நல்ல மனம்
'சிறுகதைப் போட்டியில் தேர்வு பெற்றது'

டாக்டர் ராஜா மருத்துவமனையில் இதய அறுவைசிகிச்சையை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். அமெரிக்காவில் வேலை பார்க்க வரும் கட்டை பிரம்மாசாரிகளுக்கு சமையல் செய்து பழக்கம். அதேநிலைதான் ராஜாவுக்கும். தானே காப்பி போட்டு சாப்பிட ஆரம்பித்தார். அப்பொழுது தொலைபேசி மணி அடித்தது. இந்தியாவிலிருந்து ராஜாவின் நண்பன் சுந்தரம் பேசினான். "அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக். மருத்துவமனையில் சேர்த்திருக்கிறேன். மருத்துவர்கள் நன்றாகவே பார்த்துக் கொள்கிறார்கள். இருந்தாலும் உன் அறிவுரை தேவை” என்றான். ராஜாவும், "கவலைப்படாதே, நான் உடனே புறப்பட்டு வருகிறேன்” என்று சொல்லிவிட்டு அன்று மாலை விமானத்திலேயே புறப்பட்டு விட்டார்.

விமானத்தில் ராஜாவுக்கு சரியாகத் தூக்கம் வரவில்லை. சுந்தரத்தின் அப்பா தீனதயாளனைப் பற்றிய எண்ணங்கள் மனத்தில் சுழன்றன.

சுந்தரத்தின் அப்பா எவ்வளவு நல்லவர், உயர்ந்த உள்ளம் கொண்டவர். ராஜா கனவில் கூட நினைத்துப் பார்க்காத, எதிர்பார்க்காத அளவுக்கு நல்ல மனத்துடன் ராஜாவைத் தன் பிள்ளை போல நினைத்து சரியான சமயத்தில் உதவி செய்தாரே! அவர் செய்த உதவியினால்தானே இன்று அமெரிக்காவில் தான் டாக்டராக முடிந்திருக்கிறது. நான் படிப்பதற்கு உதவி செய்யாமல், நான் கேட்டபடி அவரது தொழிற்சாலையில் ஒரு வேலை கொடுத்திருந்தால் இன்று நான் சாதாரணத் தொழிலாளியாகத் தானே இருந்திருப்பேன். எனவே நன்றிக்கடனை நிறைவேற்ற நான் சென்னை சென்று, என் கைகளினால் அவருக்குச் சிகிச்சை அளிக்கும்வரை அவர் உயிருடன் இருக்க வேண்டுமென்று ஆண்டவனை வேண்டிக் கொண்டு கண்களை மூடினார் ராஜா.

உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் பொழுது இருந்த வறுமையான வாழ்க்கையும், அவர் பெற்றோர்கள் பட்ட கஷ்டங்களும் ராஜாவின் மனக்கண் முன் வந்து நின்றன.

##Caption## ராஜா வாழ்ந்தது சிறிய கிராமம். ஓடு போட்ட சிறிய வீடு. மிக ஏழைக் குடும்பம். மின்சார விளக்கு உட்பட மற்ற எந்த வசதியும் இல்லாத வீடு. சில ஓடுகள் உடைந்திருந்ததால் பகலில் சூரிய ஒளி வீட்டுக்குள் இருக்கும். வீட்டின் பின்புறம் பருத்திக்காடு. முன்புறம் பனைமரக் கூட்டம். அதனால் தேளுக்கும் பாம்புக்கும் பஞ்சமில்லை. இயற்கை உபாதைகளுக்கு அந்தப் பருத்திக்காடுதான் இடம்.

