மதுரபாரதியின் புத்தம் சரணம்
ஏறத்தாழ நூறாண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்தவனான பாரதியின் வாழ்க்கை வரலாற்றை வேறுவேறு நூல்களின் வழியே படிப்பவர்களுக்கு ஒரே சம்பவத்தை வெவ்வேறு ஆசிரியர்கள் எப்படி முரண்படச் சித்திரிக்கிறார்கள் என்பது தெரியும். புத்தருடைய வாழ்க்கையோ சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்டது. மிகமிகப் பலரால் -- குறிப்பாக வெளிநாட்டவரால் -- ஆவணப்படுத்தப்பட்டது. அதற்கும் மேல், இவற்றுக்கெல்லாம் ஆதாரமானதும் பழமை யானதுமான புத்த சரித்திரம் புராணங்களை ஒத்து நடப்பது. புராணங்களில் வரும் நாயகர்கள் விவரிக்கப்படும் விதத்துக்கும், புத்தருடைய வாழ்க்கை இந்தப் பண்டைய மற்றும் வெளிநாட்டு ஆசிரியர்களால் விவரிக்கப்படுவதற்கும் அதிகம் பேதமில்லை. புத்தர் வான்வெளியில் நடப்பார்; தீ உமிழும் நாகத்தைத் தன் ஆற்றலால் எரிப்பார்; நினைத்த மாத்திரத்தில் தொலை தூரத்தில் நடக்கும் சம்பவங்களை உணர்ந்து, தன் அக ஆற்றலை அங்கே அனுப்பிவைப்பார். கற்பனையோ என்று எண்ணத் தூண்டும் பல சம்பவங்களும், சத்தியத்தின் தரிசனத் தைக் காட்டும் பல சம்பவங்களும் ஒன்றாகக் கலந்த ஒன்றுதான் புத்த சரித்திரம்.

இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட ஒருவரின் வாழ்க்கையை, அதுவும் புராணங்களின் வடிவத்தில் பதிவு செய்யப் பட்ட வாழ்க்கையை, இன்றைய வாசகனுக்கு எடுத்துச் சொல்வது என்பது அவ்வளவு எளிதன்று. அதிலும் வாசகனுடைய கவனத்தைச் சிதறவிடாமல், அவனுக்கு எட்டக்கூடிய வகையில் சொல்வது கிட்டத் தட்ட 'வைக்கோல்போர்-ஊசி' பழமொழி சொல்வார்களே, அவ்வளவு எளிதான ஒன்று!

இப்படிப்பட்ட புராணச் சாயல் கொண்ட வரலாற்றின் ஊடே புத்தருடைய தத்துவங்களையும், போதனைகளையும், கொள்கைகளையும் அங்கங்கே தூவியபடி, மிகப் பயனுள்ள வகையில் நடக்கிறது 'புத்தம் சரணம்'. பல இடங்களில் (பொதுவாகப் பெயர் மட்டுமே சொல்லப்பட்டு விடப்பட்டுவிடும்) வடமொழி மற்றும் பாலி மொழிப் பெயர்கள், சொற்கள், புத்த மதத்துக்குத் தொடர்புள்ள, அந்த மதத்தின் கொள்கைகளுக்கான பெயர்கள் போன்றவற்றின் பொருளையும் உட்பொருளையும் கூட விடாமல் விளக்குகிறார் மதுரபாரதி. எடுத்துக்காட்டாக, 'ரித்தி' என்றால் என்ன, கிருத்திரகூடம் என்றால் என்ன, எந்தச் சொல் வடமொழி, எந்தச் சொல் வடமொழியின் பாலி வடிவம், இந்தச் சொற்களின் தமிழ் வடிவம், பொருள் என்ன என்றெல்லாம் பல விவரங்கள் வாசகனை ஈர்க்கும் வண்ணமும், எளிதாகப் புரியும் வண்ணமும் விவரிக்கப்பட்டுள்ளன. மிகச் சிறிய விவரத்தையும் நேர்த்தியாகத் தரும் ஆசிரியரின் கைவண்ணம் 'தென்றல்' வாசகருக்குப் புதியதன்று என்றாலும் இதைக் குறிப்பிடத்தான் வேண்டும்.

