அமெரிக்கத் தமிழ் மருத்துவக் கழகத்தின் 5வது மாநாடு
2009 செப்டம்பர் 4-7 தேதிகளில் அமெரிக்கத் தமிழ் மருத்துவக் கழகத்தின் (ATMA) 5வது வருடாந்திர மாநாடு அட்லாண்டாவில் (ஜார்ஜியா) கூடியது. இந்த ஆண்டின் மையக்கருத்து 'தமிழ்க் குழந்தைகளுக்கு மருத்துவ வசதி'. மாநாட்டின் தலைவர் டாக்டர். ஆதிநாராயணனும் ஏனையோரும் முதல்நாளன்று அங்கே பேச வந்திருந்த ஜார்ஜியா காங்கிரஸ்மன் டாக்டர் டாம் ப்ரைஸ் அவர்களை வரவேற்றனர்.

4ஆம் தேதியன்று மாலை நிகழ்வுகள், டாக்டர் சுரேஷ் மற்றும் குழுவினர் ஏற்பாடு செய்திருந்த தொடரும் மருத்துவக் கல்வி வகுப்புகளோடு தொடங்கின. ஹார்வர்டு, எமரி போன்ற பல்கலைக் கழகங்களிலிருந்து வந்திருந்த பிரபல மருத்துவர்கள் இதில் பேசினர்.

சனிக்கிழமை மாலையில் பேசிய டாக்டர் ரகுராஜ், செல்வி பவித்ரா கூடூர் ஆகியோர் இலங்கையிலும் பிற வளரும் நாடுகளிலும் மருத்துவ வசதிகளில் ஏற்பட்டுள்ள பெரிய முன்னேற்றம் குறித்துக் கூறினர். பணம் தர வசதியில்லாத குழந்தைகளுக்கும் கூட நல்ல மருத்துவ சேவை செய்துவரும் பல்லாவரம் மருத்துவ மையம் பாராட்டுகளைப் பெற்றது.

ATMAவின் திட்டப்பணிகளான நாமக்கல் மருத்துவ முகாம், கூடலூர் ஆதிவாசி மருத்துவமனை, வாவிபாளையம் கிராம மருத்துவமனை, ஸ்ரீலங்கா சுனாமி நிவாரணம், கேட்ரீனா சூறாவளி நிவாரண நிதிக்கொடை, பால்டிமோரில் வீடற்றோருக்கு மருத்துவம், பேன்யன் (ஆதரவற்ற பெண்களுக்கான அமைப்பு) போன்றவற்றை வெற்றிகரமாக மேலும் நடத்திச் செல்ல நிதி திரட்ட வேண்டியதன் அவசியத்தைக் குறித்து டாக்டர் ஆறுமுகம், டாக்டர் ஆதிநாராயணன் ஆகியோர் பேசினர். இவை ஒருபக்கம் நடந்து கொண்டிருக்க, கிம் ஆம்ஸ்ட்ராங்கின் பாப் நடனமும், டாக்டர் சரவணன் சொக்கலிங்கத்தின் யோக வகுப்புகளும் மற்றொரு பக்கம் மருத்துவர்களின் குடும்ப உறுப்பினர்களை மகிழ்வித்துக் கொண்டிருந்தன.

டாக்டர்கள் ஜப்பார், சொக்கலிங்கம், நெடுஞ்செழியன் ஆகியோர் விழா மலரைத் திறம்படத் தயாரித்திருந்தனர். எமரி பல்கலையின் வெங்கட் நாராயணனுக்கு 'வாழ்நாள் சாதனையாளர்' விருது, மீனா மதூருக்கு 'இளம் ஆய்வாளர்' விருது, அஸ்மிதா ஸ்ரீனிவாசனுக்கு 'சிறந்த இளநிலை மருத்துவர்' விருது, நஸீரா தாவூதுக்கு 'பொதுச் சேவை' விருது ஆகியவை வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

மாநாட்டைச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த குழுவினரான டாக்டர்கள் ஜேய் ஜே. கோபால், வி.எஸ். பரிதிவேல், அப்துல் ஜப்பார், ராமச்சந்திரன், பாஸ்கரன், சேவியர் ரோஷ், செல்வராஜ், சுஜாதா ராஜாராமன், இந்திரன் இந்திரகிருஷ்ணன் ஆகியோர் பாராட்டப் பெற்றனர். 2009-10க்கான தலைவராக டாக்டர் சித்தையன் நெடுஞ்செழியன் பதவி ஏற்றார்.

சின்னி ஜெயந்த்தின் நகைச்சுவை நிகழ்ச்சி, கன்னிக்ஸ் கன்னிகேஸ்வரனின் இசை நிகழ்ச்சி ஆகியவை வந்திருந்தோருக்கு உற்சாகமூட்டின. வசந்தி ராமன், சாந்தி நாராயணன் ஆகியோரின் உணவு ஏற்பாடுகள் மிகச்சிறப்பு. அடுத்த வருடாந்திர மாநாடு சிகாகோவில் நடக்கும்.

அதிகத் தகவலுக்கு: www.atmaus.org

டாக்டர் நஸீரா தாவூத்

© TamilOnline.com