செப்டம்பர் 5, 2009 அன்று குமாரி அமிர்தா ஹரிஹரனின் பரதநாட்டிய அரங்கேற்றம் க்ளாஸன் உயர்நிலைப் பள்ளி, க்ளாஸனில் (மிச்சிகன்) நடைபெற்றது. பரதநாட்டியம், குச்சிபுடி ஆகியவற்றில் தேர்ந்த நடனமணியான குரு சந்தியாஸ்ரீ ஆத்மகுரி அவர்களிடம் 8 ஆண்டுகளாகப் பயின்று வருகிறார் அமிர்தா.
அமிர்தவர்ஷிணியில் புஷ்பாஞ்சலியுடன் நிகழ்ச்சி தொடங்கியது. ஹிந்தோள ராகத்தில் விறுவிறுப்பான ஜதீஸ்வரமும், குரு தண்டாயுதபாணிப் பிள்ளையின் பதமும் நிகழ்ச்சியைக் களைகட்டச் செய்தன. காம்போஜி ராக வர்ணம் அமிர்தாவின் திறமைக்குச் சவாலாக அமைந்ததென்றால், அதைத் தனது நளினமான அபிநயத்தாலும் நறுக்கென்ற அடவுகளாலும் சிறப்புறச் செய்தார். தசாவதார அஷ்டபதி (ராகமாலிகை), 'க்ஷீரஸாகரா' (தேவகாந்தாரி), 'சிவசக்தி' (சிவசக்தி) ஆகியவை கண்ணுக்கு விருந்தாக அமைந்தன. டாக்டர் யேசுதாஸ் பாடிப் பிரபலமான 'ஹரிவராசனம்' என்று தொடங்கு ஐயப்ப அஷ்டகத்துடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.
பவனி மல்லஜோஸ்யுல்லா (குரலிசை), பார்கவி பிரபு (வயலின்), ஜெயசிங்கம் (மிருதங்கம்), சசி (வீணை) ஆகியோருடன் குரு சந்தியாஸ்ரீயின் நட்டுவாங்கம் நிகழ்ச்சிக்குப் பெரும் பலமாக அமைந்தது. ஐயப்ப அஷ்டகத்தை நூரணி சந்திரா பாடினார். நிகழ்ச்சியை நகைச்சுவை கலந்து தொகுத்தளித்தார் அமிர்தாவின் சகோதரர் அருண்.
திருமதி கல்பனா வெங்கட் அவர்களிடம் கர்நாடக சங்கீதம் பயின்றுவரும் அமிர்தா 12ம் வகுப்பு மாணவி. படிப்பிலும் எப்போதும் 'A' கிரேடுதான். தேசிய அளவில் ஸ்பானிய மொழித் தேர்வில் அடுத்தடுத்து இரண்டு ஆண்டுகள் முதலாவதாக வந்திருக்கிறார். பள்ளியின் 'வாட்டர் போலோ' அணியில் இருக்கிறார். மிச்சிகன் தமிழ்ச் சங்க இளைஞர் அணியின் தலைவரும் ஆவார். 'நேஷனல் மெரிட்' தேர்வில் அரையிறுதியை எட்டியவரும் ஆவார். அமிர்தாவின் பெற்றோர்கள் கல்பனாவும் ஹரிஹரனும் அவரைப் பற்றிப் பெருமிதம் கொள்வதில் ஆச்சரியம் என்ன இருக்கிறது?
ஆங்கிலத்தில்: பேரா. கிருஷ்ணன், மிச்சிகன் தமிழில்: மதுரபாரதி |