பத்மா வெங்கட்ராமனின் முதல் நாவலான 'Climbing the Stairs', 1941 ஆகஸ்ட் மாதத்தில் ஆரம்பிக்கிறது. அன்றைய இந்தியாவுக்கு நம்மை அழைத்துச் செல்கிறது. ஆனால் இன்றைய நூற்றாண்டில் வாழும் அமெரிக்க இந்தியத் தலைமுறைக்கு பொருத்தமாக விளங்குகிறது. அமெரிக்காவில் வாழும் பதின்மவயதுச் (teenage) சிறுமியர் இந்தப் புத்தகத்தை ஒரு முறையாவது அவசியம் படிக்க வேண்டும். பாரம்பரிய இந்தியப் பண்பாட்டையும், சமூகத் தடைகளை அகற்றினால் ஏற்படும் முன்னேற்றங்களையும் நூலாசிரியர் நமக்கு படிகள் மீதேறிய ஓர் உயரப்பார்வையில் தருகிறார். டீன் ஏஜர் வித்யாவின் இளமை வாழ்க்கையில் மேற்படிப்புப் படிக்கும் ஆர்வத்தையும், அதற்கு ஏற்படும் கலாசாரத் தடைகளையும், அந்த வயதின் உணர்வுக் கொந்தளிப்பில் அறிவு தடுமாறும் விதத்தையும் அழகாக வர்ணித்திருக்கிறார் பத்மா. விடுதலைப் போராட்டத்தில் தந்தையார் தடியடி வாங்கிவிட, வித்யாவின் கல்லூரிக் கனவு புதைக்கப்படுகிறது. சிறகடித்துப் பறந்த அவளது வாழ்க்கை சென்னைக் கூட்டுக் குடும்பத்தின் கட்டுப்பாட்டில் சிறைப்படுகிறது. அறிவு வேட்கையில் இந்தச் சின்னப்பறவை நூலக அறைக்குள் நுழைகிறது.
பருவத்திற்கேற்ற படபடப்பும், பாரம்பரிய நாணமும் கலந்த வித்யாவின் வாழ்வில் ராமன் நுழைய, மெல்லக் காதல் எட்டிப் பார்க்கிறது. உணர்வுகள் உறவுகளாக மாறத் துடிக்கையில், வித்யாவின் கல்லூரி கனவு நனவாகிறதா என்பது படியேறி வந்து 'Climbing the Stairs' படித்தாலே தெரியும். இந்தக் கதையில் பத்மாவின் பேனா சக்தி வாய்ந்ததாக இருக்கிறது. பதின்ம வயதினருக்குத் தன்னம்பிக்கை வளர்க்கச் சொல்லித் தருகிறது. இந்தியப் பெண்களின் வாழ்வில் கடந்த அறுபது வருடங்களில் எத்தனை முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பதைச் சித்திரிக்கிறது. அன்றைய இந்தியாவின் பிரச்சனைகளையும் ஒருவித நேர்மறையான கண்ணோட்டத்துடன் விவரித்திருப்பது குறிப்பிடத்தக்கது. தடைகள் இருப்பினும் அதை அகற்றும் சக்தி நம் கையில் என்பதை நாவல் கூறுகிறது. இராக் போர் நிகழும் இந்தக் காலகட்டத்தில், இரண்டாம் உலகப்போர் நடந்தபோது அதில் கலந்து கொண்ட குடும்பங்களில் ஏற்பட்ட குழப்பங்களைப் படிக்கும்போது நமது அடுத்த வீட்டில் நடக்கும் சலசலப்புப் போன்ற உணர்வு ஏற்படுகிறது. அவ்வப்போது பத்திரிகையில் இராக் போர் பற்றிப் படிக்கிறோம். வரலாற்றுப் புத்தகத்தில் இந்தியாவின் சுதந்திரம் பற்றிப் படித்திருக்கிறோம். ஆனால் இந்தச் செய்திகள் யாரையோ பற்றிச் சொல்வது போலிருக்குமேயன்றி நம்மைப் போலவே இயங்க ஆசைப்படும் ஒரு எளிய குடும்பத்தைப் பற்றியது என்று புரிவதில்லை.
