மாஸ்டர் செந்தில் ஜோதி கண்ணன்
ஒரே ஒரு புரூஸ் லீயால் கராத்தே போர்முறை உலகத்தைப் பைத்தியம் பிடிக்க வைத்தது. ஆனால் கராத்தே போன்றவற்றின் அடிவேரான வர்மக்கலை, சிலம்பம், குத்துவரிசை போன்றவை இன்னமும் இருட்டில் உள்ளன. இவற்றை உலக அரங்கில் வெளிச்சம் போட்டுக் காட்டுவதற்கான ஞானமும் திறமையும் கொண்டவர் ஜோதி கண்ணன். தமிழகத்தின் நம்பிக்கை நட்சத்திரம். சிலம்பாட்டத் துறையில் உலக அளவில் குறிப்பிடத்தகுந்த சாதனையாளர். சிலம்பம், வர்மக்கலை மற்றும் குத்துவரிசை ஆகியவற்றைக் கற்றுத்தரும் ஆசான். பல சர்வதேசத் தற்காப்புக்கலைப் போட்டிகளில் பரிசு பெற்றிருப்பதுடன் உலக அளவில் பல போட்டிகளுக்கு நடுவராகவும் இருந்துள்ளார். இந்த ஆண்டு Pankration மல்யுத்தப் போட்டிக்காக கிரேக்க நாட்டுக்குச் செல்லும் இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சிலம்பத்தின் உலகளாவிய வளர்ச்சியைத் தனது வாழ்நாள் லட்சியமாகக் கொண்டவர். அவரை அட்லாண்டா நகரில் நடந்த 2009 தமிழ் விழாவுக்கு அழைத்திருந்தது FeTNA. அங்கே அவரைத் தென்றலுக்காகச் சந்தித்தபோது...

கே: சிலம்பாட்டத்தின் மீது உங்களுக்கு ஆர்வம் வந்தது எப்படி?

ப: நான் பிறந்து வளர்ந்தது புதுச்சேரியிலுள்ள பூர்ணாங்குப்பம் என்ற கிராமம். என் தாய்வழித் தாத்தா கோவிந்தசாமி நாட்டார் என் முதல் குரு. 6 வயதில் சிலம்பம் கற்க ஆரம்பித்தேன். தந்தைவழித் தாத்தாவிடமிருந்து சித்த மருத்துவம் கற்றேன். 1996வரை பல ஆசிரியர்களிடம் பயின்றேன். சிலரிடம் வர்மக்கலை பயின்றேன்.

கே: சிலம்பம் என்பது ஏதோ கம்பு சுத்துவது போல இருக்கிறது. நிறைய நுணுக்கங்கள் உள்ளனவா?

ப: சிலம்பம், குத்துவரிசை மற்றும் வர்மக்கலையில் பல்வேறு பாட முறைகள் உள்ளன. மெய்ப்பாடம் (Body excercise), உடற்கட்டுப் பாடம் (Body fitness excercise), தரைப் பாடம் (Floor excercise), மூச்சுப் பயிற்சி (Breathing excercise), குத்துவரிசை (Punching techniques), தட்டு வரிசை (Defence techniques), பிடிவரிசை (Locking techniques), கரலாக் கட்டை, குஸ்தி, மல்யுத்தம், மற்போர், பொடிக்குச்சி, சல்லிக்குச்சி எனச் சிலம்பக் கலையிலேயே பனிரெண்டு பிரிவுகள் உள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் குறைந்தபட்சம் இரண்டாயிரம் அடவு வரிசைகள் உள்ளன.

அதுபோன்று வாள்வீச்சில் 32 வகையான வாள் வடிவமைப்புக்கள் பயன்படுத்தப்படுகின்றன. வர்மக்கலையை எடுத்துக் கொண்டால் நரம்படி, நாடிப் பாடம், இரத்த சுத்தி என பல சூத்திரங்கள் உள்ளன. என் தாத்தாவிடம் குறவஞ்சி, அருப்புக் குறவஞ்சி, கள்ளக் குறவஞ்சி, நாகபாசணம் என நான்கு வகைகள் கற்றுக்கொண்டேன்.

