கோபத்தின் வகைகள்

ஒலி வடிவத்தில் கேட்க
- Audio Readings by Saraswathi Thiyagarajan



அன்புள்ள சிநேகிதியே,

(பொதுப் பிரச்னையாக இருக்கும் கோபம் பற்றிய என் கருத்துக்கள் இந்த இதழிலும் தொடருகிறது. போன இதழில் கோபத்தைக் கிளறி விட்டு விட்டேன். இந்த இதழில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப் பார்க்கிறேன். ஆகவே, தனிநபர் பிரச்சினைகளை வரும் இதழ்களில் பார்ப்போம்)

##Caption## கோபம் ஒரு ஊறுகாய் போல. அதுவே உணவாக முடியாது. சிலருக்குச் சிகப்பாகப் பார்த்தால்தான் அது மிகக் காரமான ஊறுகாய். They Love it. சிலருக்கு புளிப்பாக இருந்தாலே போதும். வேறு சிலருக்கு அந்த பாட்டிலைப் பார்த்துக் கொண்டு சாப்பிட்டால் அதைத் தொட்டுக் கொண்டதாக நினைப்பார்கள்.

எந்தப் பிரச்சனையை எடுத்துக் கொண்டாலும் அதன் தன்மையையும் விளைவு/வளர்ச்சிகளையும் தீரத் திறனாய்வு செய்தாலே, பாதிப் பிரச்சனைக்கு வழி கிடைத்துவிடும்.

அந்த வகையில் கோபத்தின் வகைகளை 9 ஆகப் பிரிக்கலாம்.

மூர்க்கம்கண்கள் சிவந்து, நரம்புகள் புடைத்து ரத்த நாளங்கள் வெடிக்கும் நிலை.
தர்க்கம்வேகம், ஆத்திரம் - சொல்லிலும், செயலிலும் மூர்க்கத்துக்கு வழி சொல்லும் பாதை.
தேக்கம்எரிமலை உள்ளேயே கனன்று கொண்டிருக்கிறது. எப்போது வெடிக்கும் என்று தெரியாது.
தாக்கம் தாக்கப்பட்டு ஒரு மூலையில் மூச்சு விட்டுக் கொண்டிருக்கிறது, வெளியிட வழியில்லாமல்.
வீக்கம்மெள்ள மெள்ள அதிகரித்துக் கொண்டே வரும். முதலில் வெளியே தெரியாது.
ஏக்கம்மண்டிக் கிடக்கும் உள்ளே. வெளிப்படுத்தத் தெரியாது.
தூக்கம்மறந்து போய்விட்டு, அப்புறம் திடீரென்று ஞாபகம் வந்து வெளிப்படும்.
மார்க்கம்விடை/வழி தெரியச் செய்யும் முயற்சி முனை.
ஆக்கம்இருக்காது. ஆனால் பிறர் நமக்கு இருப்பது போல் நினைத்துக் கொள்வார்கள். அதனால் நல்லது.


பல்லைக் கடித்துக் கொண்டிருக்கிறீர்கள். பைத்தியம் பிடிப்பது போல் இருக்கிறதா? பரவாயில்லை. கோபம் இல்லாமல் இருந்தால் சரி.

இதைத் தவிர பொய்க் கோபம், போலிக் கோபம், செல்லக் கோபம், செல்லாத கோபம், சிணுங்கல் கோபம், சிங்காரக் கோபம், சில்லறைக் கோபம் என்று எத்தனையோ வகைகள். கண்டிப்பாக ஒரு செமினார் தேவை.

மேலே சொன்ன மூர்க்கத்திலிருந்து ஆக்கம் வரையான கோப உணர்ச்சிகளை நாம் எல்லோருமே கண்டிப்பாக அனுபவித்திருப்போம். ஒவ்வொரு கோப வகைக்கும் ஏற்பட்ட சந்தர்ப்பத்தை நினைவுக்குக் கொண்டு வாருங்கள். This is a very intresting exercise. அதனுடைய விளைவுகளையும் நினைத்துப் பாருங்கள். அப்புறம் நாம் பொதுவாக எந்தக் கோப மண்டலத்தைச் சேர்ந்தவர்கள் (Zodiac Zone போல) என்பதை உங்கள் கோபக் குறியீட்டெண்ணை வைத்து நிர்ணயம் செய்து கொள்ளுங்கள். கையில் ஒரு காப்புக்கூட போட்டுக் கொண்டு விடலாம். மற்றவர் தங்களை பாதுகாத்துக்கொள்ள. (ஜாக்கிரதை. அவர் நம்பர் 1 - நாம் வாலாட்டக் கூடாது...).

ஒவ்வொரு முறை கோபம் வரும்போதும் நாம் எந்த கோப மண்டலத்தில் இருக்கிறோம் என்று ஆராய்ச்சி செய்ய ஆரம்பியுங்கள். பிறருக்குக் கோபம் வந்தாலும் அது எந்த மண்டலம் என்று யோசியுங்கள். கோபத்தை அடையாளம் காண்பதில் நாம் இப்போது பிஸ்தா ஆகிவிட்டோம். Then Management is not a Problem.

கோபத்தைப் பற்றிய மூன்று நகைச்சுவைச் சம்பவங்களைச் சொல்கிறேன், கேளுங்கள்:

ஒரு நண்பர் எப்போதும் நம்பர் 1 மண்டலத்திலேயே சஞ்சரிப்பார். அவருடைய மகனைச் சமீபத்தில், 20 வருடங்களுக்குப் பிறகு பார்த்தேன். பேசிக் கொண்டிருக்கும் போது, “உங்கப்பாவுக்கு இப்போதெல்லாம் கோபம் வருகிறதா?” என்று கேட்டேன். அவன் அழகாக ஒரு பதில் சொன்னான். “கோபம் போனால்தானே திரும்பி வருவதற்கு?”