வீட்டிலிருந்து அறுநூறு அடியில் ஒரு விநாயகர் கோயில். கோயிலைச் சேர்ந்த இரண்டு ஏக்கர் தென்னந்தோப்பு இடையிடையே மாமரங்கள், சிட்டுக்குருவிகள், மைனா, குயில் மற்றும் பறவைகள் ஏராளம். கோவில் பக்கத்தில் சதுரவடிவில் சுற்றிலும் கைப்பிடிச்சுவர் கட்டப்பட்டு ஒரு கிணறு. அந்தக் கிராமத்திற்கே அதுதான் குடிநீர். பெண்கள் வாளியும் கயிறும் கொண்டு வந்து தண்ணீர் இறைத்துச் செல்வார்கள். ஆண்கள் தண்ணீர் இறைக்க ஒரு ஏற்றம். ஏற்றத்தில் தண்ணீர் இறைத்து அங்கு கட்டப்பட்டிருக்கும் தொட்டியில் நீர் நிரப்பி, வாளியில் நீரை எடுத்து தலையில் ஊற்றி ஆனந்தமாகக் குளிக்கும்போது சொர்க்கமே அங்கு இருப்பதாகத் தோன்றும்.

ராஜா தினமும் காலையில் எழுந்து காலைக்கடன்களை முடித்து, விநாயகர் கோவில் கிணற்றில் தண்ணீர் இறைத்துக் குளித்து, நெற்றியில் திருநீறணிந்து, மகிழ்ச்சியாக ஆரோக்கியமான வாழ்க்கையையும் நல்ல கல்வியறிவையும் தர விநாயகரை மூன்றுமுறை வலம் வந்து, தோப்புக்கரணம் போட்டு, நெற்றியில் குட்டிக்கொண்டு வீட்டிற்குச் செல்வது வழக்கம்.

வீட்டில் அவனுடைய தாய் அங்கயற்கண்ணி அன்புடன் கொடுக்கும் பழைய சோற்றையும், சுண்ட வைத்த பழங்கறியையும், ஊறுகாயையும் மகிழ்ச்சியாகச் சாப்பிட்டுவிட்டுப் பள்ளிக்குப் புறப்பட்டு விடுவான் ராஜா. தோளிலே புத்தகப்பையையும் கையிலே தூக்குச்சட்டியில் சோறும் எடுத்துக் கொண்டு நான்கு மைல் தூரத்தில் உள்ள பள்ளிக்கு நடந்தே சென்று வருவான்.

இவ்வாறு நான்கு ஆண்டுகள் படித்து அந்த ஆண்டு உயர்நிலைப்பள்ளி இறுதிவகுப்பை முடித்தான். வகுப்பில் அவன் அதுவரை முதல் மாணவனாக வந்திருக்கிறான். அது அவனது கடுமையான உழைப்பின் பலன். குடும்ப ஏழைமையை அகற்ற அவன் எடுத்த முயற்சி. பள்ளி இறுதி வகுப்பிலும் அவன்தான் முதல் மாணவன். தலைமை ஆசிரியர் முயற்சியில் மாகாணத்திலேயே அவன் முதல் மாணவன் என்று தெரிய வந்தது. அவனும் அவன் குடும்பத்தினரும் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.

ஏழையாகப் பிறந்து ஏழையாக வளர்ந்திருந்தாலும் அவனது தந்தை அவனுக்கு ஆசையோடு வைத்த பெயர் ராஜா. பெயர் தான் ராஜாவே தவிர கிராமத்தை விட்டு பத்து மைல்களுக்கு அப்பால் வேறு ஊருக்குப் போனதில்லை. போகும் வாய்ப்பும் கிடைத்ததில்லை. பூகோளத்தில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பாவைப் பார்த்திருக்கிறான், அவைபற்றிப் படித்திருக்கிறான். போகக்கூட ஆசைதான். ஆனால் 300 மைல் தொலைவில் இருக்கும் சென்னையையே பார்த்ததில்லை. அப்புறம் எங்கே அமெரிக்காவும், இங்கிலாந்தும்? எல்லாம் கனவில்தான்.

