நார்த்-சௌத் அறக்கட்டளையின் 17வது பலுக்கல் தேனீ போட்டிகள் மேரிலாந்து யுனிவர்சிடியின் கல்லூரிப் பூங்காவில் ஆகஸ்ட் 1, 2 தேதிகளில் நடந்தது.
முதுநிலைப் பிரிவில் அனாமிகா வீரமணி (ஒஹையோ), ரம்யா ஆரோப்ரேம் (சான் ஹோசே) இருவரும் ஐம்பத்து மூன்று வார்த்தைகளுக்குத் தவறின்று எழுத்துப் பலுக்கி வெற்றி பெற்றனர்.
நியூயார்க்கைச் சேர்ந்த ஸ்ரீராம் ஹத்வார் இளநிலைப் பிரிவிலும், இல்லினாய் மாகாணத்தைச் சேர்ந்த பாவனா முப்பரப்பு ஜூனியர் சொல்வளம் (vocobulary) பிரிவிலும் பட்டத்தை வென்றனர். மேலும் சமீர் கைலாசா, நேஹா மிடிலா, வானீஷ் ஜெயின், நிக்கட் கௌரவராம், ஹரீஷ் ஜெயின் போன்ற பல இந்தியப் பாரம்பரிய இளையோர் வெவ்வேறு பிரிவுகளில் பரிசுகள் வென்றனர். குறிப்பாக, ஃப்ரீமாண்டைச் சேர்ந்த இரண்டாம் வகுப்பு மாணவி மைதிலி கோரி பில்லி, கணிதப் பிரிவில் முதல் பரிசைத் தட்டிச் சென்றார். இவர் இரண்டு வயது முதலே எழுதப் படிக்க ஆரம்பித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒஹையோவைச் சேர்ந்த ஆதித்யா கல்லூரி மற்றும் மிச்சிகனைச் சேர்ந்த த்ரிஷா ஜெயின் ஆகியோர் முறையே பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டிகளில் முதல் பரிசு வென்றனர். அட்லாண்டாவைச் சேர்ந்த பிரணவ் மஹாதேவன் அறிவுப் போட்டியில் (Brain Bee) முதல் பரிசை வென்றார்.
2009ஆம் ஆண்டின் ஸ்கிரிப்ஸ் ஹாவர்ட் எழுத்துக்கூட்டல் போட்டியில் தேசிய அளவில் வென்ற காவ்யா சிவசங்கரும், அவரது பெற்றோரும் நிகழ்ச்சிக்கு வருகை தந்து கௌரவித்தனர். காவ்யா கையொப்பமிட்ட அகராதிகளை அங்கே ஏலம் விட்டு அவற்றை ஏழை இந்தியப் பள்ளிக் குழந்தைகள் நிதியாக வழங்கினர்.
அறக்கட்டளையின் 70 மையங்களிலிருந்து 8500 பிராந்தியப் போட்டியாளர்களில் 800 பேர் தேந்தெடுக்கப்பட்டு இறுதிப் போட்டி விழாவில் பங்கு கொண்டனர். முதல், இரண்டாவது, மூன்றாவது இடங்களை வென்றவர்களுக்குத் தலா $1000, $500, $250 பரிசுத் தொகையாக அவர்களது கல்லூரி முதலாண்டில் வழங்கப்படும்.
இந்தப் போட்டிகளில் கலந்து கொள்ள அல்லது மேலும் விவரங்களுக்குத் தொடர்பு கொள்ள:
சமீத் பட்டாச்சார்யா அல்லது ரத்னம் சிந்தூரி தொலைபேசி - 1-630-455-9010 மின்னஞ்சல் - nsfcontests@gmail.com இணைய தளம்- www.northsouth.org
தமிழில்: சுப் மோகன், ஹூஸ்டன் |