##Caption## இந்த அழகான நாவல் பல உண்மைகளைத் தெளிவாக்குகிறது. 'கிட்டா' என்ற இளைஞன் மூலம் பாரதியின் வாக்கான 'வல்லமை தாராயோ இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே' என்று கொதிக்கும் இளைய இரத்தம் பற்றி எழுதி இருக்கிறார் ஆசிரியர். இந்தியச் சுதந்திரம் பற்றியும், காந்தியின் அகிம்சைப் போர் பற்றியும், தலைமுறை இடைவெளி பற்றியும் வரலாறு கலந்த கற்பனைக் காவியம் தீட்டியிருக்கிறார். எளிய ஆங்கில நடையில் எழுதி அடுத்த தலைமுறைக்குப் புரியும்படிச் செய்துள்ளார். மேற்கத்தியர்களுக்கும் இந்தியாவின் கதையைப் புரியும்படிச் செய்கிறார். புலம்பெயர்ந்தவர்கள் எப்போதும் குறையாகப் பேசும் சில இந்தியப் பழக்கங்களை, அவற்றில் இருக்கும் நல்லதை, தெளிவுபடுத்தி இந்தியாவின் பெருமையை அழகாகக் காட்டியிருக்கிறார்.
நாம் ஏறிவந்த படிகளையும், நம் முந்தைய தலைமுறை ஏறுவதற்கு ஏணியே இல்லாமல் இருந்த நிலையையும், அமெரிக்க கலாசாரத்தில் வளரும் நாளைய சமுதாயம் ஏறப்போகும் படிகளையும் இந்த நாவல் நினைக்கச் செய்யும். உலகிலேயே தலைசிறந்த நாடாகிய போதிலும், பட்டப்படிப்பு படிக்க முடியாமல், உயர்நிலைப் பள்ளிவரை முனகியபடி படித்து நின்றுவிடும் பரிதாபம் அமெரிக்காவில் அதிகம். இதற்குப் பொருளாதாரம், குடும்பச் சூழ்நிலை, சமூக அமைப்பு, போதைப்பொருள், வன்முறை என்று பல காரணங்கள். இந்த 'highschool drop out' சதவிகிதத்தைக் குறைக்க அமெரிக்க அரசு பாடுபடும்போது, அன்று பாரதியும், பாரதிதாசனும் பெண் கல்வி பற்றிப் பாடியது நமக்கு நினைவில் வருகிறது. ஆனால் அதை ஆங்கிலம் மட்டுமே அறிந்த நம் பிள்ளைகளுக்கும், அவர் தம் நண்பர்களுக்கும், மற்ற மாணவர்களுக்கும் எப்படிச் சொல்லித் தருவது என்று குழம்புகிறோம். விரசம், வன்முறை, மொழி பேதம் என்று எந்தக் குறைபாடும் இல்லாமல் ஆனால் அதே நேரத்தில் விறுவிறுப்புக் குறையாமல் நமது இளையோரை ஓர் இடத்தில் அமர்ந்து படிக்க வைக்கும் ஆங்கிலப் புத்தகம் இது. வெளிவந்து குறுகிய காலத்திலேயே பல பரிசுகளைக் குவித்த இந்த நாவல் இளைய தலைமுறை நாவல்களில் மிகச் சிறந்ததாக கணிக்கப்பட்டுள்ளது. பாஸ்டன், நியூயார்க் என்று பல இடங்களில் சிறந்த நாவலாகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள இந்த நாவலின் பரிசுப் பட்டியலை www.climbingthestairsbook.com என்ற வலைதளத்தில் காணலாம். பத்மா வெங்கட்ராமன் சென்னையில் பிறந்து, வளர்ந்து, அமெரிக்காவில் உயர்கல்வி படித்து இன்று தனது முதல் நாவல் மூலம் சரித்திரம் படைத்துள்ளார். இவரைப் பற்றிய மேலும் அறிய: www.cliofindia.com/padma
மரு. வரலட்சுமி நிரஞ்சன் |