இ.பா. நாடகப் பட்டறையும் ராமானுஜர் நாடகமும்
சான்பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதி யின் பாரதி நாடக மன்றமும், தமிழ்ப் பண்பாட்டு மையமும் இணைந்து பேரா. இந்திரா பார்த்தசாரதியின் நாடகப் பயிலரங்கம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தன. நாடக மன்றத்தின் மணி மு. மணிவண்ணன் பயிலரங்கத்தை ஒருங்கிணைத்து நடத்தினார். சங்கீத நாடக அகதமி விருது பெற்ற எழுத்தாளரும், நாடக ஆசிரியருமான இ.பா. அவர்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் விதமாக ஐந்து மாலை நேரங் களில் இந்தப் பட்டறை நடந்தது. பங்கு கொண்டவர்களில் பலரும் வளைகுடாப் பகுதியில் தமிழ் நாடகங்களை எழுதி, இயக்கி, நடித்த அனுபவமுள்ளவர்கள். பத்து நாடகங்களைப் படைத்ததுடன் பாண்டிச் சேரி பல்கலைக் கழக நாடகத் துறையின் இயக்குனராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற இ.பா. தனது அனுபவங்களையும், நாடகக் கலையின் நுணுக்கங்களையும், நாடக வடிவமைப்பு, மேடை உத்திகள், நடிப்புக் கலை போன்ற பல்வேறு அம்சங்களிலும் பயிற்சியளித்தார்.

முதல் நாளன்று இ.பா. இந்தியாவிலும் உலக அளவிலும் மேடை நாடகங்களின் தோற்றம், வளர்ச்சி, ஷேக்ஸ்பியர் நாடகங் கள், நிஜ நாடகங்கள், கிராமிய நாடகக் கலைகள், கூத்துக்கள் போன்ற பல்வேறு அரிய தகவல்களை விரித்துக் கூறினார். அபத்த நாடகங்களைப் பற்றியும் (theater of the absurd), நாடக ஆசிரியர் சாமுவேல் பெக்கெட் எவ்வாறு தனது அபத்த நாடகங் களின் மூலம் கொந்தளிக்கும் உணர்ச்சி களையும், இழப்புகளையும், மன அழுத்தங் களையும் அங்கதச் சுவையுடன் கலந்து அளித்தார் என்பதையும், தான் எழுதிய அபத்த நாடகங்களைப் பற்றியும் பேசினார். அபத்த நாடக பாணியில் இ.பா. எழுதிய 'பசி' என்ற நாடகம் படிக்கப்பட்டு அதன் உட்கருத்து அலசப்பட்டது. மேடையில் அதை நடிக்கத் தேவையான உத்திகள் குறித்தும் அலசப்பட்டன.

இரண்டாவது நாள் பயிற்சியில், இ.பா. எழுதிய 'அற்றதில் பெற்றது' என்ற சிறுகதையை மேடை நாடகமாக்கும் உத்தி கலந்தாலோசிக்கப் பட்டது. ஒவ்வொருவரும் அதைத் தங்கள் பாணியில் நாடக வடிவில் மாற்றி நடித்துக் காண்பித்தனர். அவற்றின் சாதக பாதகங்கள் பேராசிரியரால் விவரிக்கப்பட்டன.

மறுநாள் நடந்த பயிற்சியில் கபிலர் எழுதிய "திருந்திழாய்! கேளாய்" என்ற கலித் தொகைப் பாடலை (குறிஞ்சி 29) எடுத்துக் கொண்டு, எப்படி கவிதைகளை நாடக வடிவில் கொணர்வது என்பதைப் பேராசிரியர் அலசினார். அது எவ்வாறு ஒரு மேடை நாடக வடிவிற்கு ஏற்றதாக அமைந்துள்ளது என்பதை விவரித்தார்.

நான்காம் நாள் ஷேக்ஷ்பியரின் 'கிங் லியர்' நாடகத்தைத் தமிழில் இ.பா. மாற்றம் செய்த 'இறுதி ஆட்டம்' என்ற நாடகம் அலசப் பட்டது. 'மழை' நாடகத்தின் பாத்திரங்கள் வெளிப்படுத்தும் நுட்பமான உணர்வுகள் குறித்தும் பயிலரங்கு அலசியது. சிலப்பதிகாரம் ஏன் ஒரு நாடக வடிவம் என்பது குறித்தும் பேராசிரியர் ஒரு நீண்ட உரையாற்றினார். தவிர, பொதுவாக நாடகத் துறையில் உள்ள பல்வேறு உத்திகள், தொழில் நுட்பங்கள் குறித்தும் பல குறிப்புகளை வழங்கினார். பங்கு கொண்டவர்களுக்கு பெர்க்கிலி பல்கலைக் கழகத் தமிழ்த் துறைத் தலைவர் பேரா. ஜார்ஜ் ஹார்ட் மற்றும், பேரா. இந்திரா பார்த்தசாரதி ஆகியோர் கையெழுத்திட்ட சான்றிதழ்களை பாரதி நாடக மன்றத்தின் சார்பாக மணி மு. மணிவண்ணன் வழங்கினார்.

ச. திருமலைராஜன்,
பிரிமான்ட், கலி.

© TamilOnline.com