டாக்டர் நா. கணேசனுக்கு மரபுச் செல்வர் விருது
நாசா விஞ்ஞானி, தமிழ் மணம் (tamilmanam.net) திரட்டியின் (Blog aggregator) நிர்வாகத் தலைவர்களுள் ஒருவர், தமிழாய்வாளர், தமிழ் ஒருங்குறி (யூனிகோடு) கட்டமைப்பாளர் எனப் பல துறைகளிலும் தனது கவனத்தைச் செலுத்தி வருபவர் ஹூஸ்டனில் உள்ள டாக்டர் நா. கணேசன். அவரது தமிழ்ச் சேவையைப் பாராட்டி சமீபத்தில் தமிழ்மரபு அறக்கட்டளை 'மரபுச் செல்வர்' விருது வழங்கி கௌரவித்தது. விழாவில் இந்திரா பார்த்தசாரதி, திருப்பூர் கிருஷ்ணன், பெ.சு.மணி, நரசய்யா உட்படப் பலர் கலந்து கொண்டனர்.

பன்மொழி அறிஞரான நா. கணேசன், அமெரிக்க ஐக்கிய நாடுகளின் மிகப்பெரிய தனியார் தமிழ் நூலகம் என்று போற்றப்படும் தமது வீட்டு நூலகத்தில், பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட அரிய நூல்களைச் சேமித்து வைத்திருக்கிறார். தமிழ்ப் பண்பாடு மற்றும் கலாசாரம் காக்கப்பட வேண்டும் என்பதில் மிகுந்த முனைப்புடன் ஈடுபட்டு வருகிறார். தமிழ் மரபு அறக்கட்டளைக்காகப் பல்வேறு பழைய நூல்களை மின்னூலாக்கி அளித்தது உட்படப் பல்வேறு தமிழ்ச் சேவைகளைச் செய்து வருகிறார்.

பொள்ளாச்சிக்காரரான டாக்டர். கணேசன் 'தமிழ்க் கொங்கு' (nganesan.blogspot.com) என்னும் தனது என்ற வலைப்பதிவில் பல பயனுள்ள தகவல்களை எழுதி வருகிறார். அவரது தமிழ்ப்பணி சிறக்கத் தென்றல் வாழ்த்துகிறது.

© TamilOnline.com