*****


##Caption## இது பல வருடங்களுக்கு முன்பு நடந்தது. நெருங்கிய தோழி. அவளுடைய கிளாஸ்மேட் (எங்கள் இருவருக்குமே). அவள் குடும்பத்துக்கு நெருக்கமாகிப் போனான் அவன். வேறு மாநிலம், வேறு மொழி, வேறு ஜாதி. விஷயம் தெரியாமல் அவனை ஒரு பிள்ளையாக நினைத்து, பெற்றவர்கள் அவளுக்கு வரன் பார்க்கும் இடமெல்லாம் இவனையும் அழைத்துக் கொண்டு போனார்கள். நிலைமை முற்றுமுன் பெண் தன் எண்ணத்தைச் சொல்லி விட்டாள். உறைந்து போனார் அப்பா. பெண் தான் வேலை செய்யும் ஊருக்குக் கிளம்பி விட்டாள். அந்தப் பையன் பேரில் அப்படிக் கோபம் அப்பாவுக்கு. அவன் தன் வேலை சம்பந்தமாக வெளியூர் போய்விட்டு நிலைமை எப்படி இருக்கிறது என்று தெரிய இவள் வீட்டுக்கு வந்திருக்கிறான். அவனைப் பார்த்தவுடன், அந்த அப்பாவுக்கு அவ்வளவு சந்தோஷம். ‘ஹலோ, ஹலோ' என்று குசலம் விசாரித்து விட்டு, நன்றாகப் பேசிக் கொண்டிருக்கையில், திடீரென்று தன் கண்ணாடியைக் கழற்றி தூக்கிப் போட்டுவிட்டு அங்கிருந்து போய்விட்டார். தூங்கிக் கொண்டிருந்த கோபம் திடீரென்று விழித்துக் கொள்ள, அவர்களுக்கிடையிலான உறவின் சமநிலை மாறிப்போனது. அவர் Zone Number 7.

***
*****


ஒரு சங்கக் கூட்டம். காரசாரமான வாக்குவாதம். ஒரு மெம்பருக்கு மிகவும் கோபம் வந்து கத்தி வெளிநடப்புச் செய்துவிட்டார். அதன் விளைவாக, ஒருவருக்கொருவர் பலத்த குரலில் சண்டை போட ஆரம்பித்தனர். தலைவர் கொஞ்ச நேரம் அதற்கு அவகாசம் கொடுத்தார். அப்புறம் அவர் நிலைமையைச் சரி செய்ய ஆரம்பிக்கையில், வெளிநடப்புச் செய்தவர் உள்ளே வந்தார். பேச்சை நிறுத்திவிட்டு எல்லோரும் திரும்பிப் பார்த்தார்கள். “திரும்பி மீட்டிங்கிற்கு வரவில்லை. என் பையை மறந்து விட்டேன்” என்று மறந்துபோன தன் பையை எடுத்துக் கொண்டு கிளம்பினார். தலைவர் சாந்தமாகி “வேறு ஒன்றையும் மறந்து விட்டீர்களே” என்றவுடன் அந்த மெம்பர் திரும்பிப் பார்த்தார். “உங்கள் கோபத்தையும் சபை நிறைய விட்டுவிட்டுப் போய் விட்டீர்கள். அதையும் உங்கள் பையில் போட்டு எடுத்துக்கொண்டு போய்விட்டால், எனக்குத் திருப்பிக் கொடுக்க வேண்டிய சுமை குறையும்” என்றார். Member Zone 2. President Zone 9.

கோப உணர்ச்சிகளை நகைச்சுவையாக மாற்றிக்கொள்ள நிறைய அனுபவம் வேண்டும். கோபத்தை ஆக்கச் செயலில் காட்டவும் ஒரு திறனும் சவாலும் வேண்டும்.

கோபமே வராத மனிதரை இதுவரை நான் பார்த்ததில்லை. வந்த கோபத்தைச் சவாலாக எடுத்துக் கொண்டு வியக்கும்படித் தங்களை வளர்த்துக் கொண்டு முன்னேறிய மனிதர்களை பார்த்திருக்கிறேன். கோப உணர்ச்சிகளை அழகாகப் புரிந்து கொண்டு, புன்சிரிப்பிலேயே நிலைமையை மாற்றியவர்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால் கோபத்தையே தன்னுடைய முழு அடையாளமாக மாற்றிக்கொண்டு விட்டால் உங்களுக்கு நண்பர்கள் கிடைப்பது கஷ்டம். (துர்வாசர் - அரக்கப் பரக்க ஓடுவார்கள்) தனக்கு வரும் கோபத்தை ஒரு பெருமிதத்தோடு விசாரித்தால், எங்கோ இடிக்கிறது. மனம் மார்க் போடுவதைக் குறைக்கிறது.

என் கணவர் இந்தப் பகுதியை நான் எழுதுவதைப் பார்த்து 'என்னை'ப்பற்றி எழுதாதே என்று இரண்டு முறை எச்சரிக்கை செய்துவிட்டுப் போனார். நம்பர் 1க்கு வர முடியவில்லை. மற்ற எல்லா Zoneகளிலும் நிறைந்திருக்கிறார். இருந்தும் வாழ்க்கை சுவாரசியம் கூடுகிறது.

வாழ்த்துக்கள்
சித்ரா வைத்தீஸ்வரன்

© TamilOnline.com