கல்யாண தினத்தன்று கடத்தப்பட்ட மணமகள்!
ஆங்கிலத்தில்: சி.கே. கரியாலி, முன்னாள் ஐ.ஏ.எஸ்.,
தமிழ்வடிவம்: திருவைகாவூர் கோ.பிச்சை

நியூகேஸிலில் உள்ள என் தோழி லெஸ்லி பாப்வொர்த்தி ஆஸ்திரியா செல்ல இருந்தாள். லெஸ்லியின் சகோதரி லிண்டா, தன நாத்தனார் லிசாவின் திருமணத்தின் போது எடுத்த சில புகைப்படங்களைக் காட்டி, ஆஸ்திரியத் திருமண விழாவை விவரித்தாள். அது கேட்க மிகச் சுவாரஸ்யமானது.

திருமண நாள் அன்று காலை 11 மணிக்கு மணமகள் இல்லத்தில் கொண்டாட்டங்கள் தொடங்கும். பெண்கள் ரொட்டி, பணியாரம், அடை முதலிய உணவு வகைகளைக் கொண்டுவந்து மேஜைமேல் குவிப்பார்கள். மதுவகைகள் இல்லாமலா? மணமகள், மணமகனின் கிராமத்துக்குக் கிளம்பும் வரை விருந்து தொடங்காது. அந்தக் கிராமத்து வாலிபர்கள், மணமகன் போதிய தொகை பணம் கொடுத்தால் தான் அவர்களை வெளியே போக விடுவோம் என்று மணமகள் வீட்டு வாயிலை மறித்தார்கள். தொகை கொடுத்த பிறகு பாரம்பர்ய வழக்கத்தின் படி லிஸா முதல் காரிலும் கெர்ஹார்ட் கடைசிகாரிலும் பயணம் செய்ய வேண்டியதாயிற்று. மணமகனின் கிராமம் அதிக தூரத்தில் இல்லை. ஆனால் வழியில் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும், மணமகன் காரிலிருந்து இறங்கி, அங்கு வழிமறித்துக் கொண்டு நிற்கும் வாலிபர்களுக்கு லஞ்சம் கொடுத்த பிறகுதான் மேலே போக அனுமதி! அதனால் பயணம் ஒரு மணி நேரம் நீடித்தது.

கெர்ஹார்டின் கிராமத்தில் விருந்தினர் இல்லத்தில் திருமண விருந்து. ஊர்வலம் வந்த உடனே பாண்டு வாத்தியம் முழங்குகிறது. அங்கு கூடி இருக்கும் கிராமத்தார்கள் வயிறுபுடைக்கச் சாப்பிட்டு மது அருந்துகிறார்கள். மணமகள் வீட்டின் முன்னால் ஊர்வலம் ஒழுங்குபடுத்தப்படுகிறது. லிசாவுக்குப் பின்னால் மணமகள் வீட்டுப் பெண்கள் வர, அவளது பாட்டி முன்னால் வழிகாட்டிச் செல்ல, ஊர்வலம் மாதா கோவிலுக்கு நடந்து செல்கிறது. ஆண்களை ஊர்வலமாக கெர்ஹார்ட் வழிகாட்டி அழைத்துச் சென்றார். எல்லோரும் முதலில் பலிபீடத்தைச் சுற்றிய பிறகு ஆண்களும் பெண்களும் தனித்தனியாக அமர்ந்தார்கள். திருமணச் சடங்குகள் முடிந்ததும் தம்பதிகளுக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்துக் கூறினார்கள். வெளியில் பட்டாசுகள் வெடித்தன. பிறகு கிராம சதுக்கத்தின் மத்தியில் குழுகுழுவாகப் படம் எடுப்பது தொடர்ந்தது.

##Caption## நிகழ்ச்சியில் அடுத்தது திருமண விருந்து. ஆனால் அங்கே மணமகனின் நண்பர்கள் வாயிலில் வழியை மறித்தார்கள். அவர்களுக்குக் கையூட்டு கொடுக்காமல் யாரும் உள்ளே நுழைய முடியாது. நீண்ட வாக்குவாதத்துக்குப் பிறகு மணமக்கள் குடும்பத்தார் அவர்கள் கேட்டதைக் கொடுத்தபின் பிரச்சனை முடிவுக்கு வந்தது. பிறகு விருந்து தொடங்கியது. பலவகை இறைச்சிகளும் காய்கறிகளும் வந்துகொண்டே இருந்தன. மணமக்களுக்கென்று பிரத்யேகமான, சுற்றிச் சுழன்று ஆடும் நடனம் முழுவேகத்தில் நடைபெற்றது. இதற்குப் பிறகாவது பாவம் இந்தத் தம்பதிகள் சேர்ந்திருக்க முடியுமா? வழியே இல்லை. முதலில் மணமகள் கடத்திச் செல்லப்படவேண்டும். ஆனால் அவள் பூச்செண்டைக் கையில் வைத்திருக்கும் வரை யாரும் அவளை கடத்திக் கொண்டு போக முடியாது. அதனால் பூச்செண்டை அவள் ஜன்னல் வழியாக வெளியே எறியவேண்டும். விருந்து நடக்கும் போதே இந்தச் சடங்கு செய்து முடிக்கப்பட்டு, லிசா பக்கத்தில் உள்ள கிராமத்துக்குக் கடத்திச் செல்லப்பட்டாள்.

கெர்ஹார்டும் லிசாவை கவனிக்கச் சுற்றுப்புற கிராமங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பலவான்களுமாக இறுதியில் அவள் இருக்குமிடத்தைக் கண்டுபிடித்தார்கள். பணயமாகக் கடத்தில்காரர்களுக்குச் சாப்பாடு, மது ஆகியவற்றுக்கான செலவு கொடுத்த பிறகுதான் லிசாவை விடுவித்து வர முடிந்தது. தம்பதியர் நள்ளிரவில் தங்கள் கிராமத்திற்கு வந்தபிறகு மீண்டும் மதுவும் உணவும் பெருகி ஓடின. பின் நடனம் தொடங்கியது. இதில் மணமகனைத் தவிர வந்திருந்தவர்கள் அனைவருடனும் லிசா நடனமாடினாள். காலை மூன்று மணிக்கு மற்றொரு விருந்து! ஹாலின் மத்தியில், ஒருபுறம் தாயாரும் மறுபுறம் பாட்டியும் உட்கார்ந்திருக்க, மத்தியில் மணமகள் அமர்த்தப்பட்டாள். அவளது தலை அலங்காரமும் பூச்செண்டும் அகற்றப்பட்டு அவள் தலையைச் சுற்றி ஒரு கம்பளித்துண்டு அணிவித்துக் கையில் ஒரு சிறு கரண்டி கொடுக்கப்பட்டது. பின் அவள் குடும்பத்தலைவியாகப் பிரகடனம் செய்யப்பட்டு முதன்முறையாக கெர்ஹார்டுடன் நடனமாட அனுமதிக்கப்பட்டாள். இறுதியாக இருவரும் கணவன் மனைவியாக அங்கீகரிக்கப்பட்டார்கள். வந்த உறவினர்கள் எல்லாம் கிளம்பிச் சென்ற பின்னர், காலை 7 மணிக்குப் பிறகுதான் அவர்களுக்கு தேன்நிலவு தொடங்கியது.

தொடரும்...

ஆங்கிலத்தில்: சி.கே. கரியாலி, முன்னாள் ஐ.ஏ.எஸ்.,
தமிழ்வடிவம்: திருவைகாவூர் கோ.பிச்சை

© TamilOnline.com