புத்த மதத்தில் வழங்கப்பட்டு வந்துள்ள வழக்கங்களும் சரி; சித்தாந்தங்களும் சரி, எப்படி புத்தரின் காலத்திலேயே பெரு மாறுதலுக்குள்ளாயின என்பதையும் ஆசிரியர் தொட்டுக்காட்டுகிறார். எடுத்துக்காட்டாக, புத்தர் துறவறம் மேற்கொள்ளும்போது ஒரு பிணத்தைப் போர்த்தி வந்த ஆடையை எடுத்து உடுத்திக்கொண்டார். ஆகவே புத்த பிட்சுகள் பிணத்தைப் போர்த்திய ஆடையை மட்டுமே அணியவேண்டும் என்று தொடக்கத்தில் வலியுறுத்தப்பட்டது. இது புத்தருடைய காலத்திலேயே மாறியது. ஏன் மாறியது, என்ன பின்னணியில் மாறியது என்ற விவரங்களை நூலாசிரியர் சிரத்தையோடு விவரித்திருக்கிறார். இப்படிப் பல கொள்கைகள் மாறியதன் பின்னணியும் காரணங்களும் விளக்கப்பட்டுள்ளன. மாறுதல்களை புத்தமதம் புத்தரின் வாழ்நாளில் ஏற்றுக்கொண்டது என்பது தெளிவாகிறது.

அசைவத்தை மறுக்கவேண்டிய பிட்சுவின் பிச்சைப் பாத்திரத்தில் அசைவ உணவு வந்து விழுந்தால் என்ன செய்வார்? 'எனக்குச் சைவ உணவை மட்டுமே பிட்சையாகப் போடு' என்று பிட்சையிடுபவரிடம் சொல்லவா முடியும்? அப்படிப்பட்ட தருணங்களில் புத்த பிட்சு என்ன செய்யவேண்டும் என்று புத்தர் கருதினார்? நூல் விளக்குகிறது. பின்னாளில் இந்த நிலைப்பாடு பெற்ற பல்வேறு மாற்றங்களும், சமூக-கலாசார விளைவுகளும் வாசகன் புரிந்துகொள்வதற்கு ஏதுவாக, சொல்வது சொல்லி, விடுவது விட்டு, உணர்த்துவது உணர்த்தி நடக்கிறது 'புத்தம் சரணம்'.

புத்தரின் வாழ்க்கை குறித்த கதைகள் இத்தனையை ஒரே இடத்தில் நான் பார்த்ததில்லை. பல மரபுகளில் வழங்கும் கதைகளையும் எளிமையாக, கோர்வையாக, சுவை குன்றாமல் தொகுத்துச் சொல்கிறார். அதிலும் புத்தரின் தத்துவங்களை வாசகன் அலுப்படையாமல் எப்படிக் கதைக்குள் லாவகமாகப் பின்னிவைக்கிறார் என்பது படித்துச் சிலாகிக்க வேண்டிய ஒன்று. மாதிரிக்கு ஓரிரண்டு புத்த ஜாதகக் கதைகளும் உண்டு. தவிர, இந்தியாவுக்கு வந்த முக்கியமான சீன யாத்திரிகர்களான பா ஹியான், யுவான் சுவாங் போன்றவர்கள் விவரித்துள்ள சுவையான அனுபவங்களும் காணக் கிடைக்கின்றன.

இப்படிப்பட்ட நூலைப் படைப்பது என்பது இமாலய சாதனைகள் வரிசையில் சேர்க்கப்படவேண்டிய ஒன்று. ஏனெனில், இந்தத் தலைப்பில் இறைந்து கிடக்கும் ஆங்கில நூல்கள் எராளம். புராண வடிவத்தைப் புரிந்துகொண்டு, ஆங்கில நூல்கள் சொல்லும் செய்திகளை மனத்தில் இருத்திக்கொண்டு, சித்தாந்தங்களை மிகச் சாதாரணமான வாசகனும் புரிந்துகொள்ளும்படியாக, நேர்மையாகவும், தற்கருத்தேற்றம் இன்றியும், படிப்பவர் நெஞ்சில் ஆழத் தைக்கும் வண்ணமும் சொல்வது எல்லாராலும் இயலாத ஒன்று. மதுரபாரதிக்கு அது கைவந்திருக்கிறது. 'புத்தம் சரணம்' எல்லா வகையிலும் வென்றிருக்கிறது.

புத்தம் சரணம்
எழுதியவர்: மதுரபாரதி
வெளியீடு: கிழக்கு பதிப்பகம்,எண் 16, கற்பகாம்பாள் நகர், மயிலாப்பூர், சென்னை 600004.
வலைதளம்: www.newhorizonmedia.co.in இணையம் வழியே வாங்க: www.kamadenu.com

ஹரிகிருஷ்ணன்

© TamilOnline.com