செப்டம்பர் 12, 2009 அன்று ஸ்ரீ ராம லலிதகலா மந்திர் கலைப்பள்ளியின் வெள்ளி விழா சன்னிவேல் நகரில் நடந்தது. 25 ஆண்டுகளாகக் கலிபோர்னியா மாகாணத்தில் கர்நாடக சங்கீத வளர்ச்சிக்கு அருந்தொண்டு ஆற்றிவருகிறார் ஸ்ரீமதி ஜெயஸ்ரீ வரதராஜன். இவரது மாணவ, மாணவியர் இவ்விழாவைக் கலைக் காணிக்கையாக அளித்தார்கள்.
'சிந்தனைகள்' என்ற முதற்பகுதி இசை வளர்த்த மேதைகளை நினைவுறுத்தியது. புரந்தரதாசரின் 'கஜவதனா' துதியுடன் நிகழ்ச்சி ஆரம்பித்தது. சங்கீத மும்மூர்த்திகளின் சீடரான சுப்பராய சாஸ்திரிகளின் 'ஜனன நினுவினா'வால் ஆராதனை செய்யப்பட்டது. அன்னமாச்சார்யாவின் 'எந்தமாத்ரமுன'வுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.
நிகழ்ச்சிக்கு நிகழ்ச்சி மாறிய வந்த வண்ணவண்ண ஆடைகளும், ஆபரணங்களும் நாடகக் காட்சிகள் போன்று இருந்தது. பாடல்களின் பெயர், ராகம், இயற்றியவர் பெயர், ஆங்கில மொழிபெயர்ப்பு ஆகியவற்றைத் திரையில் காண்பித்தது பிறமொழி ரசிகர்களுக்கு நிகழ்ச்சியை ரசிக்க உதவியாக இருந்தது. இடைவேளையில் கலைப்பள்ளியின் கால் நூற்றாண்டு சாதனைகளும், முன்னேற்றமும், வளர்ச்சிகளும் குறும்படமாகவும், ஒளிச்சித்திரங்களாகவும் காண்பிக்கப்பட்டன.
'பாரம்பரியம்' பத்ததி என்ற இரண்டாம் பகுதியில் கர்நாடக சங்கீதப் பயிற்சியின் படிக்கட்டுகள் வரிசையாகக் காண்பிக்கப்பட்டன. பயிற்சிகளும், அடிப்படையான குருபக்தியும், தெய்வ வழிபாடும் அழகாக விவரிக்கப்பட்டன. புரந்தரதாசரின் விநாயகர் துதி, தீக்ஷிதர் முருகனை வேண்டிப் பாடிய வர்ணம் என அனைத்தும் திருமதி ஜெயஸ்ரீயின் ஸ்வரஜதியுடன் சரஸ்வதி ராகக் கிருதியும் கூடி முதல்படியில் பாராட்டுப் பெற்றார்கள். பின்னர், 'குருவினா' என்ற தாசர் கிருதி குருபக்திக்கும், தியாகராஜரின் 'சங்கீத ஞானமு' கடவுள் பக்திக்கும் வழிகாட்டியாக அமைந்தன. 'சொகுசுகா மிருதங்க', 'மோக்ஷமுகலதா'வில் இறைவனை அடைய இசையே போதும், என்னும் உறுதிமொழி கிடைக்கிறது. அந்த உயர்நிலையை எட்டிய சாதகனின் ஆனந்தம் ஸ்வாதித் திருநாளின் துள்ளும் தனஸ்ரீ ராகத் தில்லானாவாக வெளிப்பட, பகுதி முடிவடைந்தது.
'உயர் நோக்கங்கள்' என்ற இறுதிப் பகுதியில் கச்சேரி செய்யத் தகுதிபெற்ற மாணவர்கள் பங்கேற்றனர். 'ஜகதோத்தாரணா' என்ற பஞ்சரத்ன கிருதியுடன் ஆரம்பித்து குரு, தெய்வ ஆசியை நாடும் கீர்த்தனங்களுடன் தொடர்ந்தனர். ராகம், தானம், பல்லவி, பக்கவாத்திய தனி ஆவர்த்தனம் வெகு சிறப்பு. இப் பகுதி தோடிராகத்தின் பெருமையை உணர்த்தியது. சுவாதித் திருநாள், கனகதாசர் சாஹித்யங்கள் இதை விளக்கின. ஆதிசங்கரரின் 'சிவ மானஸ பூஜை', 'கரசரணக்ருதம்' ஸ்லோகம் ஆகியவற்றால் குற்றம் குறைகளுக்கு மன்னிப்புக் கோரப்பட்டது. ஸ்ரீ ரமண பகவானின் 'அருணாசல சிவ' என்ற அக்ஷ ரமண மாலை ஜெபத்தின் காந்த சக்தியால் மன நிறைவும், அமைதியும் ஏற்பட, 'சாந்தி மந்திர' ஸ்லோகங்களுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.
ஸ்ரீராம லலித கலா மந்திர் பள்ளியை ஆரம்பித்து நடத்தி வரும் ஜெயஸ்ரீ வரதராஜனின் அடிப்படை நோக்கம், சங்கீதப் பயிற்சியால் அரங்கேறும் திறமைசாலிகளை உருவாக்குவதோடு, அவர்களை அடிப்படை நல்ல குணங்கள் இணைந்த முழு மனிதர்களாகப் பரிணமிக்கச் செய்வதே. இதன் பிரதிபலிப்பே இந்த விழா.
Dr.T.K. சுப்பிரமணியம் |