தலைமை ஆசிரியர் ராஜாவைக் கல்லூரியில் சேர்ந்து மேலே படிக்க ஆசிர்வதித்தார். அவரால் முடிந்தது அவ்வளவுதான். பணவசதி இல்லாத ராஜா என்ன செய்யமுடியும்? பணத்திற்கு அவனும் அவன் தந்தையும் முயற்சித்தனர். தோல்வியுற்றனர். வேறு வழியில்லாமல், படித்தது போதும் ஏதாவது வேலைக்குச் செல்வது என்று முடிவு செய்தனர்.

அவனுடன் படித்த நண்பன் சுந்தரத்தின் தந்தை கார் டயர் தயாரிக்கும் ஒரு பெரிய தொழிற்சாலையை நடத்தி வந்ததை ராஜா அறிவான். சுந்தரம் கல்லூரியில் படிப்பைத் தொடர்வதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தான். ராஜா, அவனைச் சந்தித்து, அவன் தந்தையிடம் சொல்லி அவர் தொழிற்சாலையில் தனக்கு ஒரு வேலை ஏற்பாடு செய்து தருமாறு கேட்டான். சுந்தரும் ராஜாவைத் தனது தந்தைக்கு அறிமுகப்படுத்தினான்.

ராஜா மாநிலத்திலேயே முதல் மாணவனாக வந்ததையும், மேற்கொண்டு படிக்க வசதியில்லாததால் வேலை கேட்டு வந்திருப்பதையும் சொல்லி, ராஜாவுக்கு வேலை கொடுக்கவே கூடாது என்றும் கேட்டுக் கொண்டான். ராஜாவுக்கு மிகுந்த அதிர்ச்சியாகி விட்டது. சுந்தரம், ராஜாவைப் பார்த்து பயந்துவிடாதே என்று கூறியபடியே தன் தந்தையிடம், நம் தொழிற்சாலையில் ராஜாவுக்கு வேலை கொடுப்பதைவிட அவன் மேற்கொண்டு படிப்பதற்கு பணம் கொடுத்து உதவி செய்வது நல்லது என்று கூறினான்.

சுந்தரத்தின் அப்பா தீனதயாளன் பெயருக்கேற்றாற்போலவே தயாளகுணம் கொண்டவர். கிராமத்தில் பல நல்ல காரியங்களை முன்னின்று செய்பவர். ராஜா மாநிலத்தில் முதல் மாணவனாக வந்ததைப் பாராட்டியதுடன், அவனது கல்விச் செலவு முழுவதையும் இனித் தாமே ஏற்பதாகவும் அவனை எந்தவிதக் கவலையுமில்லாமல் மேற்கொண்டு படிக்குமாறும் ஆலோசனை சொன்னார்.

தீனதயாளனுக்கு என்ன பதில் சொல்வது, எப்படி நன்றி கூறுவது என்றே தெரியவில்லை. அவர் காலில் சாஷ்டாங்கமாக விழுந்து ஆசிர்வதிக்கும்படி வேண்டிக் கொண்டான்.

அது ராஜாவின் வாழ்வில் பெரிய திருப்புமுனை ஆனது. அதுமுதல் ராஜாவின் வாழ்க்கையில் வசந்தம் வீச ஆரம்பித்தது. தாய், தந்தையரின் ஆசிகளைப் பெற்றுக் கொண்டவன், சென்னை மாநிலக் கல்லூரியில் சேர்ந்தான். முதல் வகுப்பில், முதல் மாணவனாகத் தேர்ச்சி பெற்றான். இதைத் தெரிந்து தீனதயாளன், ராஜாவின் பெற்றோர், சுந்தர் உட்பட அனைவரும் மகிழ்ந்தனர். பின் மருத்துவக்கல்லூரியில் சேர்ந்து எம்.பி.பி.எஸ். படிப்பிலும் மாநிலத்திலேயே முதல் மாணவனாகத் தேர்ச்சி பெற்றான்.

