சுவாமி விவேகானந்தா ஊரக சமுதாயக் கல்லூரி
ஜீ.வி. சுப்பிரமணியன் மும்பை ரிசர்வ் வங்கியில் நல்ல பதவியில் இருந்தார். மனைவி, மூன்று மகன்கள்; அமைதியான, வளமான வாழ்வு. ஆனால் 'சமுதாயத்துக்கு ஏதாவது செய்' என்று உள்மனம் விரட்டிக் கொண்டிருந்தது. என்ன செய்வது? தெரியவில்லை, ஆனாலும் இந்தக் குரல் வலுப்பட்டுக்கொண்டே வந்தது. மனைவியிடமும் ஜீவியெஸ் இதைப் பற்றிக் கூறினார். ஒருமுறை ரயிலில் பயணம் செய்தபோது அவருக்கு எதிரே அமர்ந்திருந்தவர் டாக்டர் சேவியர் அல்ஃபோன்ஸ். சமுதாயக் கல்லூரிகளின் தேசிய அமைப்பான 'Indian Centre for Research and Development of Community Education (ICRDCE)' என்பதன் இயக்குனர். அவர் ஊரக சமுதாயக் கல்லூரிகள் குறித்து அருகிலிருந்தவர்களோடு பேசிக்கொண்டு வந்தார்.

ஊரக சமுதாயக் கல்லூரி என்றால் என்ன? உயர்நிலைப் பள்ளிக் கல்வியை (10லிருந்து 12ம் வகுப்புகளை) முடிக்காத கிராமப்புற மாணவர்களுக்கு ஏதாவதொரு திறன்சார் கல்வியைக் கொடுத்துச் சொந்தக் காலில் அவர்களை நிற்கச் செய்வதுதான் இந்தக் கல்லூரியின் நோக்கம். வழக்கமான கல்லூரிகள் போல அல்லாமல் குறைந்த செலவில் இவை கற்பிக்கும். டாக்டர் சேவியர் அல்ஃபோன்ஸ் அவர்களுடன் பேசியதில் இதைத் தெளிந்து கொண்டதும், தான் கிராமப்புற மாணவர்கள் ஒரு சிலருக்கேனும் இந்த வழியைப் பின்பற்றி வாழ வகை செய்ய முடியுமானால் நிறைவு வரும் என்று ஜீவியெஸ் தீர்மானித்தார்.

வங்கியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றுக்கொண்டார். மும்பையில் இருந்த சிறிய ஃப்ளாட்டை விற்றார். இன்னும் தனது மகன்கள் யாரும் கல்வியை முடித்துச் சம்பாதிக்கத் தொடங்கவில்லை என்ற நிலையில் இது ஒரு முக்கியமான முடிவு. அவருக்கோ உள்மனத்தின் அறைகூவலைச் சந்திப்பது அதைவிட முக்கியமானதாக இருந்தது. மும்பை, டெல்லி என்று பெரிய நகரங்களிலேயே வாழ்ந்து பழகிய ஜீவியெஸ்ஸுக்கும் அவரது மனைவி அனுவுக்கும் ஒரு குக்கிராமத்தில் சென்று வாழ்வது புதிய அனுபவம்.

##Caption##அந்தக் குக்கிராமம் தமிழக எல்லையில் பாண்டிச்சேரியை ஒட்டி அமைந்த கீழ்ப்புத்துப்பட்டு. அங்கே அவ்வாறு தொடங்கியதுதான் சுவாமி விவேகானந்தா ஊரக சமுதாயக் கல்லூரி (Swami Vivekananda Rural Community College). ஸ்ரீ ஞானானந்தகிரி சுவாமிகளின் பக்தரான ஜீவியெஸ் அவர் பெயரிலேயே அறக்கட்டளை ஒன்றைத் தொடங்கி, அதன்கீழ் இந்தக் கல்லூரியை நிர்வகித்து வருகிறார். மும்பை வீட்டை விற்று வந்த பணம் கீழ்ப்புத்துப்பட்டில் கல்லூரிக்கான நிலம் வாங்கவே போதுமானதாக இல்லை. நல்ல மனம் படைத்த நண்பர்களும் உறவினர்களும் செய்த, செய்கிற உதவியால் இன்று இக்கல்லூரியின் முதலாண்டு மாணவர்களில் சுமார் 60 பேர் பணிக்குச் சென்றுவிட்டனர். மற்றவர்கள் குடும்பத்தின் வற்புறுத்தல் போன்ற காரணங்களால் தம் ஊரிலேயே இருக்கின்றனர், வெளி வேலைக்குத் தகுதி பெற்றிருந்த போதும்.