##Caption##கே: சிலம்பத்தின் தோற்றம், வளர்ச்சி பற்றிச் சொல்லுங்களேன்!

ப: சிலம்பமும், குத்துவரிசையும் தமிழர்களின் போர்க்கலையாக இருந்தவை. ஆறாயிரம் ஆண்டுகளாவது தொன்மை உடையவை. அகழ்வாராய்ச்சி மூலம் ஆதிச்சநல்லூரில் கிடைத்த 32 வடிவக் கத்திகளும் அதோடு சேர்ந்த செய்திகளும் இதைப் பறைசாற்றுகின்றன. ரோமானியர்களுக்கு நாம் கத்தி செய்து அனுப்பியதாக அவர்கள் செய்திக்குறிப்புகள் சொல்லுகின்றன. சிலம்பம்தான் தற்காப்புக்கலைகளின் தாய்க்கலை என்பது மிக முக்கியமான வரலாற்று உண்மையாகும். Silambam is the mother of all martial arts. தமிழரான புத்தத் துறவி போதிதர்மா போன்றவர்கள் இதைப் பயின்று சீனா உள்ளிட்ட கிழக்காசிய நாடுகளுக்குப் பரப்பினர். அதன் பின்னர்தான் குத்துவரிசை கராத்தேயாகவும், சிலம்பாட்டம் குங்க்பூவாகவும் வடிவம் மாறியது. இதற்கான ஆதாரங்கள் ஏராளமாக உள்ளன. அசோகர் காலம் தற்காப்புக் கலைகளின் பொற்காலம். அப்பொழுதுதான் சிலம்பம் பெரும் வளர்ச்சியைப் பெற்றுப் பரவலானது.

கே: இந்தக் கலை போர்களில் எப்படிப் பயன்பட்டது என்று சொல்ல முடியுமா?

ப: வில், வேல், வாள் இவை பண்டைத் தமிழர்களின் போர்க்கருவிகள். இதில் வேல்கம்புதான் சிலம்பு. ஆதிமனிதன் காலத்திலிருந்து அதுதான் போர்க்கருவி. உலகில் கல்லை ஆயுதமாகப் பயன்படுத்திய காலத்திலேயே கம்பின் நுனியில் கல்லைக் கட்டி வேலாயுதமாகச் செய்தவர்கள் தமிழர்கள். கம்பை வளைக்க அதுவே வில்லாக மாறியது. படையில் காலாட்படையினர் குறவஞ்சிப் பாடத்தையும், தளபதிகள் வேறு சிலம்பப் பாடத்தையும், மன்னர்கள் வேறு பாடத்தையும் கற்றுத் தேறியிருந்தனர். கால மாற்றத்துக்கேற்ப இப்போர் முறைகள் சிறிது சிறிதாக வடிவம் மாறியது. குறிப்பாக தீரன் சின்னமலை, கட்டபொம்மன், மருது சகோதரர்கள் தங்கள் படைகளுக்கு இதைப் பயிற்சியளித்திருந்ததால் 300 ஆண்டுகால ஆங்கிலேயர் ஆட்சியில் இதற்குத் தடையிருந்தது. எனவே சிலம்ப வீரர்கள் ஒன்று இதனை மறைமுகமாகப் பயிற்சி செய்தார்கள், அல்லது சிலம்பத்தை நாடக (theatrical) மற்றும் பொழுதுபொக்கு வடிவத்திற்கு மாற்றிப் பயிற்சி செய்தார்கள். பொடிக்குச்சி வைத்துக் கோலாட்டக்கழி என்ற வடிவம் உருவானது. இது இந்த நரம்பிலடிப்பேன், அந்த நரம்பிலடிப்பேன் என்று பாட்டுப் பாடிக்கொண்டே அடிப்பதுபோல் ஆடுவது. இதில் ஒரு வடிவம்தான், மருவி குஜராத்தில் தாண்டியா ஆனது. ராஜமன்னார்குடி சிலம்பாட்டம் இதில் சிறந்த ஒன்று.

