ஸ்ருதிஸ்ரீ சுகுமார் பரத நாட்டிய அரங்கேற்றம்
ஜூன் 27, 2009 அன்று நார்த்க்ராஸ் நடுநிலைப் பள்ளியில் ஸ்ருதிஸ்ரீ சுகுமாரின் நாட்டிய அரங்கேற்றம் நடந்தது. ஸ்ருதிஸ்ரீ, தனது 5 வயது முதலே இந்தியாவில் நடனம் பயின்றவர். அமெரிக்கா வந்தபின் திருமதி செல்வி சந்திரநாதன் அவர்களிடம் ஒன்பது ஆண்டுகளாகப் பயின்று வருகிறார்.

திரு. சுகுமாரின் வரவேற்புரையைத் தொடர்ந்து தீபா பால விஜயனின் தொகுப்புரையுடன் நிகழ்ச்சி தொடங்கியது. முதலில் புஷ்பாஞ்சலிகளாக விநாயகர், முருகன், சிவன், பார்வதி மீதான துதிகளுக்கு ஆடினார். தொடந்து ஜதீஸ்வரம், வர்ணம், மீனாட்சி கல்யாணம், சிவதாண்டவம், தில்லானா என்று மூன்று மணி நேரம் மிகச் சிறப்பாக ஆடினார்.

சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட கவிதா ராமசாமி ஸ்ருதியின் நாட்டியத் திறமையைப் பாராட்டிப் பேசியதோடு அவர் மேலும் வளர வாழ்த்துக் கூறினார். அதைத் தொடர்ந்து ஆடிய ஸ்ருதிஸ்ரீ, சிவதாண்டவத்தின் ரௌத்திரத்தைக் கண்களிலும், கால்களிலும் காட்டினார். கானரஞ்சனி ராகத் தில்லானாவுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.

செல்வி சந்திரநாதன் (நட்டுவாங்கம்), பாமா விஸ்வேஸ்வரன் (குரலிசை), மாயூரம் சங்கர் (மிருதங்கம்), வெங்கட்ரமண் (குழலிசை), முடிகொண்டான் ரமேஷ் வீணை என அனைத்துமே நிகழ்ச்சிப் பரிமளிக்கச் செய்தன. ஸ்ருதியும் அவர் தாயும் நன்றி உரை கூற நிகழ்ச்சி நிறைவுற்றது.

ராஜி,
மேன்மத் ஜங்ஷன், நியூஜெர்ஸி

© TamilOnline.com