வயல்களுக்கு நடுவே அமைந்துள்ள இந்த வினோதக் கல்லூரியைத் தேடி மாணவர்கள் எவ்வாறு வந்தனர்? சுற்றியிருந்த கிராமம் ஒவ்வொன்றுக்கும் ஜீவியெஸ் சென்று, அங்கிருந்த கிராம அதிகாரியைச் சந்தித்து, ஊர்ப் பொதுக் கூட்டம் நடத்துவார். உயர்நிலைக் கல்வி கூட முடிக்காத மாணவர்கள் எப்படித் தனது கல்வியகத்தில் படித்துத் திறனையும் வேலைபெறும் வாய்ப்பையும் பெருக்கிக் கொண்டு, வறுமையின் விஷச்சுழலில் இருந்து தப்பிக்கலாம் என்று விளக்குவார். கிராம மக்களைப் பொறுத்தவரை வீட்டில் இன்னொருவர் கூலி வேலை செய்தால் இன்னொரு வேளை கஞ்சி குடிக்கலாம், அவ்வளவுதான். அந்தக் கை குறைந்தால் வயிற்றுப்பாட்டுக்குத் திண்டாட்டம். பல கிராமங்கள், பல கூட்டங்கள், பல சந்தேகங்கள், பல நிராகரிப்புகள். அவ்வளவையும் மீறித்தான் முதலாண்டு 72 பேர் கிடைத்தனர்.

மருத்துவ உதவியாளர், ஏர்கண்டிஷனிங் & ரெஃப்ரிஜிரேஷன், DTP ஆபரேடர், நாகரிக ஆடை வடிவமைப்பு, நர்சரி ஆசிரியர், கணினி ஹார்ட்வேர், டேலி அக்கவுண்டிங், மரவேலை என்று பலதுறைப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன இந்தக் கல்லூரியில். 90 சதவிகிதத்துக்கும் மேல் வாங்கிய மாணவர்களை மட்டுமே வைத்துக்கொண்டு மற்றவர்களை "வேறு பள்ளிக்கூடம் பார்த்துக்கொள்" என்று விரட்டுவதன்மூலம் பள்ளிக்கு நூறு சதவிகித ரிசல்ட் பெறும் எண்ணற்ற கல்விக்கூடங்களுக்கு நடுவே, "பத்து, பிளஸ் டூ ஃபெயிலானவர்கள் மட்டுமே சேர்த்துக் கொள்ளப்படுவர்" என்று கூவிக்கூவி, தோற்றவர்களை அழைத்து மறுவாழ்வளிக்கும் கல்வியகம் இதுதான்!

ஆனால், இந்தக் கல்வியகத்தை நடத்தும் ஜீவியெஸ்ஸிடமும் துணைவியார் அனுவிடமும் ஒரு மாயப்பொடி உள்ளது - அளவற்ற அன்பு என்ற மாயப்பொடி. அதை அங்கு வந்து சேர்ந்த குழந்தைகள்மீது வாரி, வாரித் தூவுகிறார்கள். அதற்கு மயங்காத மனிதர் உண்டோ! இங்கு பயிலும் ஒவ்வொரு பையனும் பெண்ணும் இவர்களை "அம்மா, அப்பா" என்றுதான் வாய்குளிர அழைக்கிறார்கள். "நம் குழந்தைகளை நாம் எவ்வளவு கவனத்தோடு நடத்துகிறோம், அவர்களுக்கு எவ்வளவு செலவழிக்கிறோம்! இந்தக் குழந்தைகள் ஒவ்வொருவரின் கதையையும் கேட்டால் கண்களில் ரத்தம் வருகிறது" என்கிறார் அனு. அவர்களின்மீது தாயன்பைப் பொழிகிறார்.

