ஜூலை 11, 2009 அன்று வாஷிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தின் முத்தமிழ் விழா நடைபெற்றது. FeTNA விழாவில் பங்கேற்ற பல கலைஞர்கள் இதில் பங்கேற்றனர். 'கவிதையும் சமூகமும்' என்ற தலைப்பில் கவிஞர் எழுத்தாளர் ஜெயபாஸ்கரன் மிகச் சுவையாகப் பேசினார். தமிழ்க் கவிதைகளில் அதிகப் பரிச்சயம் இல்லாதோருக்கும் கவிதைகள் மேல் நாட்டத்தை ஏற்படுத்துவதாக இருந்தது அவரது பேச்சு.
மாஸ்டர் ஜோதி கண்ணன் வழங்கிய தமிழர்களின் பாரம்பரியக் கலையான சிலம்பாட்ட நிகழ்ச்சி ஒரு நல்ல விருந்து. விழாவுக்கு வந்த கலைஞர்களில் நடிகை கனிகாவும் அடக்கம். நிகழ்ச்சிக்குச் சிறப்பு விருந்தினராக வந்திருந்த பட்டிமன்றப் பேச்சாளர் பர்வீன் சுல்தானா ஐந்து நிமிடங்கள் பேசினாலும் அரங்கத்தைச் சிந்திக்க வைத்தார். தமிழை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்வதைப் பற்றி அனைவரையும் சிந்திக்கத் தூண்டியது அவர் பேச்சு.
நிகழ்ச்சிக்கு மகுடம் வைத்தாற்போல் அமைந்தது முனைவர் மயில்சாமி அண்ணாதுரை அவர்களின் பேச்சு. சமீபத்தில் இந்தியாவிலிருந்து நிலவுக்கு விண்கலத்தைச் செலுத்தும் பணியில் முக்கியப் பங்கு வகித்த அண்ணாதுரை, மாணவர்களின் கல்வி பற்றி, குறிப்பாக தமிழ்க்கல்வி பற்றிப் பேசியது சிந்திக்க மட்டுமின்றி, தமிழ்மொழி மேல் மரியாதை ஏற்படுத்துவதாகவும் இருந்தது.
நிகழ்ச்சியின் இறுதியாகப் பேசினாலும் காத்திருந்த மக்களுக்கு குறைவின்றி நகைச்சுவை விருந்து படைத்தார் விஜய் டி.வி, நீயா, நானா நிகழ்ச்சி புகழ் கோபிநாத்.
ஆவன்னா, மேரிலாண்ட் |