தடுமாறும் உலகப் பொருளாதாரச் சூழலில் ஆரம்பநிலை நிறுவனங்கள் பிழைப்பதும் தழைப்பதும் எவ்வாறு?
(பாகம் - 9)

இதுவரை: சென்ற பகுதிகளில், மூலதனம் கிடைக்கும் வரை ஆரம்பநிலை நிறுவனங்கள் பிழைத்திருப்பதோடு மட்டுமல்லாமல், மீண்டும் பொருளாதார நிலை அனுகூலமாக ஆரம்பிக்கும் போது, மூலதனக் கவர்ச்சியுடன் மீண்டும் தழைப்பதற்கு ஆயத்தமாகும் முறையில் செயல்பட வேண்டும் என்று பார்த்தோம். அதற்கான செயல்முறைப் பட்டியலில் இதுவரை, செலவுக் குறைப்பு, கவனக் கூர்மை, மற்றும் மறுபரிசீலனை பற்றி விவரித்தோம். அடுத்து, மூலதனம் பெறும் மாற்று வழிகள் பற்றித் தொடர்கிறோம்.

அமெரிக்க ஆரம்ப நிலை மூலதனத்தார் மிகவும் தயங்கும் இந்நிலையில் மூலதனம் பெறுவதற்கான மாற்று வழிகள் இன்னும் சில கூறினீர்கள்; மேலும் சில வழிகள் உள்ளனவா?

மேலும் சில வழிகளும் உள்ளன. இந்தக் கேள்வியைப் பற்றி கடந்த இரண்டு தென்றல் இதழ்களில் நிறையவே அலசிவிட்டதால், அவற்றைப் பற்றிச் சற்று குறுகலாகக் கூறிவிட்டு, அடுத்த கேள்வியைச் சந்திக்கலாம்!

##Caption## சில சமயம், வாடிக்கையாளர்கள் தங்களுக்கு வேண்டிய மாதிரி விற்பொருள் தயாரிப்பதற்காக ஒட்டுமொத்தமாக ரொக்கமளிப்பதுமுண்டு. அதைப் பிற்காலத்தில் அளிக்க வேண்டிய விற்பொருளின் விலையின் முற்சந்தாவாகவோ, அல்லது அனுகூலமான தள்ளுபடி விலை வைத்துக் கொள்வதற்காகவோ தருவதாக ஒப்பந்தம் செய்து கொள்வார்கள். ஆனால் உங்கள் நுட்பத்தை ஒட்டுமொத்தமாக அவர்களே எடுத்துக் கொண்டுவிடுவது, அல்லது பொதுவணிகத்துக்கு உதவாமல் அந்த வாடிக்கையாளருக்கு மட்டுமே வேண்டிய மாதிரி உங்கள் நுட்பம் அமைந்துவிடுவது போன்ற அபாயங்களுக்கு உள்ளாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

ஸிலிகான் வேல்லி பேங்க் (Silicon Valley Bank) போன்ற சில நிதி நிறுவனங்கள் ஆரம்பநிலை நிறுவனங்களுக்குக் கடன் அளிக்கிறார்கள். சில தருணங்களில் இது VC-களுக்கு பங்கு விற்று நிதி திரட்டுவதைவிட எளிதாக இருக்கக் கூடும்.

இந்தக் கடனில் இரு பகுதிகள் உள்ளன. உங்கள் நிறுவனச் சொத்துக்களைப் அடமானமாக ஏற்றுக் கொண்டு அளிக்கப்படும் கடன் ஒரு பகுதி. இது நிறுவனத்தில் பயன்படுத்தப்படும் கணினிகள் மற்றும் மின்வலைச் சாதனங்கள் மட்டுமன்றி, பேட்டன்ட்டுகள் மற்றும் மென்பொருள் நுட்பம் போன்ற அறிவுசார் சொத்துக்களையும் (intellectual property) சேர்த்துத்தான் அடமானம் கேட்பார்கள். கடனின் இரண்டாம் பகுதி உங்கள் வருமானத்தைப் பொருத்தது. நீங்கள் வாடிக்கையாளருக்கு விற்ற பின், உங்களுக்கு வரவேண்டிய தொகை வந்து சேர்வதற்கு 30 முதல் 90 நாட்கள் ஆகக்கூடும். அதனால், அத்தொகை வரும் எதிர்பார்ப்பில், நிறுவனம் நடத்தும் மூலதனமாக (operating capital), வருமானத்தின் ஒரு சதவிகிதமாகக் கடன் வசதி அளிப்பார்கள் (credit line facility against accounts receivable amount).

இந்த இரு விதமான கடன்களுமே எதையாவது அடமானமாக வைத்தால்தான் தருவதால், இது எல்லா ஆரம்பநிலை நிறுவனங்களுக்கும் பொருந்தாது. உங்களிடம் இருக்கும் ரொக்கம், சொத்துக்கள் மற்றும் வருமானத்தின் குறிப்பிட்ட சதவிகிதமே கிடைப்பதால், இவையெல்லாம் கணிசமாக இருக்கும் நிறுவனங்களுக்குத்தான் இத்தகைய மாற்று நிதி பொருந்தி வரக்கூடும்.