உடைந்த குடும்பங்கள்; மாலையானால் கைக்காசை மதுவுக்குச் செலவழித்துவிட்டு வீட்டுக்கு வந்து மனைவி மக்களை அடித்து உதைக்கும் தகப்பன்கள்; வேறொருவரோடு தாய் ஓடிப் போய்விட, புதுத் துணையைத் தேடிக்கொண்டுவிட்ட தந்தையின் கொடுமையில் வாழும் பிள்ளைகள்; ஒருவேளை உணவுக்கும் வழியில்லாதவர்கள்; 'மக்கு, மக்கு' என்று அழைக்கப்பட்டதாலேயே மக்காகிப் போனவர்கள்; தீய சகவாசத்தால் ஊர் ரௌடியாகி உதவாக்கரை ஆனவர்கள் - மாணவ, மாணவியரில்தான் எத்தனை சோகம், எத்தனை அவலம்! அத்தனையையும் அன்பென்னும் மருந்திட்டு மாற்றுகிற தீவிரம் இவர்களிடம் இருக்கிறது. அதுமட்டுமல்ல, விவேகானந்தா ஊரக சமுதாயக் கல்லூரியில் ஆசிரியராகச் சேரும் மற்றவர்களையும் இந்த அன்பு தொற்றிக் கொள்கிறது என்பதுதான் நேரில் பார்த்து மகிழ வேண்டிய விந்தை.

2009 ஜனவரி மாதம் குடியரசு தினத்தன்று நடந்த விழாவில் பங்குகொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. பள்ளிப் படிப்பிலேயே தோற்றுப் போன இருபால் மாணவர்களின் திறமையும் உற்சாகமும் கண்களில் நீர் வரவைப்பதாக இருந்தது. நாடகம், பேச்சு, பாட்டு என்று இவை மட்டுமல்ல, ஒரு கிராமத்துப் பெண் ஆங்கிலத்தில் உரை நிகழ்த்தியது மூக்கில் விரல் வைக்கச் செய்வதாக இருந்தது - அவ்வளவு நல்ல உச்சரிப்பு, சொல்வளம், கருத்துச் செறிவு. அஸ்வினி என்ற அந்தப் பெண், எந்த உயர்நிலைப்பள்ளியில் பத்தாவது வகுப்பில் தோற்றுப் போனாரோ, அங்கேயே இப்போது பிளஸ் டூ படிக்கிறார், வகுப்பில் முதலாவதாக வருகிறார். இதை வாசிப்பவருக்கு இது எளிதாகத் தோன்றலாம். ஆனால், அந்தத் தனிநபரின் வாழ்க்கையில் இது ஒரு பெரும் திருப்புமுனை. இப்படிப் பல 'உதவாக்கரை'களின் வாழ்க்கையில் திருப்புமுனையாக இருக்கிறது இந்தக் கல்லூரி.

கையில் பட்டயத்தைக் (டிப்ளோமா) கொடுத்து அனுப்பிவிடுவதில்லை இந்தக் கல்லூரி. சென்னை மற்றும் பாண்டிச்சேரியில் உள்ள பல தொழிற்சாலைகளிலும், பணிமனைகளிலும், மருத்துவமனைகளிலும் மாணவர்கள் முதலில் செய்முறைப் பயிற்சிக்கு அனுப்பப் படுகிறார்கள். பின்னர், அங்கேயே பணி செய்யும் வாய்ப்பும் ஏற்படுகிறது. ஜீவியெஸ் இதற்காக அவர்களை அணுகி, தனது நோக்கத்தை விவரித்து, ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளார். "இங்கு படிக்கிறவர்கள் வேலைக்குப் போனால் மட்டும் போதாது. அவர்கள் நாளைக்குத் தொழில்முனைவோராக (Entrepreneur) வந்து, இங்கே பயிலும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும். அதற்கான ஊக்கத்தை நாங்கள் தருகிறோம்" என்கிறார் ஜீவியெஸ்.

