துப்புரவுத் தொழிலாளி காந்தி
காந்திஜி தென்னாப்பாரிக்காவில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சமயம். அவருக்கு தோட்ட வேலை செய்யும் பணி கொடுக்கப்பட்டிருந்தது. மண்வெட்டியால் நிலத்தைக் கொத்திப் பண்படுத்துவது அவரது வேலையாக இருந்தது. விடியற்காலை ஐந்து மணிக்கெல்லாம் எழுந்துகொள்ளும் காந்தி ஏழு மணிக்கெல்லாம் சரியாக வேலை செய்ய வந்து விடுவார். அது கடும் கோடைக் காலமாதலால் அதிகாலையிலேயே வெயில் சுள்ளென்று உறைக்கும். ஆனாலும் அந்த வெயிலில் நின்று கொண்டு ஓய்வு ஒழிச்சலின்றி அவர் வேலை செய்ய வேண்டி இருந்தது. அதுவரை அதுபோன்ற கடுமையான பணிகளைச் செய்தறியாதவர் என்பதால் காந்திஜியின் கைகளில் பெரிய பெரிய கொப்பளங்கள் ஏற்பட்டு விட்டன. விரல்களை நீட்டி, மடக்க முடியாத நிலை வந்து விட்டது இருந்தாலும் காந்திஜி தொடர்ந்து அந்த வேலையைச் வேலை செய்துகொண்டிருந்தார்.

ஒருநாள் வார்டர், மலம் கழிக்கும் இடத்தை சுத்தம் செய்வதற்காக இரண்டு இந்தியக் கைதிகளை அனுப்பி வைக்கும்படி காந்திஜியிடம் சொன்னார். காந்திஜியும் சரி என்றார். சற்று நேரத்தில் தன்முன் வந்து நின்றவரைப் பார்த்து திகைத்துப் போய் நின்று விட்டார் வார்டர். காரணம், மலம் சுத்தம் செய்யும் அந்த வேலைக்காக வந்து நின்றவர் சாட்சாத் காந்தியேதான்.

"உங்கள் ஆட்கள் யாரும் வரவில்லையா?" என்று கேட்டார் வார்டர். "நான்தான் அந்த ஆள்" என்றார் காந்திஜி சிரிப்புடன்.

"சரிதான், ஆனால் நீங்கள் ஒரு பாரிஸ்டர் அல்லவா? நீங்கள் போய் மலம் கழிக்கும் இடத்தைச் சுத்தம் செய்வது சரியாகுமா? " என்று கேட்டார் வார்டர்.

"நான் ஒரு மனிதன். என்னுடனிருப்பவர்களும் சகமனிதர்கள் தாம். அதனால் நாங்கள் பயன்படுத்தும் இடத்தைக் கழுவிச் சுத்தம் செய்வதை நான் இழிசெயலாகக் கருதவில்லை. இதைச் செய்வதில் எனக்கு எந்த விதமான அருவருப்பும் இல்லை. இதுபோன்றவற்றிலும் ஒருவருக்குப் பழக்கம் இருக்க வேண்டும் என்பதுதான் எனது கருத்து" என்று சொன்ன காந்தி, கையில் வாளியையும், துடைப்பத்தையும் ஏந்திக்கொண்டு துப்புரவு செய்யப் புறப்பட்டுச் சென்றார்.

*****


ஏழை நாட்டில் ஆடம்பரம்

தென்னாப்பிரிகாவிலிருந்து இந்தியா வந்த காந்திஜி, காங்கிரஸ் பேரியக்கத்தில் சேர்ந்து சமூகப் பணிகளை மேற்கொண்டிருந்தார். அவரது பெருமையைக் கேள்வியுற்ற பண்டித மாளவியா, தாம் காசியில் நிறுவிய இந்துப் பல்கலைக் கழகத்தின் திறப்பு விழாவுக்கு அவரை அழைத்திருந்தார்.

விழாவுக்குப் பல்கலைக் கழகத்திற்கு ஏராளமாக நன்கொடை அளித்த மகாராஜாக்களும், தனவான்களும் மிக ஆடம்பரமாக வந்திருந்தனர். அதைக் கண்ட காந்திஜிக்கு நெஞ்சு பொறுக்கவில்லை. அவர் தன் பேச்சில், இந்தியாவின் ஏழைமையை விளக்கியதுடன், அந்த ஏழைகளைக் காப்பாற்ற வேண்டிய ராஜாக்களும், மகாராஜாக்களும் ஆடம்பரமாக வாழ்வதையும், அவர்கள் ஏழைகளுக்குச் செய்யும் கொடுமைகளையும் பற்றி சிறிதும் அஞ்சாமல் கண்டித்துப் பேசினார். இதனால், காந்திஜியிடம், சில காங்கிரஸ் தலைவர்களும், ராஜாக்களும், மிகவும் வெறுப்புக் கொண்டனர்.