கே: சிலம்பாட்ட நிகழ்ச்சிகளுக்கென்று இசை உள்ளதா?

ப: சிலம்ப அசைவுகளுக்கேற்றாற்போல உடுக்கை, பம்பை, பறை, உருமி இசைப்பது மிகச் சிறப்பாக அமையும். இதற்காகச் சில குழுக்களைப் பயிற்சியளித்துத் தயாரித்துள்ளோம்.

கே: சிலம்பம் கற்றுக் கொண்டால் தற்காப்புத் தவிர வேறு பலன்கள் உண்டா?

ப: நிச்சயம். சிலம்பம் பயிலும்போது ஆற்றல் அதிகரிக்கிறது. அதே நேரத்தில் சினத்தை அடக்கிவைக்க தியானமாகவும் (meditation) ஆகிறது. இதற்காக நான் – போர்மறவர் தவம் (Warrior Yoga) என்ற ஒன்றை வடிவமைத்துச் சிங்கப்பூரில் பயிற்சியளித்து வருகிறேன். பிரம்பே ஒரு மரத்தின் தண்டுதானே. அதை இறுகப் பிடிக்கின்றபோதே தன்னம்பிக்கையும் மிடுக்கும் வரும். மேலும் பிரம்பு மூலிகைத்தன்மை கொண்டது. அதை இறுகப் பிடிக்க நரம்புத் தளர்ச்சி முதல் பல உடல் சிக்கல்கள் நீங்கும். பிரம்பைச் சுழற்றும்போது நம் உடலிலுள்ள பல்லாயிரக்கணக்கான நரம்புகள் இயக்கப்படுகின்றன. அப்போது உடலுறுப்புக்கள் அனைத்தும் உள்ளிருந்தே உறுதியாகி இறுகி வளம்பெறும். அதற்கேற்றாற்போல தசைகளின் உருவமைப்பு மெருகேறி அழகுற அமையும். உடலைக் கட்டாக வைத்திருப்பதற்கு பளுதூக்குவது, மிகுந்த செலவில் உடற்பயிற்சிச் சாதனங்களை வாங்குவது எல்லாம் தேவையில்லாதது. சிலம்பம் செய்தாலே போதும். கம்பைச் சுழற்றும்போது மூச்சு விடுதல் சீராகி, மேல்மூச்சு கீழ்மூச்சு இயல்பாகி அதன்மூலம் இதய, நுரையீரல், சிறுநீரகக் கோளாறுகள் வராமல் நீண்ட காலம் நலமுடன் வாழலாம்.

சிலம்பம் என்பது வன்முறையைக் கற்பிக்கும் கலை என்று சிலர் சொன்னால் அது அவர்களது அறியாமையைத்தான் குறிக்கிறது. சிலம்பம் ஒரு சிறந்த உடற்பயிற்சி மற்றும் மனப்பயிற்சி முறை. நம் முன்னோர்கள் தம் தவ வலிமையால் நமக்கு அளித்திருக்கும் அற்புதமான சொத்து. இதனைக் கற்றுக் கொள்ளத் தவறுவதும், இக்கலையைத் தலைமுறைதோறும் காக்காமல் விடுவதும் நம்மை நாமே அழித்துக் கொள்வதற்குச் சமம்.

கே: சிலம்பத் திறனுக்கான போட்டிகள் உண்டா?