##Caption## இங்கே வரும் மாணவர்கள் தொழிற்கல்வி கற்பதோடு, விட்டுப்போன பத்து அல்லது பிளஸ் டூ வகுப்பை முடிக்கவும் வழிகாட்டப்படுகிறார்கள். அத்தோடு யோகம், தன்னம்பிக்கை, திறன்வளர்த்தல், ஒழுக்கம், ஒற்றுமை என்று இத்தகைய பயிற்சிகளும் தரப்படுவதால் இங்கு வரும் மாணவர்கள் அடியோடு மாறிப் போகிறார்கள். காலையில் வந்தவுடன் ஆசிரியர் முருகானந்தம் யோகப்பயிற்சி வகுப்பு எடுக்கிறார். பிறகுதான் பிற வகுப்புகள். மதிய உணவின்போது சிறுசிறு குழுக்களாக அமர்ந்து உண்கிறார்கள். யாராவது ஒருவர் உணவு கொண்டு வராவிட்டாலும், மற்றவர்கள் ஆளுக்கு ஒரு பிடி கொடுத்தால் அவரது வயிறு நிரம்பி விடுகிறது. ஜீவியெஸ்ஸும் அவரது மனைவியும் எல்லோரும் சாப்பிடுகின்றனரா என்பதை உறுதி செய்த பின்னரே தாம் சாப்பிடச் செல்கின்றனர். ஜாதி, மத வேறுபாடின்றிச் சகோதரத்துவத்துடன் பழகுகிறார்கள். தேசப்பற்றும், தெய்வ நம்பிக்கையும் புகட்டப்படுகின்றன. சமுதாயப் பணி செய்யும் எண்ணம் மாணவர்களுக்கு ஏற்பட வேண்டுமென்பதற்காக அவர்கள் கிராமநலப் பணிகளில் ஈடுபடுத்தப் படுகிறார்கள்.

இங்கே ஆசிரியப் பணி செய்பவர்களுக்கும் தியாக உணர்வு இருப்பதால்தான் இதெல்லாம் முடிகிறது. சம்பளம் குறைவு. ஆனாலும் மிகமிகக் கீழ்மட்டத்தில் இருக்கும் இளையோரின் வாழ்வில் விளக்கேற்றி வைப்பதில் அவர்களுக்குப் பெரும் மனநிறைவு ஏற்படுவதாகச் சொல்கிறார்கள்.

தொடங்கிய ஓராண்டுக்குள்ளேயே, இந்தக் கல்லூரியின் சாதனைகள் இதனை ஒரு முன்மாதிரி ஆக்கிவிட்டன. வெளிநாட்டிலிருந்தும் உள்நாட்டில் பிற மாநிலங்களிலிருந்தும் சமுதாயக் கல்லூரியைப் பார்வையிட விரும்புவோரை டாக்டர் சேவியர் அல்ஃபோன்ஸ் இங்கேதான் அனுப்பி வைக்கிறார் என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும்.

