மே 3, 2009 அன்று சௌந்தர்ய நாட்யாலயாவின் நான்காம் ஆண்டு நிறைவு விழா அட்லாண்டா ஹிந்து ஆலய அரங்கத்தில் நடைபெற்றது. நாட்யாலயாவின் நிர்வாக இயக்குநரும், நடன அமைப்பாளருமான திருமதி காயத்ரி சுப்ரமண்யன் மிகுந்த கவனத்துடன் நிகழ்ச்சியை வடிவமைத்திருந்தார். 4 வயது தொடங்கி பல வயதுகளில் மாணவிகள் இரண்டு மணிநேரத்திற்கும் மேலாக நடனம் ஆடி, சபையோரை மெய்மறக்கச் செய்தனர்.
நிகழ்ச்சியின் தொடக்கமான 'நாட்ய வேதா'வில் நான்முகன் நான்கு வேதங்களின் சாராம்சத்தைத் தொகுத்து நாட்ய வேதமாக அளித்ததைச் சிறப்பாகக் காட்டினார்கள். தொடர்ந்த ஹம்ஸவத்னி புஷ்பாஞ்சலியும், அலாரிப்பும் சிறப்பு. அடுத்து இளம் மாணவிகள் 'மஹா கணபதிம்', 'போ சம்போ' ஆகியவற்றுக்கு அற்புதமாக ஆடினர். 'க்ருஷ்ண லீலா' நாட்டிய நாடகம் நிகழ்ச்சியின் மகுடமாக அமைந்தது. 'கிருஷ்ணா நீ பேகனே' பாடலுக்கு மண்ணை உண்ட கண்ணன் வாயில் உலகத்தைக் காட்டுவது, குறும்பு கிருஷ்ணனை உறங்க வைக்கப் பாடுபடுவது என காயத்ரி சிறப்பான மாறுபட்ட முகபாவங்களில் அபிநயித்த விதம் அருமை. சின்னக் கண்ணனாக ஆடி, ஓடி அழகாக அபிநயித்தது, காயத்ரியின் 3 வயது மகள் கீர்த்தி.
அடுத்ததாக, நவநீத கிருஷ்ணனின் குறும்பு விளையாட்டில் பால், வெண்ணையை தாவிக் குதித்து எடுத்து, நண்பர்களுடன் பகிர்ந்து உண்ணும் நிகழ்ச்சியை இனிமையான வயலினிசைக்குச் சிறுமிகள் ஆடியது ரசிக்கத் தக்கதாக இருந்தது. 'கண்ணா நீ வா', 'தீராத விளையாட்டுப் பிள்ளை', 'கோவர்த்தன கிரிதர பாலா', காளிங்க நர்த்தனத்திற்கு 'ஸ்வாகதம் கிருஷ்ணா'விலிருந்து ஒரு பகுதி என்று எதைச் சொல்வது எதை விடுவது என்றே தெரியவில்லை. எல்லாம் அற்புதம். பார்த்தசாரதியாக காயத்ரி வந்து கீதோபதேசம் செய்து விஸ்வரூபம் காட்டியது மெய்சிலிர்க்கச் செய்தது.
நாட்டிய நாடகத்தின் இறுதிக்கட்டமாக டாக்டர் பாலமுரளி கிருஷ்ணாவின் கதனகுதூகலத் தில்லானா தாள விரைவோடும், கலை மேன்மையுடனும் இருந்தது. திரு. சி.வி. சுப்ரமணியன் இசையமைத்து வாசித்த வயலினிசையில் பாலகிருஷ்ணனிலிருந்து தொடங்கி எல்லாவித கிருஷ்ண ரூபங்களும் ஒரே சமயத்தில் மேடையில் தோன்றியது, கண்ணைக் கவர்ந்த இறுதிக்காட்சியாக அமைந்தது.
இவ்வருடாந்திர விழாவின் சிறப்பம்சம் குரு திருமதி. பத்மினி ராதாகிருஷ்ணன் மும்பையிலிருந்து வந்து இனிமையாகப் பாட்டுக்களைப் பாடியது ஆகும். இவர் மும்பை காட்கோபர் சௌந்தர்ய நாட்டிய கலாலயாவின் நிர்வாக இயக்குநரும், நடன அமைப்பாளரும் ஆவார்.
பக்கவாத்யமாக திரு சி.வி. சுப்ரமண்யன் வயலின், சந்தோஷ் சந்துரு மிருதங்கம் இரண்டுமே நிகழ்ச்சிக்கு பக்க பலமாக இருந்தன. ஆடை, அலங்காரம், அரங்க வடிவமைப்பு, பாடல் தேர்வு என அனைத்துமே சிறப்பு. நிகழ்ச்சியைச் சிறப்பாக வடிவமைத்திருந்த திருமதி காயத்ரி இந்தியாவில் மட்டுமல்லாது, வெளிநாடுகளிலும் பல்வேறு நிகழ்ச்சிகளைத் தந்துள்ளார். அவர் கடந்த ஆறு ஆண்டுகளாக அட்லாண்டா, மரியட்டாவில் நடன வகுப்புகளை நடத்தி வருகிறார். சமீபத்தில் ஆகஸ்ட் 15, 2009 அன்று IACA அமைப்பினர் 'ஃபெஸ்டிவல் ஆஃப் இந்தியா' என்ற நிகழ்ச்சியை நடத்தினர். இதற்காக காயத்ரி, 'ஸ்வாகதம் சுப ஸ்வாகதம்' என்ற பாடலுக்குச் சிறப்பாக நடன அமைப்பு செய்திருந்தார். இவரது மாணவிகள் இந்திய தேசியக் கொடியின் நிறங்களில் ஆடை, அலங்காரம் செய்து கொண்டு மிக அழகாக ஆடினார்கள். இந்தப் பாடல் பண்டிட் ரவிசங்கர் ஏற்கனவே இசை அமைத்தது. இதனை மேலும் மெருகூட்டி திரு சி.வி. சுப்ரமண்யன் இசை அமைத்திருக்கிறார்.
மேலும் விவரங்களுக்கு: www.soundaryanatyalaya.com
தகவல்: செய்திக்குறிப்பிலிருந்து |