ஆனாலும் அவர் மனத்தில் பட்டத்தை அப்படியே வெளிப்படையாகப் பேசியதால், பிறர் அபிப்பிராயங்களுக்காக தன் கருத்துக்களை மாற்றிக் கொள்ளாதவர் என்பதும், சொல்லும், செயலும் ஒன்றாகப் பொருந்தியிருக்கும் தலைவர் என்பதும் மக்களுக்குத் தெரிய வந்தது. அதுவே அவருக்கு நாளடைவில் மகாத்மா அந்தஸ்தைத் தந்தது. மதிக்கத் தொடங்கினர்.

*****


மக்கள் பணம் வீணாகக் கூடாது

காந்திஜி யெரவாடா சிறையில் இருந்த சமயம். அவர் நீராடுவதற்காகச் சக கைதி ஒருவர் வென்னீர் போட்டார். ஆனால் உடன் அடுப்பை அணைக்க மறந்து விட்டார். அதைக் கண்ட காந்திஜி, உடனே அதை அணைக்கும்படி சற்றுக் கடுமையாக அந்தக் கைதியிடம் சொன்னார். அப்போது அங்கே வந்த சிறைக்காவலர், "அடுப்புக் கரியை அரசாங்கம் வாங்கித் தருகிறது. நீங்கள் ஏன் அதற்காக வீணாகக் கவலைப்படுகிறீர்கள்?" என்றார்.

உடனே காந்திஜி அவரிடம், ‘அராசங்கம் வாங்கித் தருகிறது என்பது சரிதான். ஆனால் அந்தப் பணம் எம் மக்கள் பணம். அதில் ஒரு காசு விரயமாவதையும் நான் விரும்பமாட்டேன்" என்றார்.

*****


அதையே செய்வேன்

காந்திஜி பத்திரிகையாளர்களைச் சந்தித்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு வெளிநாட்டுப் பத்திரிகையாளர் அங்கே வந்தார். அவர் காந்திஜியிடம், "உங்களை ஒருநாள் மட்டும் இந்நாட்டின் கவர்னர் ஜெனரலாக நியமித்தால் என்ன செய்வீர்கள்?" என்று கேட்டார்.

அதற்கு காந்திஜி, "கவர்னர் ஜெனரல் மாளிகை அருகே அமைந்துள்ள துப்புரவுத் தொழிலாளிகளின் குடியிருப்பைச் சுத்தம் செய்வேன்" என்றார்.

"உங்களை மேலும் ஒருநாள் அப்பணியில் நீட்டித்தால்?..."

"மறுநாளும் அதையேதான் செய்வேன்."

*****


நீங்களும் கற்றுக் கொள்ளலாம்

காந்திஜியிடம் ஆலோசனை கேட்பதற்காக ஒருமுறை சேவாகிராமத்துக்கு சர்தார் படேலும், ஜவஹர்லால் நேருவும் சென்றிருந்தனர். அப்போது காந்திஜி பயிற்சியாளர்களுக்குச் செருப்புத் தைப்பது எப்படி என்று வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தார். துண்டுகளை இப்படிப் பொருத்த வேண்டும். தையலை இப்படிப் போட வேண்டும். அடிப்பாகம் அதிக எடையைத் தாங்குவதால் சரியான முறையில் அதனைப் பொருத்த வேண்டும் என்றெல்லாம் அவர் மாணவர்களுக்கு விரிவாக விளக்கிச் செய்முறைப் பயிற்சி தந்து கொண்டிருந்தார்.

அதைப் பார்த்த நேருவும், படேலும், என்ன இது பொன்னான இந்த நேரத்தை இந்தப் பயிற்சியாளர்கள் இப்படிப் பாழடிக்கிறார்களே! என்று அங்கலாய்த்தனர்.

உடனே காந்திஜிக்குக் கோபம் வந்து விட்டது. "அவர்கள் கற்றுக் கொள்வதைக் குறை சொல்லாதீர்கள். வேண்டுமானால் நீங்களும் வந்து இப்படி அமர்ந்து நல்ல ஜோடி செருப்பை எப்படிச் செய்வது என்று கற்றுக் கொள்ளலாம்" என்றார்.

நேருவும், படேலும் பதில் பேச முடியாமல் மௌனமாக நின்றனர்.

© TamilOnline.com