பள்ளியில் படிக்கும் போது அவன் கண்ட கனவு அன்று நிறைவேறும் நாள் வந்தது. அமெரிக்க மருத்துவக் கல்லூரிக்கான தேர்வுகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்றான். கிராமத்திற்குச் சென்று பெற்றோரிடமும், தீனதயாளனிடமும் ஆசி பெற்றுக்கொண்டு அமெரிக்கா புறப்பட்டான்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் புரூக்லினில் உள்ள கல்லூரியில் இதயநோய் சம்பந்தமான படிப்பில் சேர்ந்து அதிலும் வெற்றிகரமாகத் தேறினான். அதே மருத்துவமனையில் அவனுக்கு வேலையும் கிடைத்தது. அவனுடைய வாழ்க்கை எதிர்பாராத அளவுக்கு உயர்ந்தது.

தூங்கிக் கொண்டிருந்த ராஜாவை எழுப்பிய விமானப் பணிப்பெண் பல் துலக்கும் பிரஷ்ஷையும் பேஸ்ட்டையும் கொடுத்தாள்.

விமானநிலையத்தில் சுந்தரம் வரவேற்றான். வீட்டுக்குப் போய் ஓய்வு எடுத்துக் கொண்டு பின்னர் மருத்துவமனைக்குச் செல்லலாம் என்றான். அதற்கு ராஜா, "நான் உயர்வகுப்பில்தான் பயணம் செய்து வந்திருக்கிறேன். அதுவே எனக்கு ஓய்வுதான். நேராக மருத்துவமனைக்குச் சென்று அப்பாவைப் பார்த்து விடலாம் வா” என்றான்.

இருவரும் மருத்துவமனைக்குச் சென்றனர். ராஜா, தீனதயாளனைப் பார்த்தான். அவருக்கும் ராஜாவைப் பார்த்ததும் ஒரு தெம்பு வந்தது. தனக்கு வந்த நோய் குணமானது போல் உணர்ந்தார். அவனது அமெரிக்க வாழ்க்கைபற்றி அன்புடன் விசாரித்தார். தன்னைப் பற்றியும் தனது அமெரிக்க வாழ்க்கை பற்றியும் விரிவாகக் கூறிய ராஜா, அவர் நோய் குணமாவதற்கு ஆறுதல் சொன்னான். உடனடியாக மருத்துவர்களைச் சந்தித்தான். தீனதாயளனுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் பற்றிக் கேட்டறிந்தான். மருத்துவப் பதிவேடுகளையும் பார்வையிட்டு, சரியான சிகிச்சைமுறை அளிக்கப்படுவது பற்றி மனமகிழ்ந்தான். அதை தீனதயாளனிடமும் தெரிவித்தான். இன்னும் ஐந்து நாட்களில் உங்களை டிஸ்சார்ஜ் செய்து விடுவார்கள், கவலைப்பட ஏதுமில்லை என்றும் தெரிவித்தான். பின் இருவரும் சுந்தரின் வீட்டிற்குச் சென்றனர். அங்கே ஏற்கனவே ஊரிலிருந்து வந்து தனக்காக காத்திருந்த தன் பெற்றோர்களைச் சந்தித்தான் ராஜா. அவர்களை நலம் விசாரித்து ஆசி பெற்றான்.

##Caption## சுந்தர் தன் தங்கை மங்கையர்க்கரசியை ராஜாவிடம் அறிமுகப்படுத்தினான். அவள் எம்.பி.பி.எஸ். முடித்துவிட்டு, ஹவுஸ் சர்ஜன் பணியையும் சென்னையில் முடித்திருக்கிறாள் என்று தெரிவித்தான். ராஜாவும் அவளைச் சந்தித்ததில் மகிழ்ச்சி கொண்டான். அவனது தங்கும் இடம், உணவு உட்பட அனைத்து ஏற்பாடுகளையும் அவளே கவனித்துக் கொண்டாள்.

ராஜா தினமும் மருத்துவமனைக்குச் சென்று தீனதயாளனை கவனித்து வந்தான். அவரும் ஐந்தாம் நாள் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்து விட்டார். ராஜாவே உடனிருந்து கூட்டிக்கொண்டு வந்தான்.

