மயூரபுரி மாதவன்
ஒரு காலத்தில் வியாச முனிவர் ஸ்ரீமன் நாராயணனைக் குறித்துத் தவம் மேற்கொள்ள விழைந்தார். அதற்கேற்ற இடத்தைத் தேடினார். கலியுகத்தில் கலிதோஷம் இல்லாத ஓரிடத்தைக் கூறும்படி நாராயணனையே கேட்டார். பிருகுமுனிவர் ஆசிரமம் அமைத்துத் தங்கியிருந்த மயூரபுரியே சிறந்த இடம் என்றாராம் நாராயணன். இந்த மயூரபுரிதான் பின்னர் மாதவபுரம் எனறும் இன்று மயிலாப்பூர் என்றும் வழங்கப்படுகிறது. பிருகுமுனிவரது ஆசிரமம் இருந்த இடததில் அதாவது மயிலாப்பூரில்தான் இன்று மாதவப் பெருமாள் கோயில் உள்ளது.

பிரம்மாண்ட புராணத்தில் வரும் 'மயூரபுரி மஹாத்மியம்' மயூரபுரி தோன்றிய வரலாற்றை விரிவாகக் கூறுகிறது. காஞ்சிப் பெரியவர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் 1956ம் ஆண்டில் மாதவப் பெருமாள் கோயில் அருகேயுள்ள சமஸ்கிருதக் கல்லூரியில் இரண்டு மாதங்கள் தங்கியிருந்தார். அவ்வமயம் ஓலைச்சுவடியில் இருந்த மயூரபுரி மஹாத்மியத்தை அச்சிலேற்றிப் பதிப்பித்துப் புத்தக வடிவில் வெளிக்கொணர்ந்தார். மாசிமாதம் மக நட்சத்திர நன்னாளில் பௌர்ணமியில் நாட்டிலுள்ள எல்லாப் புண்ணிய தீர்த்தங்களும இந்தத் திருக்குளத்தில் வந்தடையும். அன்றைய தினம் பிள்ளைவரம் வேண்டி இப்புண்ணிய தீர்த்தத்தில் நீராடி மாதவனை வழிபட்டால் அவர்களுக்குப் புத்திர பாக்கியம் உண்டாகும் என்பது ஐதீகம்.

புன்னை மரத்தின் மேலமர்ந்து புல்லாங்குழல் ஊதிய கிருஷ்ணனும் மாதவனும் ஒருவரே அல்லவா! அதனால் இக்கோயிலின் தலவிருட்சம் புன்னை மரமே. ஆழ்வார்கள் காலத்திற்கும் முற்பட்ட பழமையுடைய கோயில் இது. 13ஆம் நூற்றாண்டுக்கும் முந்தையது. முதலாழ்வார் மூவரில் பேயாழ்வார் அவதாரம் செய்த புண்ணியத்தலம் மாதவபுரம். இவர் இக்கோயிலுக்கு எதிரேயுள்ள 'மணிகைரணவம' எனும் புஷ்கரிணியில் செவ்வல்லிப்பூவில் அவதரித்தார். மாதவப் பெருமாள் கோயிலில் பேயாழ்வாருக்கென்றே தனிச்சன்னிதி அமைந்துள்ளது. தவிரவும், இக்கோயிலில் அமிர்தவல்லித் தாயார் சந்நிதியின் எதிரே உள்ள மண்டபத் தூண் ஒவ்வொன்றிலும் கிளி, யானை, குதிரை, ஹம்சம், சூரியபிரபை போன்ற வெவ்வேறு வாகனங்களின் மீது பேயாழ்வார் ஆரோகணித்திருப்பதாகச் செதுக்கப்பட்டுள்ள புடைச்சிற்பங்கள் காண்பவர் கண்களையும் கருத்தையும் கவரக் கூடியன. விழா நாட்களில் இவருக்குத் திருவீதி உலாவும் உண்டு.