சுவாமி விவேகானந்தா ஊரக சமுதாயக் கல்லூரியை ஒரு தொழிற்கல்விப் பாடத்திட்ட மையமாக (Vocational Program Center) தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் அங்கீகரித்துள்ளது. இங்கே தரப்படுகிற அனைத்துமே பட்டயப் (டிப்ளோமா) படிப்புகள்தாம். ஓராண்டு திறம்படச் செயல்பட்டதைப் பார்த்தபின் இந்திராகாந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக் கழகமும் இதை ஒரு மையமாக அங்கீகரித்ததில் வியப்பில்லை. ஆனாலும், இங்கே ஓலையால் வேய்ந்த வகுப்பறைகளே பெரும்பாலும் இருப்பதால், இதைத் தேர்வு மையமாக்குவது தாமதப்படுகிறது. கணினி வகுப்பறை மட்டுமே ஓரளவு நல்ல கற்சுவர் வைத்த கட்டிடம். நல்ல கட்டிடம், ஆசிரியர்களுக்கு ஓரளவு நல்ல சம்பளம், தூரத்திலிருந்து வந்து படிக்கும் மாணவ மாணவியருக்குத் தங்கும் விடுதி என்று பல எதிர்காலத் திட்டங்கள் பணப்பற்றாக்குறையால் தேங்கி நிற்கின்றன.

மாணவர்கள் ஓராண்டுக் கட்டணமாக 4000 ரூபாய் மட்டுமே செலுத்துகிறார்கள். அதையும் இரண்டு தவணையாகத் தரலாம். "கட்டணம் செலுத்தாவிட்டால் வகுப்புக்குள் நுழையாதே" என்று சொல்லாத கல்வியகம் இது. இந்தக் கட்டணத்தில் சுமார் 60 சதவிகிதம் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழகத்துக்குப் போய்விடுகிறது. கட்டணத்தை உயர்த்த வழி கிடையாது - மாணவ மாணவியரின் பொருளாதாரப் பின்புலம் அப்படிப்பட்டது. இவர்கள் குடும்பங்களின் சராசரி மாத வருமானம் 2500 ரூபாய் மட்டுமே. தமது வளமையைப் பகிர்ந்து கொள்ளும் நல்ல உள்ளங்களின் ஆதரவு இந்தக் கல்லூரிக்கு மிகவும் அவசியமாக இருக்கிறது.

"முதலாண்டு மாணவர்களிடம் கேள்விப்பட்டு இந்த ஆண்டு எங்களைத் தேடிப் பல இடங்களிலிருந்தும் வருகிறார்கள். ஹாஸ்டல் இல்லாததால் பலரை மறுக்க வேண்டியதாக இருக்கிறது" என்கிறார் ஜீவியெஸ். ஆமாம், வெளியே தங்கி ஓட்டலில் சாப்பிட்டுப் படிக்கும் அளவுக்கு வசதி இவர்களுக்குக் கிடையாது. "2011ஆம் ஆண்டு 500 மாணவர்கள் சுமார் 20 துறைகளில் இங்கே பயிற்சி பெறுவார்கள். அதற்கான கட்டிடம், பட்டறை, வகுப்பறை, மேசைநாற்காலிகள், ஆய்வுக்கூடம் மற்றும் பிற வசதிகள் செய்ய ஏறக்குறைய 3.10 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. அப்போது, இங்கே படிக்கும் மாணவர்களின் உழைப்பு எங்களுக்குச் சுயசார்பைக் கொடுப்பதோடு, இலவசமாக எதுவும் கிடைக்காது என்கிற பாடத்தையும் அவர்களுக்குத் தரும்" என்கிறார். இங்கே பயிலும் மாணவர்களின் உழைப்பில் தயாராகும் பலவகை உற்பத்திப் பொருள்களோடு, தமக்கு வேண்டிய காய்கறிகளைக் கூடத் தாமே பயிர்செய்ய வேண்டுமென்பது திட்டம்.

கோடி ரூபாய்த் திட்டங்கள் இருக்கட்டும், இப்போதைக்கு ஆசிரியர் சம்பளம் உட்பட்ட மாதாந்திரச் செலவுகளே நன்கொடையை எதிர்பார்த்துத்தான் உள்ளன. அமெரிக்காவில் உள்ளோர் தமது நன்கொடைகளை தமிழ் நாடு அறக்கட்டளை (TNF) வழியே வழங்கி வரிவிலக்குப் பெறமுடியும். உங்கள் காசோலைகளை "TNF USA, Inc." என்ற பெயருக்கு எழுதி, இணைப்புக் கடிதத்தில் "SVRCC-Keezhputhupattu" என்று தவறாமல் குறிப்பிடுங்கள். அனுப்ப வேண்டிய முகவரி:

Mr. M. Bhaskaran,
TNF Treasurer,
1709 - Kenyon Drive,
Naperville, IL - 60565.