இத்தகைய கடன் வழக்கமாக பல நிபந்தனைகளுடன் தான் அளிக்கப்படும். அளித்த கடனின் ஒரு பகுதி மதிப்புக்கு பிற்காலத்தில் உங்கள் பங்குகளை நிகழ்கால மதிப்பீட்டை விடக் குறைந்த விலைக்கு வாங்கிக் கொள்ளும் வாய்ப்புக் கேட்பார்கள். இதற்கு வாரண்ட் (warrants) என்று பெயர். இது உங்கள் பங்கு மதிப்பீட்டைக் நீர்க்கச் செய்யலாம் (diluation). ஆனால் இது மேற்குலப் பிரச்சனை (high class problem) - அதாவது உங்கள் பங்கு அதிக விலையாகும் நேரத்தில்தான் இது பிரச்சனையாகிறது. நிறுவனம் அந்த நிலைக்கு இன்னும் போய்ச் சேராத நிலையில் நேரக்கூடிய இன்னும் சில பிரச்சனைகளும் நிறுவனக் கடன் திட்டங்களில் உள்ளன.

சில சமயம் அதிகமான வருடாந்தர வட்டி சதவிகிதம் இருக்கக் கூடும். உடனடியாகக் தேவையில்லாமல் ஒரு பாதுகாப்புக்காக வேண்டும் என்றாலும் கூட ஒரு குறைந்தபட்ச அளவுக்காவது உடனடியாக வாங்கிக்கொள்ள வேண்டும் என்று வற்புறுத்துவார்கள். அதற்கான வட்டி கட்டியாக வேண்டியிருக்கும். நிறுவனத்துக்கு எதாவது இடர் ஏற்பட்டால் தமது கடனைத்தான் முதலில் திருப்பிக் கொடுத்தாக வேண்டும் என்று விதிப்பார்கள் (senior note).

##Caption##கடனுக்கு உங்கள் அறிவுசார் சொத்து அடமானமாக இருந்தால், இடர் நேரும் போது உங்கள் நிறுவனத்தின் மொத்த மதிப்பும் அவர்களிடம் போய்ச் சேரக்கூடும். அதைவிட அபாயகரமான விஷயம் ஒன்று உள்ளது: கடனளிக்கும் போது அவர்கள் கடனை எந்தெந்தக் காரணங்களுக்காகத் திரும்பித் தரக் கட்டாயப் படுத்த முடியும் என்ற நிபந்தனைகளும் ஒப்பந்தத்தில் இருக்கலாம். வங்கியிலிருக்கும் மொத்த ரொக்கம் அல்லது வாடிக்கையாளரிடமிருந்து பெறக்கூடிய தொகை ஓரளவை விடக் குறையுமானால், கடனைத் திருப்பித் தந்தாக வேண்டும் என்று வற்புறுத்தலாம். இந்த வற்புறுத்தல் நிஜமாகவே நிகழ்ந்து நிறுவனத்தையே மூடவேண்டிய நிலைக்கு வந்ததையும் நான் கேள்விப்பட்டுள்ளேன்!

என்ன, மிகவும் பயமுறுத்தி விட்டேனா? நல்ல வணிக வாய்ப்புள்ள நிறுவனங்களுக்கு, இத்தகைய கடன் வசதி வரப் பிரசாதமாகவே உள்ளது. ஆனால் அதன் இரு பக்கங்களையும் நன்கு புரிந்து கொண்டு செயல்படுங்கள்.

ஒரு மாறுதலுக்கு மிகவும் நல்ல கடன் வாய்ப்பு ஒன்றைப் பற்றியும் கூறி விடுகிறேன். சமீபத்தில், சுத்தசக்தித் துறையில் புது நுட்பங்களை வெகு அதிக செலவில் உருவாக்கும் நிறுவனங்களுக்கு கடனளிக்க அமெரிக்க அரசாங்கமே முன்வந்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் மிகப் பிரபலமாக அனுகூலம் பெற்ற டெஸ்லா நிறுவனத்தை உதாரணமாகக் கூறலாம் - ஒன்று இரண்டு அல்ல, 465 மில்லியன் டாலர்கள்! இத்தகைய அனுகூலமான கடன் எல்லா நிறுவனங்களுக்கும் கிடைத்துவிடாது. சில மிக முக்கியமான, நல்ல நுட்பமுள்ள, அதைவிட முக்கியமாக, அதிர்ஷ்டக்கார நிறுவனங்களுக்குத்தான்.

தடுமாற்றத்திலிருந்த பொருளாதார நிலை சற்றுச் சீராகி சமநிலைக்கு வந்து கொண்டிருக்கும் சில நற்சகுனங்கள் சமீப காலமாக வந்து கொண்டிருக்கின்றன. அதனால், பிழைக்கும் பட்டியலை முடித்த பிறகு, இந்த மறுமலர்ச்சிக் காலத்தில் தழைப்பது எப்படி, எந்த மாதிரியான வாய்ப்புக்கள் வர ஆரம்பித்துள்ளன என்று விவரிக்க ஆரம்பிக்கலாம். அது இன்னும் மகிழ்ச்சி தரக்கூடியது அல்லவா!

(தொடரும்)

கதிரவன் எழில்மன்னன்

© TamilOnline.com