ப: உண்டு. பலவிதமான போட்டி முறைகள் உண்டு. உதாரணத்துக்கு ஒன்றை மட்டும் சொல்கிறேன். தொடுமுறை ஆட்டம் என்பது ஒருவகைப்போட்டி. 12 அடி - 24 அடி விட்டத்தில் இரண்டு வட்டங்களில் போட்டியாளர் இருவரும் நிற்க 4 நடுவர்கள் இருப்பர். கம்பால் அடுத்தவரை யார் விதிகளுக்கு உட்பட்டுத் தொடுகிறார் என்பதை வைத்து வெற்றிவீரர் நிர்ணயிக்கப்படுகிறார். இதில் தலையில் தொடக்கூடாது. பலமாக அடிப்பதோ, குத்துவதோ விதிக்குப் புறம்பானது. சிலம்பப் போட்டிகள் முதலில் மாவட்ட அளவில், மாநில அளவில், பிறகு நாடுகள் அளவில், நிறைவாகச் சர்வதேச அளவில் நடக்கின்றன.

கே: நீங்கள் பங்கேற்ற போட்டிகளைப்பற்றி கொஞ்சம் சொல்லுங்கள்.

ப: 2000ம் ஆண்டில் ஐரோப்பாவின் ருவோ, பாரிஸ் நகரங்களில் முதல் சிலம்பப் பயிற்சிப் பட்டறைகளை நடத்தினேன். தொடர்ந்து சில கலப்புத் தற்காப்புப் போட்டிகளில் பங்கெடுத்தேன். 2004, 2005ல் பெர்சியில் (Bercy International Martial Arts Festival) கலந்துகொண்டு All Style world championship வென்றேன். முதன்முதலில் இந்தியத் தற்காப்புக் கலையான சிலம்பத்தை உலக அரங்கில் மேடையேற்றிய பெருமை எனக்குக் கிடைத்தது. Pankration – Poludamas என்ற கிரேக்க மல்யுத்தப் போட்டியில் தங்கம் வென்றேன். பிறகு இதே போட்டிகளுக்கு நடுவராகவும் பயிற்சியாளராகவும் இருந்தேன். பல ஓபரா (opera) கலைஞர்களுக்கு, சிங்கப்பூர் இராணுவக்குழு, பெண், ஆண் பாதுகாவலர் குழு எனப் பலருக்குத் தற்காப்பு மற்றும் உடற்பயிற்சி கற்றுக் கொடுத்துளேன். பெரும்பாலான ஐரோப்பிய மற்றும் ஆசிய நாடுகளுக்கு இது தொடர்பாகச் சென்று வந்துள்ளேன். தற்போது உலகளாவிய பல தற்காப்புக் கழகங்களில் தலைவர் மற்றும் ஆலோசகராக உள்ளேன்.

கே: உங்கள் உணவு முறை எப்படிப்பட்டது?

ப: காலை எழுந்ததும் எலுமிச்சைச் சாற்றில் ஒரு தேக்கரண்டி மலைத்தேன் கலந்து பருகுவேன். தினமும் காலை ஆறு மணிக்குப் பயிற்சியை ஆரம்பித்து விடுவேன். சுமார் ஒரு மணி நேரம் பயிற்சி செய்வேன். காலை உணவாக முழுக்கூழ் அல்லது கஞ்சி போன்ற உணவுதான் ஏற்றது. கரைத்த பழைய கஞ்சியைப் போன்ற சிறந்த உணவு காலையில் வேறேதுமில்லை. ஏனெனில் இரவு முழுக்கச் சுரந்த சீரண அமிலங்களுக்கு ஏற்றது அதுதான். அது கோபத்தையும் கட்டுப்படுத்தும்.

மதியம்தான் திட உணவு. திட உணவுக்கு முன்னரும் பின்னரும் சிறிது தண்ணீர் உட்கொள்ளலாம். மீனும், காய்கறியும்தான் முக்கிய உணவு. மதிய உணவுக்குப் பின் 4 மணி நேரம் கழித்துத்தான் பயிற்சியில் ஈடுபடவேண்டும். அளவான இரவு உணவுக்குப் பின் குறைந்தது இரண்டு மணி நேரம் கழித்துத்தான் உறங்கவேண்டும்.