இணையதளம்: vivekanandacommunitycollege.com

மேலும் தகவல் தேவைப்பட்டால்:

Dr Subbiah Dharmar, USA, Ph: 312-238-9837, eMail id: svrcc@etpro.com
G.V. Subrahmanian, SVRCC, India, Ph: 91 9487855192, eMail id: vivekanandacc@gmail.com

ஏழை கிராமப்புற மாணவர்களின் வாழ்வில் கல்வி விளக்கேற்றி வாழ்வில் ஒளிகாட்டுங்கள். தீபாவளி நேரத்தில் இந்தத் தீபம் பெரிதாக ஒளிரட்டும்.

*****


மாணவர் குரல்: சாமுண்டேஸ்வரி
நான் கொடூர்லேருந்து வரேன். எனக்கு அம்மா இல்ல. அப்பா வேற கல்யாணம் பண்ணிக்கிட்டுப் போய்ட்டாரு. அத்தை வீட்டில இருக்கேன். பிளஸ் டூ ஃபெயிலாய்ட்டேன். சென்னையில ரெண்டு வருஷம் கூலி வேல பாத்தேன். ஒடம்பு சரியில்லன்னு எங்க அத்தை வீட்டுக்கு வந்திருந்தேன். இங்க படிக்கிற என் பிரண்ட்ஸ் சொல்லித்தான் இங்கே வந்தேன்.

முந்தியெல்லாம் ஏண்டா பொறந்தோம், நமக்கு யாருமே இல்லேன்னு நெனப்பேன். இங்கே வந்ததுக்கப்புறம் சந்தோஷமா இருக்கு. சார்தான் (ஜீவியெஸ்) எனக்கு அப்பா மாதிரி.

*****


மாணவர் குரல்: கங்கா
எனக்கு திண்டுக்கல் பக்கத்தில சின்ன கிராமம். பிறந்த உடனே அம்மா செத்துட்டாங்க. மூணு வயசானப்ப அப்பா செத்துட்டாங்க. சித்தப்பாதான் என்னை சப்போர்ட் பண்றாங்க. ப்ளஸ் டூவில காமர்ஸ் போயிடுச்சு. அதை எழுதி பாஸ் பண்ணனும். பெரிசா படிச்சு, வேலைக்குப் போய் எல்லோருக்கும் உதவியா இருக்கணும்னு ஆசைப்படறேன். இங்கே பாண்டிச்சேரில ஒரு விடுதியில தங்கியிருக்கேன். இங்கேயே ஒரு ஹாஸ்டல் இருந்தா நல்லாயிருக்கும்.

*****


மாணவர் குரல்: கார்த்திக்
கும்பகோணத்திலேருந்து வரேன் நானு. பத்தாவது வகுப்பு ஃபெயில் ஆய்ட்டேன். ஏன்னா நான் படிச்ச ஸ்கூல்ல படிடான்னு கூட சொல்ல மாட்டாங்க. பசங்க பேசிக்கிட்டே இருப்போம். இங்க நல்லா சொல்லித் தராங்க. நல்ல எங்கள நடத்துறாங்க. சார் (ஜீவியெஸ்) ரொம்ப அன்பா இருக்காங்க. நல்லா படிச்சு மேல வரணும், சம்பாரிக்கணும்னு தோணுது. தெரிஞ்சவங்க சொல்லிக் கேட்டுதான் நான் இங்கே வந்தேன். அரியாங்குப்பத்தில ஃபிரண்டு வீட்டில தங்கியிருக்கேன். இங்கேயே ஹாஸ்டல் இருந்தா சவுரியமா இருக்கும். மத்தபடி இங்க எனக்கு சந்தோஷமா இருக்கு.

மதுரபாரதி

© TamilOnline.com