டாக்டர். மஹாதேவனுக்கு மக்ஆர்தர் 'மேதை' நிதி
கயிற்றில் தொங்கவிட்ட துணி எப்படி மடங்குகிறது, தோல் சுருங்கும் வடிவம் என்ன, கொடி பறக்கும்போது எப்படியெல்லாம் வடிவெடுக்கிறது - இந்தச் சாதாரண விஷயங்களைப் பற்றி நீங்கள் யோசித்ததுண்டா? இவற்றைச் சிக்கலான கணித மாடல்களில் சூத்திரங்களாகப் பிடித்துவிட முடியுமா? முடியும் என்கிறார் பேரா. லக்ஷ்மிநாராயணன் மஹாதேவன்.

மஹாதேவன் ஹார்வர்டு எஞ்சினியரிங் கல்லூரியில் பேராசிரியராகப் பணி புரிகிறார். தேசிய அளவிலான தேடலில் தேர்வுபெற்ற இருவரில் மஹாதேவன் ஒருவர். 500,000 டாலரை மக்ஆர்தர் அறக்கட்டளை இவருக்கு "இதுவரை செய்தவற்றுக்குப் பாராட்டாக அல்ல, செய்யப் போவதற்காக" வழங்கியிருக்கிறது. இந்த நிதி, மனிதகுல நன்மைக்காகப் படைப்பாற்றலோடு செயல்பட இவர்களுக்குச் சுதந்திரம் தரவேண்டும் என்பது நோக்கம்.

பலதுறைகளின் முன்னோடிகள் இந்த நிதிபெறுவதற்கான 'ஜீனியஸ்'களின் பெயர்களை அவர்கள் அறியாமல் முன்மொழிகிறார்கள். இறுதியாகத் தேர்ந்தெடுக்கும்வரை யாருக்கும் எதுவும் தெரியாது. மஹாதேவனுக்கு திடீரென்று போனில் தகவல் வந்தது. அவர் கூறுகிறார், "இந்த அங்கீகாரம் மகிழ்ச்சியைத் தருகிறது. அறக்கட்டளை என்மீது வைத்திருக்கும் நம்பிக்கை எக்கச்சக்கம்".

இந்தியாவில் IITயில் படித்தபின் டெக்ஸாஸ், ஸ்டேன்ஃபோர்டு ஆகிய பல்கலைக்கழகங்களில் மேலே படிப்பு, ஆய்வுகள் செய்து முனைவர் பட்டம் பெற்றார். கேம்பிரிட்ஜ் பல்கலையில் பணியாற்றிக் கொண்டிருந்த மஹாதேவன் 2003-ல் ஹார்வர்டில் பணிக்குச் சேர்ந்தார்.

© TamilOnline.com