தமிழர்களின் சித்த மருத்துவப்படி சரியான உணவே நோயற்ற வாழ்விற்கான மருந்து. இதை ‘மருந்து' என்ற அதிகாரத்தில் திருவள்ளுவரும் அழகாகச் சொல்லியிருக்கிறார். ருசிக்காக உண்ணாமல் பசிக்காக உண்டால் உடலில் எந்தக் கோளாறும் இல்லை.

உடற்பயிற்சிகள் என்று சொன்னால் நான் மெய்ப்பாடம், உடற்கட்டுப்பாடம், தரைப்பாடம் மற்றும் பல எடை கர்லாக்கட்டை ஆகியவற்றைச் செய்வேன். மாலையில் வாளும், கேடயமும் சேர்ந்த பயிற்சி செய்வேன்.

கே: உங்கள் மனைவிக்கு உங்கள் கலைகளில் ஈடுபாடு உண்டா?

ப: எனது மனைவி கெய்னர். இங்கிலாந்தைச் சேர்ந்தவர். தமிழை முறைப்படிக் கற்றவர். சிலம்ப ஆராய்ச்சிக்காக என்னோடு பணியாற்றினார். பின்னர் காதல் மணம் புரிந்துகொண்டோம். அவர் சிலம்பம் கற்றுச் சில நிகழ்ச்சிகளும் செய்துள்ளார். எனது எல்லா முயற்சிகளுக்கும் உறுதுணையாக இருக்கிறார்.

கே: இந்தத் துறையில் நீங்கள் சாதிக்க நினைப்பது என்ன?

ப: இந்த சிலம்பாட்டக் கலையிலிருந்து கிளர்ந்த ஏராளமான தற்காப்புக் கலைகள் உலகெங்கும் வளர்ந்து கிளைவிட்டுள்ளன. இதன் பெருமை உணர்ந்து பல வெளிநாட்டினர் வந்து ஆராய்ந்து வியந்து செல்கின்றனர். ஆனால் இதைத் தொடர்ச்சியாய்ச் செய்ய, பழகிக் கொள்ள இன்னும் ஆர்வமான சூழல் தமிழகத்தில் வரவேண்டும். உள்ளூரில் செய்வதோடு உலகளாவிய அளவில் சென்று செய்ய நிறையபேர் உருவாக வேண்டும். இதுதான் எனது விருப்பம்.

என்னுடைய வாழ்நாள் இலட்சியம் அனைத்து நாடுகளிலும் சிலம்பக் கழகங்களை உருவாக்க வேண்டும். பலரும் அதைப் பயில வேண்டும். அதன்மூலம் இது ஒலிம்பிக் விளையாட்டில் ஒன்றாக அங்கீகாரம் பெற்றுவிடவேண்டும் என்பதுதான். இது ஒன்றும் கடினமான செயல் இல்லை. ஏற்கெனவே பல நாடுகளில் சிலம்பக் கழகங்கள் உள்ளன. தொடர்ந்து முயற்சி செய்தால் மிக விரைவில் ஒலிம்பிக்ஸில் சிலம்பமும் இருக்கும்.

##Caption## கே: நீங்கள் நடத்தும் பயிற்சிப் பள்ளிகள் பற்றிச் சொல்ல முடியுமா?

ப: பாண்டிச்சேரியில் குருகுல முறையில் தங்கிப் படிக்கும் தற்காப்புக்கலைப் பள்ளியை நடத்தி வருகிறேன். வேறு எந்த ஊரில் உங்களுக்குச் சிலம்ப வகுப்புக்கள் வேண்டுமென்றாலும் என்னைத் தொடர்பு பொள்ளலாம். சிங்கப்பூரிலும் சிலம்ப வகுப்புக்கள் நடைபெற்று வருகின்றன. அமெரிக்காவில் இந்தப் பயணத்தில் மட்டும் நூற்றுக்கு மேற்பட்டவர்களுக்குப் பயிற்சியளித்துள்ளேன். சிலர் பிறருக்குச் சொல்லித்தரும் அளவுக்கு ஆசிரியர் பயிற்சி எடுத்து வருகின்றனர். அமெரிக்காவில் உள்ள சிலம்ப ஆர்வலர்கள் சிலம்பக் கழகம் (American Silambam and Kuthuvarisai Federation) தொடங்கும் முயற்சியில் உள்ளனர். அது விரைவில் நிறைவேறும்.

