கோபத்தைத் தடுக்க....

ஒலி வடிவத்தில் கேட்க
- Audio Readings by Saraswathi Thiyagarajan



அன்புள்ள சிநேகிதியே,

கோபம் வராமல் தடுப்பது எப்படி?

இப்படிக்கு
..................

நான் ஏதோ சின்னச்சின்ன குடும்பப் பிரச்சனைகளைப் பற்றிக் கருத்துக்களைத் தெரிவிக்கிறேன். என்னைப் போய் இப்படி ஒரு உலகப் பிரச்சனையைத் தீர்க்கச் சொல்கிறீர்களே! இது நியாயமா?

கோபம் என்பது ஒரு பெரிய சப்ஜெக்ட். Anger has different ramifications and manifestations. கேள்வி முதலில் உங்களுக்குக் கோபம் வருவதைத் தடுப்பது பற்றியா, இல்லை பிறருக்கு வராமல் எப்படித் தடுப்பது என்பதைப் பற்றியா என்பது புரியவில்லை. மேலும் கோபம் வராமல் தடுப்பது வேறு, கோபத்தினால் ஏற்படும் உணர்ச்சிகளை, வேகமாகச் சொல்லில், செயலில் காட்டாமல் தடுப்பது வேறு.

கோபம் வராமல் தடுப்பது எப்படி என்பதைப் பிராக்டிகலாக யோசிக்கிறேன். நாம் எல்லோருமே தன்மானம், இயலாமை இருக்கக்கூடிய சந்தர்ப்பங்களை வாழ்க்கையில் சந்தித்திருப்போம். எங்கெல்லாம் தன்மானம் உரைக்கிறதோ அங்கெல்லாம் கோபம் கொழுந்து விட்டு எரியும்; இயலாமை இடிக்கிறதோ கோபம் தளதளவென்று கொதிக்கும். Anger is also an Ego booster. தன் இனம், பதவி, சமூக அந்தஸ்து எல்லாவற்றையும் நிரூபிக்கக் கூடிய சக்தி கோபத்திற்கு இருக்கிறது என்று நினைப்பவர்கள் பலர் உள்ளனர்.

உங்கள் கேள்வியின்படி, ‘நமக்கு வரும் கோபத்தை நாம் அடக்கிக்கொள்வது எப்படி' என்பதைக் குறித்து என்னுடைய கருத்துக்களைக் கேட்கிறீர்கள் என்று நினைக்கிறேன். அடுத்த இதழ் வருவதற்குள், உங்களுக்கு எந்த நேரத்தில், எந்தக் காரணத்தால் கோபம் வருகிறது, எத்தனை நேரம் அந்தக் கோபம் இருக்கிறது, அந்தக் கோபத்தைக் கிளறியவரிடம் எப்படி உங்களை அடையாளம் காட்டுகிறீர்கள், அதனால் ஏற்படும் பின்விளைவுகள் என்ன, அந்தப் பின்விளைவுகளை எப்படிச் சமாளித்தீர்கள் என்பது பற்றி ஒரு மாதத்துக்கு எழுதிக்கொண்டே வாருங்கள்.

கோபம் வராமல் இருக்க முடியாது. ஆனால் வரும் கோபத்தின் உக்கிரத்தைக் கட்டுப்படுத்தும் போது, விளைவுகளையும் தடுக்கலாம். நமக்கு அநியாயம் என்று எதெல்லாம் படுகிறதோ, அங்கே நாம் கோபத்தைக் காட்டுகிறோம். அனுபவம், ஆய்வு, சுயசிந்தனை கோபத்தைக் குறைக்கும். கோபம் நிறைய வருபவர்களுக்கு தியானம் கொஞ்சம் அமைதியைத் தருகிறது.

என்னுடைய அனுபவத்தில் அவசர முடிவுகளுக்கு வருதல் (jumping to conclusions) மனிதர்களிடம் நிறைய கோபத்தை உண்டாக்கி இருக்கிறது. அப்போது கொஞ்சம் சுயசிந்தனை கோபத்தைக் குறைக்கும்.

##Caption## ஏதோ ஒரு நண்பர் நம்மைப் பற்றி ஏதோ சொன்னார்கள் என்று கேள்விப்பட்டு அந்த நபரிடம் நாம் கோபம் காட்டிக் கொண்டிருப்போம். ஆனால், நமக்குத் தெரியாமல், எத்தனையோ பேர் நம்மைப்பற்றிப் பேசுவது தெரியாததால் அவர்களை வருந்தி வருந்தி விருந்துக்குக் கூப்பிட்டுக் கொண்டிருப்போம். நாமும் பிறரைப் பற்றிப் பேசுவோம். ஆனால் நம்மை நல்லவர்களாக நினைத்துக் கொண்டு, நம்மிடம் கோபப்பட்டவர்களுக்கு ‘மனமுதிர்ச்சி குறைவு' என்று நினைத்துக் கொண்டிருப்போம். இதற்கெல்லாம் முடிவே இல்லை.

எனக்கு இந்தக் கோபம் பற்றி நிறைய சுவாரஸ்யமான சம்பவங்கள் ஞாபகத்திற்கு வருகின்றன. ஒன்றிரண்டை அடுத்த இதழில் எழுதுகிறேன்.

கோபம் கொந்தளிக்கும் போது உங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ள:

1) உடனே அங்கே இருந்து நகருங்கள். ஒரு டம்ளர் குளிர்ந்த நீரைக் குடியுங்கள்.

2) போக்குவரத்து நெரிசலில் மாட்டிக் கொண்டிருந்தால், உங்களுக்குப் பிடித்த பாட்டைப் போட்டுவிடுங்கள்.

3) வீட்டில் கோபம் வந்தால், உங்களுக்குப் பிடித்த ஏதேனும் செயலைச் செய்யத் துவங்கி, உங்களுக்குக் கோபம் வரவேண்டிய நிலைக்கு, உங்களுடைய எந்தச் செயல் மற்றவரைப் பாதித்தது என்பதை நினைத்துப் பாருங்கள்.

4) யாரேனும் உங்களைப் பற்றி ஏதேனும் சொன்னார்களா? கோபம் வருகிறதா? அது உண்மையில்லையென்றால் ஏன் கவலைப்படுகிறீர்கள்? சிரித்து விடுங்கள். அது உண்மையாக இருந்தால் ஏன் கோபப்படுகிறீர்கள்? Just take it.

இன்னும் இதைப்பற்றி மேலே பார்க்கலாம்....

இப்படிக்கு
சித்ரா வைத்தீஸ்வரன்

© TamilOnline.com