##Caption##பேயாழ்வாரின் சமகாலத்து மற்றொரு ஆழ்வார் திருமழிசைஆழ்வார். இவர் வைணவத்தில் நம்பிக்கையிழந்து சைவம், சமணம் என்று ஒவ்வொரு மதமாகப் போய் எதிலும் தெளிவு பெறாது குழம்பிக்கொண்டிருந்தார். அவருக்குத் தெளிவை உண்டாக்கத தீர்மானித்தார். பேயாழ்வார். ஒரு செடியைத் தலைகீழாக நிறுத்தி ஓட்டை வாளியில் நீர் மொண்டு ஊற்றினார். ஒன்றும் புரியாத திருமழிசை ஆழ்வார் அவரிடம் காரணம் கேட்டபோது, “உமது தேடலும் இப்படித்தான் பைத்தியக்காரச் செயலாக உள்ளது” எனக் கூறி, அவரை மீண்டும் வைணவத்துக்குக் கொணர்ந்தார். அறிவு தெளிந்த திருமழிசை ஆழ்வார், பேயாழ்வாரின் சீடரானார். இவ்விருவரின் நெருக்கத்தைப் புலப்படுத்துவது போல ஐப்பசி மாதத்தில் பத்துநாள் நடைபெறும் பேயாழ்வார் அவதார உற்சவத்தின் நான்காவது நாளன்று திருமழிசை ஆழ்வாருக்குப பேயாழ்வார் ஞானோபதேசம் செய்விப்பதாக விழா நடைபெறுகிறது..

மாதவப்பெருமாள் கோயிலில் ஆண்டு முழுவதும் விழாக்கள் நடைபெறுவது குறிப்பிடவேண்டிய சிறப்பம்சமாகும். கோயிலிலுள்ள அத்தனை மூர்த்திகளுக்கும் தனித்தனியே திருமஞ்சனமும் திருவிழாக்களும் திருவீதி உலாவும் நடைபெறுகின்றன. இவை தவிர ஒவ்வொரு மாதப்பிறப்பு, அமாவாசை, பௌர்ணமி, ஏகாதசி என்று ஏறத்தாழ ஆண்டின் எல்லா நாட்களுமே விழா நாட்களே!

பங்குனி மாதப் பத்துநாள் பிரம்மோற்சவத்தில் நான்காம் நாள் விழாவுக்கு வரலாற்றுப் பின்னணி உள்ளது. ஹோய்சலர் பரம்பரையில் வந்த விட்டலராயன் என்ற மன்னருடைய மகளுக்குப் பிடித்திருந்த பேயை இராமானுஜர் விரட்டி விட, அதனால் மனம் மகிழந்த மன்னர் அவரது சீடரானார். விஷ்ணுவர்த்தனர் என்ற நாமமும் பெற்றார். புற்று ஒன்றில் இராமானுஜர் கண்டெடுத்த நாராயணனுக்கு விஷ்ணுவர்த்தனர் கோயில் ஒன்றும் கட்டினார். பின்பொரு சமயம் இதன் உற்சவமூர்த்தியின் அழகில் மனம் பறிகொடுத்த டில்லி சுல்தானின் மகள் தனக்கு அம்மூர்த்தி வேண்டுமென்றதால் சுல்தான் அதை டில்லிக்குக் கொண்டுபோய் விடுகிறான். இதையறிந்த இராமானுஜர் டில்லி சென்று சுல்தானைச் சந்தித்து உற்சவரைத் திரும்பத் தருமாறு வேண்டுகிறார். அவர்மீது மதிப்புக் கொண்டிருந்த சுல்தான் வேண்டுகோளுக்கு இணங்கினான், ஒரு நிபந்தனையுடன். இராமானுஜர் அழைத்து உற்சவ மூர்த்தி வந்தால் அழைத்துச செல்லலாம் எனபது நிபந்தனை. இராமானுஜரும் 'என் செல்லப்பிள்ளாய் வருக' என்றழைத்தவுடன் விக்கிரகத்திலிருந்து வெளிவந்து இராமானுஜர் மடிமீது அமர்ந்து கொண்டாராம் உற்சவர். இதைக் கொஞ்சமும் எதிர்பார்க்காத சுல்தான் சிலையை அவரிடம் திரும்பக் கொடுத்து விடுகிறான். சம்பத்குமரன் என்றழைக்கப்படும் இந்தச் செல்லப்பிள்ளைக்கு மாதவப்பெருமாள் கோயிலில் தனிச் சன்னிதி உண்டு.

