கவிஞர் பாலா
வானம்பாடிக் கவிஞர்களுள் ஒருவரும், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத் துறையில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவருமான கவிஞர் பாலா என்கிற முனைவர் பாலசந்திரன் (63) செப்டம்பர் 22, 2009 அன்று சென்னையில் காலமானார்.

இலக்கியத்தில் முதுகலைப் பட்டமும், இலக்கிய ஒப்பாய்வில் முனைவர் பட்டமும் பெற்றவரான பாலசந்திரன் 70களில் பிரபலமாக இருந்த வானம்பாடிக் குழுவில் இணைந்து பல நல்ல கவிதை நூல்களைப் படைத்தார். அவருடைய 'புதுக்கவிதை ஒரு புதுப்பார்வை' என்ற நூல் மிக முக்கியமானது. இவரது கவிதை மற்றும் கட்டுரை நூல்கள் இளைஞர்கள் பலரைப் புதுக்கவிதையின்பால் ஈர்த்தது. சாகித்திய அகாதெமியின் நிர்வாகக் குழு உறுப்பினராகவும், தமிழ் சாகித்திய அகாதெமியின் ஆலோசனைக் குழு அமைப்பாளராகவும் பணியாற்றினார்.

ஆங்கிலம், தமிழ் இரண்டிலும் வல்லவரான பாலா, கவிதை, இலக்கிய விமர்சனம், கட்டுரை என தமிழிலும், ஆங்கிலத்திலுமாக சுமார் 20-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். 'கவிதை பக்கம்', 'சர்ரியலிஸம்', 'பாரதியும் கீட்சும்', 'வித்யாபதியின் காதல் கவிதைகள்', 'இன்னொரு மனிதர்கள்', 'நினைவில் தப்பிய முகம்' போன்ற இவரது படைப்புகள் குறிப்பிடத் தகுந்தவை. கவிஞர்கள் மீரா, மு.மேத்தா, ராஜம் கிருஷ்ணன் ஆகியோரின் ஆக்கங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். அவருக்குத் தென்றல் அஞ்சலி செலுத்துகிறது.

அரவிந்த்

© TamilOnline.com