் திரண்டு வந்திருந்தனர். இந்தியாவில் கடைப்பிடிக்கப்படும் வேத நியதிகள் அனைத்தும் இங்கேயும் பின்பற்றப்பட்டன. இந்த வேள்விக்குப் பிரதான ஆச்சார்யராக ஸ்ரீ சந்திரசேகர குருக்கள் முன்னின்று நடத்தி வைத்தார். இவரைத் தவிர 14 வேத பண்டிதர்கள் கலந்துகொண்டனர். இதில் சதுர்வேத பண்டிதர்களும் அடக்கம்.

அக்டோபர் 2 அன்று காலை, மங்கள வரவேற்புடன் வேத மந்திரங்கள் முழங்க மஹா பெரியவர் மற்றும் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஆகியோரின் பாதுகைகள் மண்டபத்தில் பூரண கும்பத்துடன் வரவேற்கப்பட்டது. தொடர்ந்து ஸ்ரீ கணபதி ஹோமம், நவக்ரஹ ஹோமம் முதலியன நடந்தன. மதியம் ஸ்ரீ காஞ்சி மடத்தின் ஆஸ்தான வித்வான் ஸ்ரீ ரமணி பாகவதரின் நாமசங்கீர்த்தனையில் பக்தர்கள் நனைந்தனர். மாலையில் 108 பெண்மணிகள் ஸ்ரீ காஞ்சி காமாக்ஷி அம்மன் படத்திற்கு ஸ்ரீ லலிதா ஸஹஸ்ர நாமம் ஜபித்து குங்கும அர்ச்சனை செய்தனர். வாஷிங்டன் டி.சி.யைச் சேர்ந்த பண்டிதர் பாஸ்கரின் கைவண்ணத்தில் மூன்று குத்துவிளக்குகள் மூன்று தேவியராக நேர்த்தியாக அலங்காரம் செய்யப்பட்டிருந்தன.

இரண்டாம் நாள் காலையில் விஸ்வரூப தரிசனத்துடன் நாள் தொடங்கியது. இதனை அடுத்து 130 வேத மாணவர்களும், 15 வேத பண்டிதர்களும் கிட்டத்தட்ட 3 மணிநேரம் ஸ்ரீ மகான்யாசத்துடன் ஸ்ரீ மஹாருத்ர ஜபம் செய்தனர். அதே சமயம் சிவன், அம்பாள் மற்றும் அனைத்துப் பாதுகைகளுக்கும் ஒருசேர அபிஷேகமும் நடந்தது. மதியம் சுவாமி அமிதானந்தா "குரு பக்தி" என்ற தலைப்பில் அருளுரை ஆற்றினார். மாலை வேத பண்டிதர்கள் ஸ்ரீ பரமேஸ்வரனுக்கு ஸ்ரீ ருத்ர க்ரம அர்ச்சனை செய்தனர். இரண்டு நாட்களிலும் குழந்தைகளுக்கான ஸ்லோகம் சொல்லும் நிகழ்ச்சியில் எண்பதுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அனைவருக்கும் ஹிந்து தர்மம் பற்றிய புத்தகங்கள் பரிசாக அளிக்கப்பட்டன.

நிறைவு நாளன்று (ஞாயிறு) காலையில் விஸ்வரூப தரிசனத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. ஸ்ரீருத்ர ஹோம குண்டத்தைச் சுற்றி உட்கார்ந்த வேத பண்டிதர்கள் ஸ்ரீ ஏகா தச ருத்ர ஜபத்துடன் மஹாருத்ர ஹோமம் நடத்தி வைத்தனர். நியூ ஜெர்சி ஸ்ரீ மணி மாமா வேதத்தின் மகத்துவத்தை மிக அழகாக விளக்கினார்.

பூர்ணாஹூதியுடன் விழா இனிதே முடிந்தது. நிகழ்ச்சியின் வெற்றிக்குப் பெரிதும் காரணம் பொறுப்புடன் செயலாற்றிய தன்னார்வத் தொண்டர்களும் அவர்களை வழிநடத்திய சேதுராமன் அவர்களுமே என்று கூறமுடியும்.

அடுத்த ஆண்டு மே மாத இறுதியில் கலிபோர்னியாவில் உள்ள லாஸ் ஏஞ்சலஸ் நகரில் இந்த விழாவை நடத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும் விவரங்களுக்கு: www.maharudram.net.

மகேஷ்

© TamilOnline.com