லாடு வகைகள்
தித்திக்கும் தீபாவளி நன்னாளில் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைருக்கும் விருப்பமான லாடு வகைகளுடன் கொண்டாடலாம் வாங்க...

குஞ்சாலாடு

தேவையான பொருட்கள்:
கடலைமாவு - 2 கப்
அரிசி மாவு - 1 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை - 3 கப்
பேகிங் சோடா - 1 சிட்டிகை
முந்திரி பருப்பு - 12
கேசரி பவுடர் - 1 சிறிய ஸ்பூன்
டைமண்ட் கல்கண்டு - சிறிதளவு
ஏலக்காய் - சிறிதளவு
குங்குமப்பூ - சிறிதளவு
உலர் திராட்சை - 2 டேபிள் ஸ்பூன்
நெய் - 3 கப் (பொரிக்க)

செய்முறை:
கடலைமாவு, அரிசிமாவு, பேகிங் பவுடர் எல்லாவற்றையும் ஒரு பாத்திரத்தில் போட்டு கொஞ்சம் தண்ணீர்விட்டு கெட்டியாக கரைத்துக் கொள்ளவும்.
இதற்கிடையில் சர்க்கரையில் 1 கப் தண்ணீர்விட்டு அடுப்பில் வைத்துக் கரையும் போது இரண்டு தேக்கரண்டி பால்விட்டு மேலாக நுரைத்து வரும் அழுக்கை எடுத்துவிடவும்.
ஒற்றை கம்பிபாகு (இரண்டு விரலில் எடுத்துப் பார்க்கவும்) வைத்து கலர் பவுடர் போட்டு இறக்கி வைக்கவும்.
கலந்து வைத்துள்ள மாவை ஜாரணியில் விட்டு கரண்டியால் நெய்யை காய வைத்து அதற்குள் தட்டவும்.
பூந்தி பொரிந்து வரும் போது எடுத்துப் பாகில் போடவும்.
பாகு முழுவதும் நிரம்பிய பின்பு முந்திரி பருப்பை வறுத்து போடவும்.
ஏலக்காய் பொடி போட்டு கல்கண்டும் சேர்க்கவும்.
குங்குமம்பூவை நெய்யில் லேசாக பிரட்டிப் போடவும்.
பிறகு திராட்சை, முந்திரி ஆகியற்றை நெய்யில் பொரித்து போடவும்.
அதிக நாள் இருந்தால் திராட்சை போட வேண்டாம். உடனே செலவழிப்பதானால் போடலாம்.
நன்றாக ஆறியவுடன் உருண்டை பிடிக்கவும்.

தங்கம் ராமசாமி

© TamilOnline.com