சாட்டஹூச்சியின் இன்னொரு முகம்
அனைத்து ஜீவராசிகளுக்கும் ஆதாரமாகத் திகழ்பவை நதிகள். நதியே சீற்றம் கொண்டால்?!

அமைதியாக, படகுப் பயிற்சியாளர்களையும், உல்லாசப் படகு விடுவோரையும் உற்சாகமூட்டித் தெளிந்த நீரோட்டமாய்ப் பாய்ந்து கொண்டிருந்தாள் சாட்டஹூச்சி.

வாத்துக்கள் ஆனந்தமாக நீரில் விளையாடிக் கும்மாளமிடும் காட்சி பார்க்கப் பார்க்க பரவசம். இவள் சென்ற 21ம் தேதி சினத்துடன் சீறிப் பாய்ந்தாள். இரு கரைகளையும் மீறி. கட்டுக்கடங்காமல் ஓவென்ற இரைச்சலுடன்!

பெரிய பெரிய மரக்கிளைகளும் சாட்டஹூச்சியின் வேகத்தில் வலுவிழந்தன. ஏன் இந்தக் கொந்தளிப்பு? தாயின் மடியாக விளையாடிய வாத்துக் கூட்டம் அரண்டு மிரண்டு அலறின.

முன்னறிவிப்பு இன்றி சூரியன் காணாமல் போனதாலா?

வருண பகவான் தகவல் சொல்லாமல் அழையா விருந்தாளியாக வந்து குதித்ததினாலா?

கண்ணிமைக்காமல், கணமும் விலகாமல் மாடியிலிருந்து சாட்டஹூச்சியின் மீதே விழி பதித்திருந்தேன். உப்பிடவும் மறந்து பருப்பை சாதத்துடன் விழுங்கினேன். சாட்டஹூச்சியின் சினத்திற்கு வெண்ணெய் தலைவணங்கக் கண்டேன்.

சாமந்திச் செடிகள் தங்கள் பூக்களை நதிக்கு அர்ப்பணித்துப் பணிவதைக் கண்டேன்.

##Caption## கொடியில் படர்ந்து பூத்துக் காய்த்திருந்த பரங்கியோ நதியுடன் ஒப்பந்தக் கோரிக்கை செய்து கொண்டு, நீர் உள்வாங்கும் பொழுது உள்வாங்கி, அலை அடித்துக் கரையேறும் போது மேலெழும்புவதை வியப்புடன் கண்கள் விரிய நோக்கியபடி அமர்ந்திருந்தேன்.

மதியம் இரண்டு மணிக்குக் கரை தாண்டி தோட்டத்தினுள் நீர் நுழையத் தொடங்கியது. ஆறுமணிக்குத் தோட்டம் முழுவதும் வியாபித்துவிட்டது.

என்னுள் பதற்றம். மழையோ விடாமல் தூறிக் கொண்டிருந்தது. கையில் குடைகளுடன் கம்யூனிடிவாசிகள் கலக்கம் கலந்து உரையாடி, நதி நீரில் கால்பதித்து நடந்து சென்றனர். "நதி நீர் வீட்டிற்குள் வந்துவிடுமோ?" கேட்க விரும்பினேன்.

ஆனால் நான் கேட்பதை அவர்களால் புரிந்துகொள்ள முடியாது. அவர்கள் பதில் கூறினால் அதை கிரகிக்கும் சக்தி எனக்கில்லை.

மாடிக்கும் பின்புறத்திற்கும் நடைபயின்றேன். எதிர்க்கரையில் வீடுகள் தண்ணீரில் மிதந்தன. மணி 7.30. கம்யூனிடி மானேஜர் வெண்மணி கதவைத் தட்டினார். அவர் கூறியது சுத்தமாக எனக்கு விளங்கவில்லை.

"விஜயா இல்லையா?" இது புரிந்தது.

"நான் விஜயாவின் மதர். விஜயா இரவு பத்து மணிக்கு வருவாள்."

அவர் ஒரு போன் நம்பர் எழுதிக் கொடுத்தார். "விஜயா வந்ததும் இந்த நம்பருக்கு போன் செய்யச் சொல்லுங்கள்."

நல்லவேளை! வீட்டுக்குள் தண்ணீர் வரவில்லை, மணி 9, 9.30, 10, 10.30 எனக் கடமை தவறாத வீரனாக இயங்கிக் கொண்டிருந்தது. மழை நின்றுவிட்டது. சிறிது பயமும் குறைந்திருந்தது.

என் மகள் முன்ஜாக்கிரதையாக போன் நம்பர் எல்லாம் எழுதிக் கொடுத்துவிட்டுத்தான் நியூயார்க் சென்றிருந்தாள். இன்று பார்த்து என் செல்ஃபோன் வேலைநிறுத்தம் செய்துவிட்டது.

கடைசியாக முயற்சிப்போம் என்று சார்ஜரில் போட்டுவிட்டு முயற்சி செய்தேன். மகள் லைனில் வந்தாள். "ட்ரெயினில் வந்து கொண்டிருக்கிறேன். ஃப்ளைட் தாமதம். பத்து நிமிடத்தில் வீட்டில் இருப்பேன்"

பனிரெண்டு மணிக்கு மகள் வந்ததும்தான் மூச்சு வந்தது. விவரம் அறிந்து திகைத்தாள். பவர், தண்ணீர் எந்தப் பிரச்னையும் இல்லை. மழையும் நின்று விட்டதனால் இனி தண்ணீர் ஏறாது என நம்பினோம். நள்ளிரவில் கம்யூனிடி மானேஜருக்கு போன் செய்ய விருப்பமில்லை.

என்னைச் சந்தித்துச் சென்ற பின் கம்யூனிடி மானேஜர் என் மகள் செல்லுக்கு போன் செய்திருக்கிறார். ஃபிளைட்டில் இருந்ததனால் வாய்ஸ் மெயிலில் செய்தி தெரிந்து கவலைப்பட்டிருக்கிறாள். நான் எப்படிச் சமாளிப்பேனோ என்று பயம்!

மறுதினமே கம்யூனிடி மானேஜருக்கு போன் செய்து தன் நன்றியை வெளிப்படுத்தினாள். பொறுப்பாக ஒவ்வொரு வீட்டிற்கும் வந்து பாதுகாப்பு வழங்கும் சேவைக்கு மகிழ்ச்சி தெரிவித்தாள்.

நேற்று அவ்வளவு சினத்துடன் சீறிப்பாய்ந்த நதியா என்று வியப்புறுமாறு மறுதினமே சாட்டஹூச்சி அமைதியாக, இந்தப் பூனையும் பாலைக் குடிக்குமா என்பது போல், தவழ்ந்து நெளிந்து ஓடிக் கொண்டிருந்தாள்.

நான் இங்கு வந்த தினத்திலிருந்து நதியைப் பார்த்துக் கொண்டேதான் எழுதுகிறேன். நதியோட்டம் என்னுள் கற்பனையைச் சிறகடித்துப் பறக்கச் செய்கிறது.

என் கற்பனைக்கும் ஊற்றாக, நினைவலைகளுக்கு உந்துதலாக இருக்கும் சாட்டஹூச்சிக்கு இப்படி இன்னொரு முகமும் இருக்கிறதே!

பட்டம்மாள்,
அட்லாண்டா, ஜார்ஜியா

© TamilOnline.com