பங்குனி மாத பிரம்மோற்சவத்தில் உற்சவர் 4வது நாள் வைரமுடி அணிந்து கருட வாகனத்தில் வரும் காட்சியும் 5வது நாள் விழாவில் இராமானுஜர் மடியில் சம்பத்குமரன் அமரந்து வரும காட்சியும் கண்கொள்ளாக் காட்சியாகும். தேவாசுர யுத்தத்தில் அமிர்தம் கடையும்போது தோன்றிய மஹாலக்ஷ்மி பிருகு முனிவரின் மகளாக அமிர்தவல்லி என்ற பெயருடன் வளரந்து அவரது ஆசிரமத்திலேயே ஸ்ரீமன் நாராயணனை மணந்து கொண்டார். ஊரும் மாதவபுரம் என்ற பெயர் பெற்றது. பாற்கடலில் தோன்றிய காரணத்தால் அமிர்தவல்லித் தாயாருக்கு இக்கோயிலில் குங்குமப்பூ, கல்கண்டு போட்ட பால் நைவேத்யம் செய்யப்படுகிறது.

##Caption## 'மா மாயன் மாதவன் வைகுந்தன்' என்றும் 'வங்கக் கடல் கடைந்த மாதவன்' என்றும் திருப்பாவையில் மாதவனைப் போற்றும் ஆண்டாளுக்கு இங்கு தனிச் சன்னிதி உள்ளது. திருவாடிப் பூர உற்சவத்தில் ஆண்டாள் மடியில் மாதவன் சயனித்திருக்கும் காட்சி வேறெங்கிலும் காணக்கிடைக்காத ஒன்று. ராமர் சன்னிதியில் மூலவராக உள்ள ஸ்ரீராமர், சீதை, லக்ஷ்மணர், அனுமன் சமேதராகக் காட்சியளிக்கிறார். மாதந்தோறும் புனர்வசு நாளில் இவருக்குத் திருமஞ்சனம் திருவீதி உலா உண்டு. பங்குனியில் நடைபெறும் அவதார கர்ப்ப உற்சவத்தில் ஒவ்வொரு நாளும் ராமாயணத்தை கதாபாத்திர அலங்காரம் செய்யப்படுகிறது.

மாதவன் என்ற பெயரில் மூன்று சன்னிதிகள் உள்ளன. கல்யாண மாதவன் என்ற பெயருக்கேற்ப கல்யாணக் கோலத்தில் அமர்ந்து அருள் பாலிக்கும் இப்பெருமாளை வழிபட்டால் திருமணம் கூடிவரும் என்பது ஐதீகம். அரவிந்த மாதவன் ஸ்ரீதேவி பூதேவியுடன் நின்ற கோலத்தில் அருள் பாலிக்கின்றான். பெரிய மாதவன் என்றும் அழைக்கப்படும் இப்பெருமாளுக்கு ஏகப்பட்ட விழாக்கள். வசந்த உற்சவம், வைகுண்ட ஏகாதசி, மாசி மகத்தில் தெப்போற்சவம், சித்திரையில் பிரம்மோற்சவம் என அடுத்தடுத்து வந்து கொண்டேயிருக்கும் விழாக்கள். மூன்றாவதாக நிரஞ்சன மாதவன். இப்பெருமாள் சின்னமாதவன் என்றும் பெயருடையவன். ஸ்ரீதேவி பூதேவியுடன் நின்ற கோலத்தில் காட்சி அளிக்கும் இந்தப் பெருமாள்தான் ஆண்டாள் திருக்கலியாண உற்சவத்தில் ஆண்டாள் மடியில் சயனக்கோலத்தில் காட்சி தருபவன்.

மாதவப்பெருமாள் கோயில் மகிமையின் சிகரமாக விளஙகுவது வராகப்பெருமாள் சன்னிதி. ஸ்ரீதேவியுடன் அமர்ந்திருக்கும இவருக்கு 'ஞானபிரான்' என்ற திருநாமமும் உண்டு. சித்திரையில் வராக ஜயந்தி கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு மாத உத்திரட்டாதியிலும் ஊஞ்சல் உற்சவம் உண்டு. பிப்ரவரி மாதத்தில் வராக ஹோமம் நடைபெறும். ஆண்டின் இறுதியில் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் வந்து வணங்கி பிரார்த்தனை செய்து கருட ரட்சையைப் பெற்றுக் கொள்கிறார்கள். வராக மூர்த்தி ஞானபிரான் ஆயிற்றே! மாணவப் பருவத்தினரைத் தன்னைத் தேடி வரச்செய்யும் ஆற்றல் பெற்ற ஒரே தலம் மாதவப்பெருமாள் திருக்கோயில்!

டாக்டர் அலர்மேலு ரிஷி

© TamilOnline.com