கே: தென்றல் மூலம் விடுக்கும் செய்தி என்ன?

ப: தென்றல் வாசகர்கள் விடுமுறையில் தமிழகம் வரும்போதும் அந்தந்த ஊர்களில் உங்கள் குழந்தைகளுக்குச் சிலம்பம் கற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யுங்கள். இதுபோன்ற கிடைத்தற்கு அரியவற்றை அங்கு வந்து பயிலும்போது குழந்தைகளுக்கும் தமிழ்நாட்டுக்கு வர ஆர்வம் உண்டாகும். ஏனென்றால் சிலம்பம் என்பது தற்காப்புக்கலை மட்டுமல்ல; மன வளர்ச்சிக்கானதுமாகும்.

அவர் அடுத்த சுற்றுக்குக் கம்பை எடுக்குமுன் நன்றி கூறி விடைபெற்றோம்.

*****


அமெரிக்காவில் சிலம்பம் கற்றுக் கொள்வது பற்றிய விவரங்கள் அறிய:

சார்ல்ஸ்டன், தென் கரெலினா: Dr.சுந்தரவடிவேல் – (843) 864 7787- sundara@gmail.com
அட்லாண்டா, ஜார்ஜியா: செல்வகுமார் – (770) 337 5380 - classicaltamil@gmail.com
எழிலன் – (404) 226 2405 ezee@blueosinc.com
செயிண்ட் லூயி, மிசெளரி: பொற்செழியன் – (314)249 0706 - porchezhian@hotmail.com
மினியாபொலிஸ்,மின்னசோட்டா: சிவானந்தம் – (612) 306 7948 - msivanandam@yahoo.com
வளைகுடாப்பகுதி, கலிபோர்னியா: சோலை அழகப்பன் – (510) 676 9857 - solaim@yahoo.com

*****


செயிண்ட்லூயிஸ் நகரில் ஒரு சிறுவன் தனது சிலம்பாட்டக் கம்பின்மீது ஆசிரியர் ஜோதி கண்ணன் அவர்களின் கையொப்பம் கேட்க அவர் சிலம்பம் பற்றிய இரு கவிதை வரியை எழுதி அதில் கையொப்பமிட்டார். பிறகு ஒவ்வொரு மாணவ, மாணவிக்கும் வெவ்வேறு வரிகளை எழுதினார். இதோ அந்த சிலம்பக் கவிதை:

சிலம்பக் கலை இது சிறந்த கலை
கற்றவர் மனதில் அச்சமில்லை!
இடதுநிலை இது வலதுநிலை
உடலில் தெரியுது ராஜகலை
காலடி வைத்துச் சிலம்படி செய்தால்
கல்லும் முள்ளும் தூளாகும்
கையைத் தூக்கிச் சிலம்படி செய்தால்
சீரிய சிங்கமும் புறங்காட்டும்!
கலையைக் காக்கக் கற்றவனென்றால்
காப்பேனென்று உறுதி கொள்!


*****


இந்தியாவில் அவரோடு தொடர்புகொள்ள:

Mr.Jothi Senthil Kannan
President
International Silambam and Kuthuvarisai Federation (ISKF)
NO: 16,Kamarajar Salai, Poornankuppam Post,
PONDICHERRY 605007 INDIA
Phone – 9443287753
email - jothisilambam@gmail.com
www.silambam.org

*****


சந்திப்பு: இரா.பொற்செழியன், செயிண்ட் லூயி, மிசௌரி

© TamilOnline.com