ஆதவன் சூர்யா-கே.எஸ்.ரவிகுமார் கூட்டணியில் உருவான படம். 'அயன்' வெற்றிக்குப் பிறகு சூர்யா நடிக்கும் படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு உள்ளது. இப்படத்தில் பத்து வயதுச் சிறுவன் கதாபாத்திரத்தில் சூர்யா நடித்திருக்கிறார் என்று சொல்வதும் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேட்டைக்காரன் விஜய் நடிக்கும் இப்படத்தை இயக்குவது பாபுசிவன். இசை விஜய் ஆண்டனி. 'குருவி', 'வில்லு' எனச் சுமார் படங்களைத் தந்த விஜய் இந்தப் படத்தை மிகவும் எதிர்பார்க்கிறார். அருந்ததீ புகழ் அனுஷ்கா கதாநாயகி.
ஆயிரத்தில் ஒருவன் செல்வராகவன் தன் பாணியிலிருந்து விலகி, ஒரு வித்தியாசமான படம் தரவேண்டும் என எடுத்திருக்கும் படம் இது. 'பருத்தி வீரன்' படத்துக்குப் பின் கார்த்தி நடித்துள்ள படம். ரீமா சென், ஆண்ட்ரியா நாயகிகளாக நடிக்கின்றனர். ஏற்கனவே பாடல் குறுந்தகடு வெளியாகி படத்தைப் பற்றிய ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. இசை - ஜி.வி.பிரகாஷ்.
விண்ணைத்தாண்டி வருவாயா சிம்பு-த்ரிஷா இணையும் இப்படத்தை கவுதம் மேனன் இயக்குகிறார். ஹாலிவுட் தரத்தில் தமிழ்ப் படங்களை எடுத்து வரும் கவுதம் மேனன் தனது முதல் படமான 'மின்னலே'க்குப் பிறகு இப்போதுதான் மீண்டும் காதல் பக்கம் கவனத்தைத் திருப்பியுள்ளார். இசை ஏ.ஆர். ரஹ்மான் என்பது படத்திற்கு கூடுதல் பலம்.
பேராண்மை ஜெயம் ரவி நடித்திருக்கும் இப்படத்தை ஜனநாதன் இயக்கியிருக்கிறார். வித்தியாசமான கதை, கதைக்களம் காடு, ஐந்து நாயகிகள் என படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு உள்ளது.
மேற்கண்ட பட்டியலில் உள்ள படங்களில் சில இறுதிக் கட்டத்தில் வெளியாகாமல் போகவும் வாய்ப்பு உள்ளது. இதுதவிர சத்யராஜ், சுந்தர் சி, தனுஷ் நடிக்கும் படங்கள், நமீதாவின் ஜகன்மோகினி, மற்றும் புதுமுகங்கள் நடிக்கும் பல படங்களும் தியேட்டர் கிடைத்தால் வெளியாக வாய்ப்பிருக்கிறது.
அரவிந்த் |