"மருத்துவமனையில் வைத்தியம் செய்ததை விட, நீ வந்து என்னை கவனித்துக் கொண்டதால்தான் உடல் சீக்கிரம் குணமாகி விட்டதென நான் நினைக்கிறேன். அமெரிக்காவில் உள்ள வருமானத்தையெல்லாம் விட்டுவிட்டு இங்கு வந்து என்னை கவனித்துக் கொண்ட உனக்கு நான் எப்படி நன்றி கூறுவேன்” என்று தீனதயாளன் கண் கலங்கினார்.

ராஜா அதற்கு, "அழாதீர்கள் அய்யா, நீங்கள் அன்று எனக்குப் போட்ட பிச்சையினால் தானே நான் இந்த அளவுக்கு உயர்ந்து இருக்கிறேன். அதை நான் மறக்க முடியுமா? என் தாய், தந்தையால் செய்ய முடியாததை நீங்கள் செய்திருக்கிறீர்கள்” என்றான் குரல் தழுதழுத்தவாறே.

"நான் அழவில்லையப்பா, இது ஆனந்தக் கண்ணீர்' என்றார் தீனதயாளன்.

"அய்யா, இன்னும் பதினைந்து நாளில் அமெரிக்காவுக்குப் புறப்படுகிறேன். அப்பொழுது உங்களையும் கூட்டிக்கொண்டு போய் அங்கேயே தங்கி மருத்துவப் பரிசோதனைகள் செய்யலாம் என நினைக்கிறேன்” என்றான் ராஜா.

"அது எல்லாம் எதுக்கப்பா, நிறையச் செலவு ஆகும். நீயே வேறு சமைத்துச் சாப்பிட்டுக்கொண்டு கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறாய். இதுல நான் வேற எதுக்குத் தொந்தரவு” என்றார் தீனதயாளன்.

"செலவு என்னய்யா பெரிய செலவு! எல்லாவற்றையும் நான் பார்த்துக் கொள்கிறேன். சமையலுக்கு மட்டும் இங்கிருந்து ஒரு ஆளை ஏற்பாடு செய்து அழைத்துக் கொண்டு போவோம்” என்றான் ராஜா.

"அப்படியானால் சரி! நான் ஒப்புக் கொள்கிறேன். ஆனால் மங்கையர்க்கரசியையும் நம்முடன் கூட்டிக் கொண்டு செல்ல வேண்டும், எனது மகளாக அல்ல. உனது மனைவியாக!” என்றார் தீனதயாளன் குறும்புச் சிரிப்புடன்.

ராஜாவுக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை. அவன் முதன்முதலில் இந்த வீட்டில் மங்கையர்க்கரசியைப் பார்த்தது முதலே அந்த எண்ணம் தோன்றியிருந்தது. அவள் உடனிருந்து அவனை நன்கு கவனித்துக் கொண்ட விதமும் அவனைக் கவர்ந்திருந்தது. ஆனால் தனது பழைய வாழ்க்கையை நினைத்துப் பார்த்து பேசாமல் இருந்து விட்டான்.

தற்போது தீனதயாளனே அதைப்பற்றி வெளிப்படையாகக் கேட்கவும், சற்று நேரம் யோசித்தவன், "அய்யா, நீங்கள் மிகவும் வசதி உள்ளவர்கள். எங்களது குடும்பம் முன்பு எப்படி இருந்தது என்பதும் உங்களுக்குத் தெரியும்” என்று அவன் சொல்லி முடிக்கும் முன்னரே, இடைமறித்த தீனதயாளன், "ராஜா, ஒன்றுமட்டும் நினைவில் வைத்துக் கொள். நல்ல முழுமனதுடன் முயற்சி செய்தால் ஏழைமையை வெற்றி கொள்ள முடியும். அதற்கு நீயே உதாரணம். செல்வம் இன்று இருக்கும். நாளை போய்விடும். ஆனால் நல்ல எண்ணம், நல்ல மனம் என்றும் நிலைத்திருக்கும்” என்றார்.

கூத்தரசன்,
சான் ஹோசே, கலிஃபோர்னியா

© TamilOnline.com