வளைகுடாப் பகுதி தமிழ் மன்றம் வழங்கும் சரித்திர நாடகம் 'பொன்னியின் செல்வன்'
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் தொடங்கி முன்னூறு ஆண்டுகள் புகழ்பெற்று விளங்கிய சோழ சாம்ராஜ்யத்தைப் பற்றிய வரலாற்று ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு அமரர் கல்கி அவர்கள் எழுதிய புதினமான 'பொன்னியின் செல்வன்' வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றத்தின் தயாரிப்பில் மேடை நாடகமாகிறது. இந்த நீண்ட புதினத்தில் வரும் கதாபாத்திரங்களை நம் கண்முன் உலவவிடத் தயாராகிவிட்டனர் பாகீரதி சேஷப்பன், ஸ்ரீதரன் மைனர் மற்றும் வேணு சுப்ரமணியம் குழுவினர்.

பராந்தக சோழரின் மகன்கள் ராஜாதித்தியர், அரிஞ்சயர், கண்டராதித்தர், பாண்டிய நாட்டு போரில் இறந்த நான்காவது மகன் ஆகியோர். ராஜாதித்தியர் உயிர் நீத்ததும் அரிஞ்சயர் ஆட்சிக்கு வருகிறார். அரிஞ்சயரின் மறைவுக்குப் பிறகு ராஜ்ய ஆசை அறவே இல்லாத கண்டராதித்தர் மணிமுடி ஏற்கிறார். தனக்குப் பிறகு தன் தமையன் மகன் சுந்தரசோழரும் அவரது சந்ததிகளுமே அரசாள வேண்டும் என்றும், சோழர்குலத்தில் பிறக்காத தன் வளர்ப்பு மகன் மதுராந்தகர் அரியணை ஏறுவது நியாயமல்ல எனவும் அவரைச் சிவபக்திச்செல்வனாக வளர்க்கும்படியும் தன் மனைவியிடம் கூறிவிட்டு அவர் இறக்கிறார்.

சுந்தரசோழருக்குப் பிறகு, மூத்த மகன் ஆதித்த கரிகாலர் கொல்லப்பட, அவரது இரண்டாவது மகன் அருள்மொழிவர்மர் என்கின்ற பொன்னியின் செல்வரை அரியணை ஏற வேண்டுமென மக்கள் விரும்புகின்றனர். ஆனால் ஆதித்த கரிகாலருக்கு எதிராகச் சதி செய்யும் பெரிய பழுவேட்டரையரும் சிறிய பழுவேட்டரையரும் மதுராந்தகரை முடிசூட்டுவிக்க முயல மதுராந்தகரும் தகப்பனின் கட்டளைக்கு எதிராக அரசுரிமைக்காகப் போராடுகிறார். பெரிய பழுவேட்டரையரை மணந்து கொண்ட நந்தினி எல்லாவிதச் சதிவேலைகளையும் செய்கிறாள். இதற்கிடையே தூதுவனாகச் செல்லும் வந்தியத்தேவன் அனவருக்கும் உதவி செய்பவனாகவும், குந்தவையின் மனம் கவர்பவனாகவும் உருவெடுக்கிறான். இந்நிலையில், கண்டராதித்தனின் மகன் சேந்தன் அமுதன் வந்து சேர, அரசுரிமைக்கான போட்டி சூடு பிடிக்கிறது.

அரசுரிமை ஏற்பது பொன்னியின் செல்வரா, சேந்தன் அமுதனா? ஆதித்த கரிகாலரைக் கொன்றது யார்? நந்தினி ஏன் சோழ குலத்தைப் பழி வாங்கத் துடிக்கிறாள்? சுந்தர சோழனைக் கொல்ல முயற்சித்தவர் யார்? இப்படிப் பல கேள்விகளுக்கான விடைகளை நாடகத்தில் பார்க்கலாம்.

40க்கும் மேற்பட்ட கதாபாத்திரங்கள், பிரம்மாண்டமான அரங்க அமைப்புகள் ஆகியவற்றோடு மிகச் சுவையாக இந்த நாடகம் உருப்பெற்றுள்ளது. திரைப்படங்களின் ஆக்ரமிப்பு அதிகமாகி நாடகங்கள் நலிவடைந்த நிலையில் வளைகுடாப் பகுதியில் இப்படி ஒரு நாடகம் நடப்பதை பாராட்டி இந்தியாவில் இருந்து பல பிரபலங்கள் வாழ்த்துக்கள் அனுப்பியுள்ளனர்.

இந்தக் கதாபாத்திரங்களில் நடிக்கும் தமிழ் நாடக ஆர்வலர்கள் வாரத்தில் சுமார் 30 மணிநேரம் தங்கள் அலுவல்களுக்கு மத்தியில் நேரம் ஒதுக்கி, ஒருவருக்கொருவர் உதவிக் கொண்டும் இதைச் செதுக்கி வருகிறார்கள். சென்ற வாரம் Its Diff வானொலி நிகழ்ச்சியின்போது இந்நாடகம் பற்றி அழைத்துப் பேசியவர் ஏராளம். இந்நாடகத்தை மொழியே தெரியாத வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்களும், வசனமே இல்லாத ஊமைக் கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார்கள்.

இந்நாடகத்துக்கு மேடைவடிவம் கொடுத்து இயக்குகின்ற பாகீரதி சேஷப்பன், இந்நாடகத்துக்கு ஊக்கம் கொடுத்து வெளிவரக் காரணமாயிருக்கும் வளைகுடாப்பகுதி தமிழ் மன்றத்திற்கும், இத்தகு பொருளாதார நிலையிலும் நுழைவுச்சீட்டு வாங்கிக் காணக் காத்திருக்கும் நல்ல உள்ளங்களையும் நன்றியோடு நினைத்துப் பார்ப்பதாகக் கூறினார்.

நாள்: நவம்பர் 8, 2009 மாலை 4:00 மணி
இடம்: DVHS அரங்கு, சான் ரமோன்

மேலும் விவரங்களுக்கு:
இணையதளம்: bayareatamilmanram.org
மின்னஞ்சல்: president@bayareatamilmanram.org

வளைகுடாப் பகுதித் தமிழ்மன்றம்,
சான் ஃபிரான்சிஸ்கோ

© TamilOnline.com