தென்றல் (செப். 2009) நகைச்சுவை இதழ் மீண்டும் மீண்டும் எடுத்துப் படித்துச் சுவைக்க வைத்தது. வாழ்க்கையில் மனிதர்கள் சிரிக்கவே மறந்து போய் விடுவார்களோ என்ற ஓர் அச்சமே ஏற்பட்டுவிட்டதால் அதற்கென்றே ஹ்யூமர் கிளப், தொலைக்காட்சியில் சில சேனல்கள், கிரேஸி மோஹன், எஸ்.வி.சேகர் போன்றோரின் முழுநீள நகைச்சுவை நாடகங்கள் போன்றவை இன்று அரும்பணி ஆற்றி வருகின்றன.
பதவியில் இருக்கும் அதிகாரிகளிடமும் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதில் ஒரு மென்மையும் நகைச்சுவையும் இருக்குமானால் எத்தனை சுகமாக இருக்கும். ஒருமுறை இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் ராஜாஜி அவர்கள் தனது சிப்பந்தி நீட்டிய தபாலை வாங்கிப்பார்த்தாராம். அதில் தபால்தலையைத் தலைகீழாக ஒட்டியிருந்தார் அந்த சிப்பந்தி. சிரித்துக்கொண்டே ராஜாஜி, "நாங்களெல்லாம் வெள்ளையர்களைத் திருப்பி அனுப்ப எவ்வளவு சிரமப்படுகிறோம். நீ ஒரு நொடியில் திருப்பிட்டியே!" என்று சொன்னாராம்.
ஒரு குறிப்பிட்ட இதழை மட்டும் நகைச்சுவை இதழ் என்று வெளியிடாமல் தொடர்ந்து நிறைய நகைச்சுவை விருந்து அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மீண்டும் மனமார்ந்த பாராட்டுக்கள்.
டாக்டர். அலர்மேலு ரிஷி
*****
தென்றல் பத்திரிகையில் வெளியிடும் தகவல்கள் மிகப்பிரமாதம். எல்லாமே படிக்க மிக சுவாரஸ்யமாக உள்ளன. கட்டுரைகள், நேர்காணல், சாதனையாளர்கள், பேட்டிகள், சிறுவர்பகுதி, மாயாபஜார் என எல்லாமே படுஜோர். ஆகஸ்டு மாத இதழில் வெளியான அனுமன் சாட்சி சூப்பர். மாதம் ஒருமுறை வெளியீடு ஆவதால் மாதம் முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாக ரசித்து ரசித்துப் படிக்கிறேன். மாதம் இருமுறை தென்றலை வெளியிட்டால் நன்றாக இருக்கும். ஆசிரியர் குழுவுக்கு என் உளமார்ந்த பாராட்டுகள்.
பிரேமா நாராயணன், இல்லினாய்ஸ்
*****
தென்றல் செப்டம்பர், 2009 இதழில் வெளிவந்த ‘கலைமகள் கைப்பொருள்' சிறுகதை அமெரிக்காவாழ் இந்தியக் குடும்பத்தைப் பிரதிபலிக்கிறது. தமிழ் எழுத்துக்களைப் பார்த்து 6 மாதமான எனக்கு இப்படி ஒரு அருமையான புத்தகம் மிகுந்த உற்சாகத்தையும், 5 மாத காலமாகத் தவறவிட்ட ஏக்கத்தையும் உண்டாக்குகிறது. பாராட்டுகள்.
அ. விஜயகுமாரி, டஸ்கலுசா, அலபாமா
*****
பக்கத்து அறையிலிருந்து என் கணவர் 'என்ன விஷயம், இப்படி வாய்விட்டுச் சிரிக்கிறாய்?' என்று கேட்டார். 'செப்டம்பர் மாதத் தென்றலைப் படித்துக் கொண்டிருக்கிறேன். அதில் பிரசுரமாகி இருக்கும் க்ரேஸி மோகனின் பேட்டிதான் இப்படிச் சிரிக்க வைக்கிறது' என்று பதில் அளித்தேன். எழுத்தாளராக இருப்பதால் எனக்குக் கிடைத்த ஒரு அரிய பொக்கிஷம் க்ரேஸி மோகனின் நட்பு. இந்த சினேகிதம் கடந்த பதினைந்து வருடங்களாக தொடர்கிறது. சென்னை செல்லும் போது ஒவ்வொரு முறையும் அவருடைய விருந்தாளியாக அவரது ஒரு நாடகத்தையாவது பார்க்காவிட்டால் எனக்குச் சென்னை வாசம் இனிக்காது.
சாதாரணமாகப் பேசும்போதே மோகனின் சென்ஸ் ஆஃப் ஹ்யூமர் தெரியும். மஹா புத்திசாலி. இதற்கெல்லாம் மேலாக அவரிடம் எனக்கு பிடித்த மிகப் பெரிய விஷயம் அவருடைய அடக்கமும், எளிமையும். திருவல்லிக்கேணி சிங்கப் பெருமாள் தெருவில் என் அப்பாவின் வீட்டில் நான் தங்கிய காலத்தில் ஸ்கூட்டரில் வந்த அதே மோகனைத்தான், பல படங்களுக்கு நகைச்சுவை வசனம் எழுதிப் புகழும் செல்வமும் நிறையப் பெற்று பல கார்கள் வாங்கிவிட்ட மோகனிடமும் பார்க்கிறேன். அவரைப் பேட்டி எடுத்து அவர் புகைப்படத்தை அட்டையிலும் போட்ட தென்றலுக்கு ஒரு கைகுலுக்கல் நிச்சயம்.
கீதா பென்னெட், தென்கலிஃபோர்னியா. |