செப்டம்பர் 12, 2009 அன்று ஸாரடோகா உயர்நிலைப் பள்ளி மெக்பீ அரங்கத்தில் லாஸ்யா டான்ஸ் கம்பெனி மாணவி ராதிகா ஐயரின் பரதநாட்டிய அரங்கேற்றம் நடந்தது.
குரு, கணேச தியானம், கம்பீர நாட்டையில் புஷ்பாஞ்சலியுடன் நிகழ்ச்சி தொடங்கியது. 'ப்ரணமாம்யஹம்' என்ற மைசூர் வாசுதேவாசார்யாவின் பாடலுக்கு கௌரிபுத்ரனை மிக அழகாக அபிநயித்தார் ராதிகா. தொடர்ந்த முருகன் மீதான பாரதியின் பாடல்களுக்கு ஐந்து ராகங்களில், வடிவேலனை 'குருவாக வந்து கவலைக் கடலைக் களைவாய்' என உருக்கத்துடன் அபிநயித்த விதம் சிறப்பு. பின் லால்குடி ஜெயராமனின் வர்ணத்துக்கு குழலூதும் மாதவனைத் தாளகதி தவறாமல் அபிநயித்தது நேர்த்தி. தொடர்ந்து பஞ்ச பூத ஈஸ்வரர்களை ஐந்து ராகம், ஐந்து தாளங்களில் பாடிப் பாராட்டைப் பெற்றார். 'சிவாய நம ஓம்' என கண்ணப்ப நாயனாரின் பக்தி பாவத்தைக் காண்பித்தது தத்ரூபம்.
அடுத்து 'பாவயாமி கோபால பாலம்' எனும் அன்னமாசார்யா கீர்த்தனைக்கு உறியிலிருந்து வெண்ணெய் எடுத்துத் தின்பதை பாவபூர்வமாக அபிநயித்தது வெகு அழகு. இறுதியாக தர்மபுரி சுப்பராயர் இயற்றிய ஜாவளி, ரங்கநாயகி ஜயராமன் இயற்றிய தில்லானா யாவும் கன கச்சிதம். மாணவியின் அரங்கேற்றத்திற்கான பெருமை குரு வித்யா சுப்ரமண்யம் அவர்களைச் சாரும். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் அவர் பரதத்தின் தஞ்சாவூர் பாணியைப் பற்றி விவரித்தது பயனுள்ளதாக இருந்தது.
ஆஷா ரமேஷ் (குரலிசை), சாந்தி-நாராயண் (வயலின்-மிருதங்கம்), வித்யா சுப்ரமண்யம் (நட்டுவாங்கம்) என பக்கவாத்தியங்கள் யாவும் நிகழ்ச்சிக்கு மிக்க உறுதுணையாக இருந்தன.
சீதா துரைராஜ், சான் ஹோசே, கலி. |