மஹீதா பரத்வாஜ் கீபோர்ட் கச்சேரி
ஆகஸ்ட் 29, 2009 அன்று, செயின்ட் லூயிசில் உள்ள தாமஸ் ஜெஃபர்சன் உயர்நிலைப் பள்ளியில் பத்தாவது படிக்கும் மாணவியான மஹீதா பரத்வாஜ், க்ளேடன், மிசௌரியில் உள்ள எதிகல் சொசைட்டி அரங்கில் கீபோர்ட் கர்னாடக இசைக் கச்சேரி ஒன்றை நிகழ்த்தினார். இவர் சந்திரமௌலி, மைதிலி பரத்வாஜ் தம்பதியரின் மகள். மஹீதாவின் இசைப் பயிற்சிக்கு வித்திட்ட பாட்டி மீனாக்ஷி கோபாலன் அவர்களின் 80வது பிறந்த நாளையொட்டி இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

விரைவான தோடி ராக வர்ணத்தில் தொடங்கி, ரீதிகௌளையில் பாபனாசம் சிவனின் 'தத்வமறியத் தரமா' வாசித்தார். அடுத்து 'கருட கமன'வும் லதாங்கியில் மரிவேரெவும் குதூகலமாக வாசிக்கப்பட்டன. கனராகமான கரஹரப்ரியாவில் தியாகராஜ கிருதியான 'சக்கனி ராஜ'வை விஸ்தாரமாகச் செய்தார். பின்னர் வந்த 'ராகம்-தானம்-பல்லவி' பிரமாதம். காபி ராகத்தில் புரந்தரதாசர் கீர்த்தனையும், ரேவதி ராகத்தில் 'போ சம்போ'வும் அழகாகக் கையாளப்பட்டன. லால்குடி ஜயராமனின் தில்லானாவுடன் கச்சேரி முற்றுப் பெற்றது.

விட்டல் ராமமூர்த்தி (வயலின்), திருவாரூர் வைத்யநாதன் (மிருதங்கம்) ஆகியோர் பக்கவாத்தியம் வாசித்தனர்.

இதற்கு முன்பு மஹீதா பரத நாட்டியத்தில் சென்னை அடையாறு லக்ஷ்மண் அவர்களிடம் பயிற்சி பெற்ற பின் 2004ம் ஆண்டு அரங்கேற்றம் செய்துள்ளார். சமீபத்தில் சென்னையில் கீபோர்ட் கச்சேரிக் குறுந்தட்டு ஒன்று வெளியிட்டுள்ளார்.

சேதுராமன் சுப்ரமணியன்,
ராலீ, நார்த் கரொலைனா

© TamilOnline.com